SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்: குடுகுடுப்பையை சுழற்றி இன்ஸ்பெக்டரை அதிரவைத்த ஏட்டு

2019-01-20@ 03:24:55

மாங்கனி மாவட்ட போலீசில் ஏட்டு ஒருவர் குடுகுடுப்பை அடித்து இன்ஸ்பெக்டரை அதிரவைத்தது  தான் நடப்புவாரத்திற்கான ஹாட் டாபிக். பொங்கலையொட்டி போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர் சிட்டி போலீசார். ஆயுதப்படை மைதானத்தில் வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் என்று ஏராளமான போட்டிகள் நடந்தது. கமிஷனர் தலைமையில் நடந்த பங்ஷனில் ஆல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களும் ஆஜராகி இருந்தார்கள். அப்போது மைதானத்தில் அதிரடியாக நுழைந்தார் ஆஜானுபாகுவான குடுகுடுப்பைக்காரர் ஒருவர். நேரடியாக பள்ளப்பட்டி இன்ஸ்ெபக்டரின் அருகில் சென்றவர், ‘‘நீங்க நினைக்கிறது எல்லாம் சீக்கிரம் நடக்கும் சாமியோவ். புரமோஷனோடு செல்வசெழிப்பும் இன்னும் கொஞ்சநாளில் வந்திடும் சாமியோவ்’’ என்று கணீர் குரலில் பேசி, கையில் இருந்த குடுகுடுப்பையை சுழற்றினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், “நம்ம மனசில நினைச்சுகிட்டு இருக்கிறத, அப்படியே சொல்றாரு குடுகுடுப்பை காரரு’’ என்று பூரிச்சு போயிட்டாராம். அதோட பாக்கெட்டில் இருந்து 50 ரூபாயை எடுத்து குடுகுடுப்பைக் காரரின் கோட்டுக்குள் போட்டாராம். அப்போது அந்த குடுகுடுப்பைக்காரர் ‘அய்யா என்னை தெரியலையா? நான் தான்யா ஏட்டு’’ என்று, ஒட்டியிருந்த முரட்டு மீசையை எடுத்து காட்டினாராம் ெசல்வமான ஏட்டு. ஏட்டா இருந்தாலும் குடுகுடுப்பையை சுழற்றி, இன்ஸ்சையே அதிரவச்சிட்டியேப்பா என்று மற்ற போலீசார் கொஞ்ச நேரம் கிறங்கிப்போயிட்டாங்களாம்.

அஜால்... குஜாலுக்கு பச்சைக்கொடி...
கோவை சூலூர் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றங்களின் தலைநகர் என அழைக்கப்படும் சூலூரில் தற்போது ‘பலான’ தொழிலும் கொடி கட்டி பறக்க துவங்கியுள்ளது. கோவை மாநகருக்குள் கால் பதித்தால் போலீஸ் லபக்.. லபக்...கென பிடித்து விடுகிறார்கள், அதனால், புறநகர் பகுதியை பார்த்து செலக்ட் செஞ்சிருக்கோம்... அடிக்கடி வந்து, போங்க... என புரோக்கர்கள் தகவல் தெரிவிக்க, ராவத்தூர் பிரிவு, சிந்தாமணிப்புதூர் பைபாஸ் சாலைகளில் உள்ள குடில்கள் நிரம்பி விடுகிறது. ரெகுலர் கஸ்டமர்கள் படையெடுப்பு அதிகமாகி விட்டது.

இக்கும்பலை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு காவல் அதிகாரி, அடிபணிந்து ஆசீர்வாதம் வழங்குகிறார். ‘’ஐயா, பச்சைக்கொடி காட்டிட்டாரு... தொழிலை ஜோரா நடத்து...’’ என தினமும் அஜால், குஜால் தொழில் களை கட்டுது. இக்கும்பல் மாதம்தோறும் ஐயாவுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதாக தகவல்.  ஐயா, பெரிய லெவல்ல பார்க்கிறாரு... நாம சின்ன லெவல்ல பார்ப்போம்... எனக்கூறி இக்காவல்நிலைய கீழ்மட்ட நபர்கள் அவ்வப்போது வந்து, செல்கிறார்கள். பாக்கெட் நிரம்பினாலும், பல நேரம், மப்பும், மந்தாரமுமா இருக்காங்க...!

