SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

2019-01-24@ 00:16:35

நேப்பியர்: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் பகல்/இரவு ஆட்டமாக நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. கப்தில், கோலின் மன்றோ இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 5 ரன், மன்றோ 8 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 18 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு முனையில் உறுதியுடன் போராட, ராஸ் டெய்லர் 24 ரன், லாதம் 11 ரன் எடுத்து சாஹல் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த நிகோல்ஸ் 12 ரன் எடுத்து கேதார் பந்துவீச்சில் குல்தீப் வசம் பிடிபட்டார். பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்த கேன் வில்லியம்சன் 64 ரன் எடுத்து (81 பந்து, 7 பவுண்டரி) குல்தீப் சுழலில் விஜய் ஷங்கரிடம் பிடிபட்டார். பிரேஸ்வெல் 7 ரன் எடுத்து கிளீன் போல்டாக, அடுத்து வந்த பெர்குசன் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினார். டிரென்ட் போல்ட் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 38 ஓவரிலேயே 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிம் சவுத்தீ 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசி 4 விக்கெட்டையும் குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தினார். ஷமி 3, சாஹல் 2, கேதார் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், ரோகித் இருவரும் துரத்தலை தொடங்கினர். இந்தியா 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன் எடுத்திருந்தபோது மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், ரோகித் 11 ரன் எடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் கப்தில் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். இந்தியா 10.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்த நிலையில், ஒரு முனையில் சூரிய வெளிச்சம் பேட்ஸ்மேன்களின் கண்களில் நேரடியாக விழுந்து பந்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சிறிது நேர தாமதத்துக்கு பிறகு ஆட்டம் தொடங்கியபோது, இந்தியா 49 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. தவான் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. தவான் அரை சதம் அடித்து அசத்தினார். கோஹ்லி 45 ரன் எடுத்து (59 பந்து, 3 பவுண்டரி) பெர்குசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் லாதம் வசம் பிடிபட்டார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது (டி/எல் விதி). தவான் 75 ரன் (103 பந்து, 6 பவுண்டரி), ராயுடு 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. இன்னிங்சில் 6 ஓவரில் 2 மெய்டன் உட்பட 19 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்த இந்திய வேகம் ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுயி ஸ்டேடியத்தில் 26ம் தேதி நடைபெறுகிறது.

கடைசி 2 போட்டியில் கோஹ்லிக்கு ஓய்வு
நியூசிலாந்துடன் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி 2 போட்டிகளில் (4வது, 5வது) இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் ஷர்மா கேப்டனாக செயல்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. நியூசிலாந்துடனான டி20 தொடரிலும் (3 போட்டி) அவர் விளையாட மாட்டார். தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் கோஹ்லி சோர்வடைவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற உள்ள தொடர்களில் அவர் இடம் பெறுவார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

 • thaaymoli_thinam12

  உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

 • BeijingPalacelight

  வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

 • mumbai_vivasayigal11

  மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்