SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூனியர் மந்திரிக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லைனு தம்பியானவர் புலம்பியதை சொல்கிறார் wikiயானந்தா

2019-01-23@ 00:27:32

‘‘இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...’’ என்று பார்க்கில் உட்கார்ந்து இருந்த விக்கியானந்தாவை கலாய்த்தார் பீட்டர் மாமா.

‘‘பூ கட்சி தலைவர் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல... நடிகரின் அறிக்கை எங்களுக்கு பதில் அடி இல்ல. பதில்தான்னு சொல்லி தொண்டர்களை தேற்றி இருக்கிறார்... இருந்தாலும் திருப்பூரில் அக்கட்சியின் ரசிகர்கள் சேர்ந்த பிறகுதான் அறிக்கை வந்து இருக்கு... திடீர்னு இந்த அறிக்கை ஏன் வரணும்னு எனக்கு தெரியல என்று வெள்ளந்தியாக சொல்லி இருக்கிறார்... திருப்பூர் எஃபெக்ட் என்று ெதரிந்து இருந்தும் அதுதான் காரணமானு புரியலனு சொல்லி அவருக்கு தெரியாமலேயே உண்மையை போட்டு உடைத்து இருக்காரு பூ கட்சி தலைவரான இசையானவர்... இதைதானே சொன்ன உண்மையை ஒப்புக் கொண்ட நேர்மை ரொம்ப பிடிச்சுருக்குனு...’’ என்று கூறினார் விக்கியானந்தா.
‘‘ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்னும் போராட்டத்தை தீவிரமாக்கப்போறாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி போல... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக் பற்றி கேட்டால் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்னு சொல்லி போராட்டத்தை கொச்சைப்படுத்தினதா மைக் அமைச்சரு மேலே கோபத்துல இருக்காங்களாம்... மூத்த அமைச்சர்கள் எல்லோரும் அமைதி காக்க இவருக்கு மட்டும் ஏன் மைக்க நீட்டினா மூக்கு வேர்க்குதுனு தெரியல என்று சக அமைச்சர்கள் புலம்பி தள்ளறாங்களாம்... ஆனால் மைக் அமைச்சரின் பேச்சு போராட்டக்காரர்களை இன்னும் கடுப்பாக்கிடுச்சாம்... அதனால போராட்டத்ைத தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்காங்க.. இன்னைக்கு பல பள்ளிகளில் திருப்புத் தேர்வு நடக்குதாம்... ஆனால் ஆசிரியர்கள் வருகை ரொம்பவே குறைவாக இருந்ததாம்... அதனால சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருக்கும் ஆசிரியர்களை வைத்து ஒப்பேற்றி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி மாவட்டத்துல ஆசிரியர்கள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வு புகுந்துடுச்சா என்னா...’’ என்று அதிர்ச்சியோடு கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ம். என் காதுக்கு வந்த விஷயத்தை அப்டியே சொல்றேன். மாங்கனி மாவட்டத்துல அரசு உதவி பெறும் பள்ளியில இருக்கிற வாத்தியாருங்கள பணிநிரவல் பண்ணாங்க. அதன்படி, ஆன்மீக குருவோட பெயரில் இயங்கும் பள்ளியில் இருந்த சிலரை, வேறவேற ஸ்கூலுக்கு மாத்துனாங்க. எல்ேலாரும் புதுப்புது இடத்துக்கு போன நிலையில, அறிவியல் பட்டதாரி வாத்தியாரு ஒருத்தரு மட்டும் பரிதாபத்துக்குள்ளாகியிருக்காரு. ரெண்டு நாளைக்கு முன்னாடி 4 ரோட்டுக்கிட்ட இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல சேர ஆர்டர் வாங்கிட்டு போயிருக்காரு. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்ச பள்ளிக்கூட உயர் அதிகாரி ஒருத்தரு, நீங்க இந்த ஸ்கூல்ல சேரமுடியாது, ஆர்டர தப்பா குடுத்துட்டாங்கனு திருப்பி அனுப்பிச்சாட்டாராம்.