மொபைல் சரக்கு விற்பனையில் கல்லா கட்ட புது கூட்டணி
அரக்கோணம் நகரில் கார், ஸ்கூட்டர், பைக் என வாகனங்கள் மூலம் டாஸ்மாக் சரக்கு குடிமகன்களை தேடிச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஆளுங்கட்சியை சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே தொழிலாக செய்து வருகிறார்களாம். அரக்கோணம் நகரில் ஒரே ஒரு கடை இருப்பதால் குடிமகன்களுக்கும் தங்களை தேடி சரக்குகள் வருவதில் மகிழ்ச்சிதானாம். சரக்கு விற்பனைக்காக அவர்களுக்குள் எல்லையையும் பிரித்துக் கொள்கிறார்களாம். இவர்கள் தாங்கள் வாங்கி வரும் குவார்ட்டர் மது பாட்டில் மீது 25 வரை அதிகம் வைத்து விற்பனை செய்கிறார்களாம். இதை கண்டு கொள்ள வேண்டிய கலால் போலீசாரும், டவுன் போலீசாரும் கண்டு கொள்வதில்லையாம். இதற்காக அவர்களுக்கு மாதந்தோறும் கப்பம் கட்டப்படுகிறதாம்.

அதேபோல் மொபைல் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் அரக்கோணம் டவுன், நகருக்கு வெளியே உள்ள கடைகளில் ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சென்று மொத்தமாக சரக்குகளை அள்ளி வந்து விடுகிறார்களாம். போலீசாருடன் கூட்டு சேர்ந்துள்ளதால், ஆளுங்கட்சியினர் இந்த தொழிலில் யாரும் குறுக்கிட செய்வதில்லையாம். இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தால், ‘ஆமாம், ஊர்ல ஒரு கடை மட்டும்தான் இருக்கு. அரசாங்கத்துக்கு நல்லது செய்யத்தான் அவங்க குடிமகன்களை தேடி வந்து விற்கிறாங்க. மொத்தத்துல அவங்க அரசாங்கத்துக்கும், குடிமகன்களுக்கும் நல்ல சேவை செய்யறாங்க’ என்று சொல்லி வாயடைக்கிறார்களாம். இதனால் போலீசில் புகார் கொடுக்க செல்லும் பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி செல்கிறார்களாம்.

பசையான பதவிக்கு குறி
பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்கள் மட்டும் பணியாற்றிய நிலையில் திடீரென கடந்த வாரம் சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பாளை உதவி கமிஷனர் பதவியின் எல்லைக்குள் பெருமாள்புரம், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. நெல்லை மாநகரத்தில் இந்த நான்கு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்தான் அதிகமான வருமானத்தை பார்க்க முடியும்.
பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பதவி காலியாக உள்ள நிலையில் இந்த பதவியை பிடிக்க நெல்லையில் முன்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி பதவி உயர்வில் பிற மாவட்டத்திற்கு சென்றவர்கள் தற்போது குறி வைத்துள்ளனர். சந்திப்பில் முன்பு பணியாற்றிய ஒருவர் உட்பட மூன்று டிஎஸ்பிக்கள் இந்த ‘ஏசி’ பதவிக்காக அரசியல்வாதிகள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பர். பசையான பதவி யோகம் யாருக்கு இருக்கிறதோ என்ற விவாதம் போலீசார் மத்தியிலும் ஒலிக்கிறது.

‘டிரங்க் அண்ட் டிரைவ்’ கேஸ்  மிரட்டலில் பாக்கெட் நிரம்புது
கோவை சுங்கம் பைபாஸ், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் கடை, பார் உள்ளது. இங்கு, இரவு 10 மணிக்கு கடையை மூடுவதற்கு முன் உக்கடம் ரோந்து போலீசார் ஜீப்புடன் வந்து ஆஜராகி விடுவது வாடிக்கையாகி விட்டது. ரோட்டோர கடைகளுக்கு சென்று மாமூல் வாங்குவதுடன், வாகனத்தில் வரும் ‘’குடி’’மகன்களை மிரட்டி பணம் வாங்குவதும் வழக்கமாகி விட்டது. ‘’பார்’’களுக்கு வெளியே பைக், கார்களை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் நபர்களை கண்காணிக்கிறார்கள். மது குடித்துவிட்டு வெளியே வந்ததும் சில மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டு, ஊது... ஊது... என ஊத வைத்து, டிரங்க் அண்ட் டிரைவ் கேஸ் போடுவேன்... மரியாதையா பணத்தை எடு... என மிரட்டியே பணம் வசூலித்து விடுகின்றனர்.

ஒரு ஆய்வாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், நான்கைந்து ஏட்டு என இவர்களது பாக்கெட் அன்றாடம் நிறைகிறது. வாகனத்தில் சென்று மது குடித்தால் போலீசாருக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது என சில ‘’குடி’’மகன்கள் தந்திரமாக, ஆட்டோவில் வந்து மது குடித்துவிட்டு ெசல்கின்றனர். இன்னும் சிலர் நடந்தே சென்று மது குடித்து விட்டு தள்ளாடி செல்கிறார்கள். இவர்களையும் ரோந்து போலீசார் விடுவதில்லை. ‘பாக்கெட்டில்’ கைவிட்டு, துளாவி இருப்பதை எடுத்துவிட்டுதான் அனுப்புகிறார்கள். ‘‘படுபாவிங்க... கொலைகாரங்கள, கொள்ளைக்காரங்கள பிடிக்காம... எங்கள வந்து துரத்தி புடிக்கிறாங்க...’’ என ‘’குடி’’மகன்கள் புலம்புவதை அன்றாடம் பார்க்க முடிகிறது.

கன்ட்ரோல் மாறினா உள்ளதும் போகும்சிறை காக்கிகள் பாடம்
சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் 13 கிளைச்சிறைகள் இருக்காம். இந்த சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், குறிப்பிட்ட தொகையை கப்பம் கட்ட வேண்டுமாம். இதை தகுதிக்கு ஏற்ப போலீசார் பிரித்துக் கொள்வார்களாம். இதில் ஓசூர் கிளைச்சிறையில் மட்டும் சூப்பிரென்ட், மொத்த அமவுண்டையும் லபக்கிக் கொண்டு போய்விடுகிறாராம். அவர் ஏப்பம் விடுவதை சகிக்க முடியாத காக்கிகள், விஷயத்தை மத்திய சிறை உயரதிகாரியின் காதில் போட்டு விட்டார்களாம். அதிரடியாக சிறைக்கு சென்று, ஆய்வு நடத்திய உயரதிகாரி, டூட்டி நேரத்தை  3 மணி நேரமாக பிரித்து விட்டாராம். இதனால் சூப்பிரெண்டு  ஆட்டையை போடுவது கட்டாகி விட்டதாம்.

அதே ேநரத்தில் புகார் கொடுத்தவர்களுக்கும் சுத்தமாக எதுவும் தேறவில்லையாம். ஓசூர் சிறையில் நடந்த அதிரடி, இதர கிளைச்சிறைகளில் பீதியை கிளப்பி இருக்காம். இதனால் அங்கு பணியாற்றும் காக்கிகள் எல்லாம் திரண்டு, எதுவா இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி தீத்துக்குவோம். உயரதிகாரியின் கவனத்திற்கு ெகாண்டு சென்றால் ெமாத்த கன்ட்ரோலும் கைமாறி விடும். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். இதை எல்லாரும் மைன்ட்ல வச்சு நடக்கணும் என்று உஷார்படுத்தி இருக்காங்களாம்.

இன்ஸ்பெக்டர் பதவியா...? அய்யய்யோ வேணாங்க
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நகர் போக்குவரத்து பிரிவு, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு என இரு அலுவலகங்கள் உள்ளன. இதற்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். நகர் பிரிவில் 20 போலீசார் இருக்கின்றனர். டவுன் டிராபிக், விஐபி பந்தோபஸ்து உள்ளிட்டவைகளை கண்காணிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினர் விளாச்சேரி மொட்டமலையில் துவங்கி, விருதுநகர் மாவட்ட எல்லைப்பகுதியான ஆவல்சூரன்பட்டி வரையிலும் சாலை கண்காணிப்பில் இருக்கின்றனர்.  இப்பிரிவில் 25 போலீசார் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக திருமங்கலம் டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பணிக்கு லோக்கலில் இருந்து யார் வந்தாலும், 5 மாதங்களைக் கடக்கும் முன்பே உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடுமுறையில் போய் விடுகின்றனர்.

அல்லது ஏதேனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வேறு மாவட்டத்திற்கு பணிமாறுதலில் போய் விடுகின்றனர். இப்படி தொடர்ந்து 6 இன்ஸ்பெக்டர்கள் வரை அடுத்தடுத்து மாறி விட்டனர். சமீபத்தில் சென்னையிலிருந்து வந்த ஒரு இன்ஸ்பெக்டரும், திரும்ப சென்னைக்கே மாறுதலாகி சென்று விட்டார். தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக இன்ஸ்பெக்டர் இல்லாமலேயே இப்பிரிவு இயங்குகிறது.  ஆனால், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப்பிரிவிற்கு வருகிற இன்ஸ்பெக்டர்களோ 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றிச் செல்கின்றனர்.

ஒரு சிலர் பதவி உயர்வும் பெற்று செல்கின்றனர். இதனால், ‘ராசியில்லாத பதவி’ என்று திருமங்கலம் டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதவியை, எந்த இன்ஸ்பெக்டரும் விரும்புவதில்லை என்பதோடு, ‘ஒண்ணு ஒடம்பு முடியாமல் போகும். இல்லேன்னா பணியில் குற்றச்சாட்டு வந்து பங்கமாக்கிடும்’ என்று இங்கு வருவதற்கு ஆசைப்படுகிற இன்ஸ்பெக்டர்களிடம், போலீசாரே போட்டு கொடுக்கின்றனராம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்