வந்த வாத்தியாரோட கடவுளும், அவரு ஏற்கனவே வேல செஞ்ச பள்ளிக்கூட பேரும்தான் இதுக்கு காரணம்னு பேசிக்கிறாங்க. இந்த விவகாரம் எப்படியோ சிஇஓ காதுக்கு போனதால, இப்போ மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்திகிட்டு இருக்காரு. எல்லாரும் சமம்னு சொல்லிக்குடுக்குற பள்ளிக்கூடத்துலயே இந்தமாதிரி வேறுபாடு பாக்கலாமான்னு புலம்பல் சத்தம் கேட்குது...’’ என்று சொல்லி வருத்தப்பட்டார் விக்கியானந்தா.

‘‘தகுதி இழப்பு செய்யப்பட்ட தொகுதியில எப்போது தேர்தல் நடந்தாலும் பதவியை இழந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியை பொறுத்தவரையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து அதில் ஒருவரை தான் வேட்பாளராக அறிவித்தனர். அதில் 18 பேர் குக்கரிடம் சரணடைந்ததால், அவர்களுக்கு அடுத்ததாக விருப்ப மனு அளித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என்று இலைக்கட்சி யோசிக்கிறது... ஆனால் அவர் கரன்சியை தண்ணீர் போல இறைப்பவராக, மக்கள் செல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும் என்று யோசிக்கிறாங்க... ஆனால் ஆர்கேநகர்காரர் எப்போது ேதர்தல் வந்தாலும் நீங்கள் தான் வேட்பாளர் ேதர்தல் செலவு குறித்து கவலைப்படாதீங்கனு சொன்னாராம்... அதை கேட்ட தகுதி இழந்த ஒருத்தர் இப்போது எங்களிடம் இருந்ததில் பாதியை பொதுக்கூட்டம் என்ற பெயரில் பிடிங்கிட்டாரு... இதுல தேர்தல் சமயத்துல எங்களுக்கு பணத்தை தரப்போறாரா... யாருக்கு காதுல பூ சுத்தறாருனு மனசுக்குள் வெதும்பி போய் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல ஆயிரம் பேரிடம் கரை வேட்டிகள் கோடிக்கணக்கில் கறந்து இருக்காங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நான் நேற்று ரயிலில் வந்தபோது ஒருத்தர் உதவி இன்ஜினியர் பணிக்கு 5 லட்சம் கொடுத்தாராம்... ஒரு வருஷமாகியும் வேலை வரலையாம்... ஒழுங்கான தகவலும் இல்லையாம்... அப்படியே சேப்பக்கத்தில் இறங்கி அலுவலகத்துக்கு போனவர் ஸ்டிரைக் காரணமாக அப்படியே திரும்பி கோவைக்கு போயிட்டார். அந்த அலுவலகத்தில் மட்டும் பணம் கேட்டும், பதவி கேட்டும் 100க்கும் மேற்பட்டோர் சுற்றி வர்றாங்க... அதுமட்டுமில்ல பல்கலைக்கழகம் உள்பட பல துறைகளில் பணிகளை வாங்கித் தருவதாக சொல்லிட்டு பணம் வாங்கிய கரைவேட்டிகள் இன்று போய் நாளை வா என்று சொல்லி பணம் கொடுத்தவர்கள் திருப்பி அனுப்பி கொண்டே இருக்காம்... பணம் கொடுத்தவர்களுக்கோ, எலக்‌ஷன் வர்றதுக்குள்ள வேலை வாங்கணும் இல்ல பணம் வாங்கி பெட்டி கடையாவது வைத்துக் கொள்ளலாம்னு எண்ணம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலையும், பூவும் ஒட்டவே ஒட்டாது போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அதெல்லாம் கிடையாது.. இன்று நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கூட காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டாரே அந்த மந்திரி ஒரு கொள்கை புத்தகத்தை வெளியிடுகிறார்... அதனால தம்பி பேச்சை யாரும் கேட்கற மாதிரி இல்ல என்பதை கடந்த ஒரு வாரத்தில் அவர் பேசியதில் இருந்து தெரியுது... ஜூனியர் மந்திரிக்கு இருக்கிற மரியாதை கூட எனக்கு இல்லையேன்னு புலம்பியதாக தம்பியின் அடிபொடிகள் சொல்லி வருத்தப்பட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்