SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

wiki யானந்தா

2019-01-19@ 00:45:03

‘‘பாஜ-அதிமுக கூட்டணி வருமா, வராதா..’’ என்று காரை ஓட்டியபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கூட்டணியை பற்றி தம்பிதுரை சீண்டுவதை பாரதிய ஜனதாவால் தாங்க முடியவில்லை. குறிப்பாக, பாஜ தமிழகத்தில் காலூன்றவே முடியாது. பாஜவை எல்லாம் நாங்கள் சுமந்துகொண்டு திரிய முடியாது என தம்பிதுரை பேசியதை பெரும் அவமதிப்பாக கருதுகிறார்கள். போதாக்குறைக்கு, ‘கூட்டணிக்கு பாஜதான் ஆசைப்படுகிறது. நாங்கள் ஒன்றும் ஆசைப்படவில்லையே..’ என்று அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் சூடான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வேறு வழியின்றி சூடாக இருப்பதை போல கருத்தை வெளியிட வேண்டி வந்தது..’’‘‘அப்படி என்னதான் சொன்னார்..’’‘‘தம்பிதுரை தொடர்ந்து எங்களை விமர்சிக்கிறார். அங்கு ஜெயலலிதா இல்லாததை இது காட்டுகிறது.  பா.ஜனதா கூட்டணியில் எந்த கட்சிகள் இருப்பது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் எனறு கூறியிருக்கிறார்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அடேங்கப்பா.. எல்லா கட்சிகளும் எங்களை கூட்டணியில் இணைத்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுவது மாதிரியில்ல பேசியிருக்கிறார்.. அதிருக்கட்டும் குமரி மாவட்ட வில்லங்கம் ஏதுமிருக்கா..’’‘‘கல்குளம் தாலுகாவை பிரித்து, செருப்பாலூரை தலைமையிடமாக கொண்டு, புதிதாக திருவட்டாறு தாலுகா அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார். பல ஆண்டுகளாக இருந்து வந்த கோரிக்கை என்பதால் அதனை உடனே அரசு நிறைவேற்றும் என்று மக்களும், வருவாய்துறையினரும் எதிர்பார்த்த போதும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மாதங்கள் நான்கு ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கோப்புகள் தமிழக வருவாய்துறை அமைச்சரின் கையெழுத்திற்காக காத்திருப்பதாகவும், எப்போது கையெழுத்தாகும் என்று தெரியாமல் வருவாய்துறையினரும் கையை பிசைந்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு எம்.எல்.ஏ கூட அதிமுகவிற்கு இல்லை. இந்த மாவட்ட மக்களுக்கு நாங்கள் எதற்கு திட்டங்களை கொண்டுவர வேண்டும் என அமைச்சர்கள் அவ்வப்போது கூறி வருவதுடன் அந்த மனப்போக்குதான் தொடர்ந்து இருந்து வருவது, அரசாணை வெளியாக தாமதத்திற்கு காரணம் என்கிறது கோட்டை வட்டாரங்கள். அடுத்த மாதம் பொதுத்தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே புதிய தாலுகா நடைமுறைக்கு வருமா இல்லை மீண்டும் போராட்டம் தான் நடத்த வேண்டுமா என்று குமரி மாவட்ட வருவாய்துறையினர் புலம்ப தொடங்கியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆவின் மேட்டர் ஏதோ இருப்பதாக சொன்னியே..’’‘‘தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1000, ரேஷன் கார்டுகள் அனைத்திற்கும் வழங்கியது. இதை பார்த்து ஆவின் நிறுவனமும் தனது பங்காக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெய்க்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்தது. அதாவது 15 கிலோ நெய்க்கு 300, 5 லிட்டர் நெய்க்கு 100, ஒரு லிட்டர் நெய்க்கு 20, 500 மிலி நெய்க்கு 10 என அறிவித்ததாம். ஆவின் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி அறிவித்ததில் தப்பில்லை. 15ம் தேதி பொங்கல் பண்டிகை என்ற நிலையில் 14ம் ேததி மாலைதான் இந்த உத்தரவு பல ஆவின் நிறுவனங்களுக்கு கிடைத்ததாம். ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அனைத்து ஆவின் நிறுவனங்களுக்கும் டார்கெட் நிர்ணயித்து நெய் விற்பனை செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டார்களாம். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் மட்டும் 30 லட்சம் ரூபாய்க்கு ஆவின் நெய் விற்பனை நடந்ததாம். கடைசி நேரத்தில் உத்தரவு போட்டதால் அந்த பயன் யாருக்கும் போய்ச் சேரவில்லையாம். ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் மட்டும்தான் இந்த தள்ளுபடி கிடைத்ததாம். மற்றபடி அனைத்து ஆவின் முகவர்களிடமும் நெய்க்கு எந்தத் தள்ளுபடியும் கிடைக்கவில்லையாம். கண் துடைப்பாக கடைசி நேரத்தில் ஒரு உத்தரவை ஆவின் நிறுவனம் போட்டதாம். ஆனால் அதனுடைய பலன் யாருக்கும் கிடைக்கவில்லை என ஆவின் முகவர்களே புகார் வாசிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’‘‘நாகர்கோவில் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் மிகவும் வேதனையுடன் இருக்கிறார்கள். போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆளுங்கட்சி தொழிலாளர்களை வேண்டுமென்றே பழி வாங்கி வருகிறார்கள். அதிகளவு ஆப்சென்ட், விடுமுறை கட் உள்ளிட்ட நடவடிக்கையால் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம். தொழிற்சங்க பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் இது குறித்து போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் பேசுவது கிடையாது. இதனால் ஆளுங்கட்சி சங்கத்தில் உறுப்பினராக இருந்து என்ன பயன்? என்ற விரக்தியில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதனால் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லையாம். அண்ணா தொழிற்சங்க பேரவையின் கன்வீனரான ஜக்கையன் எம்.எல்.ஏ. இந்த விழாவுக்கு வந்து உள்ளார். கூட்டம் இல்லாமல் காலியாக கிடந்த நாற்காலியை பார்த்து அவர் டென்ஷன் ஆகி விடக்கூடாது என்பதற்காக, அவர் மேடையில் பேசும் போது காலி நாற்காலிகள் தெரியாதபடி, நிர்வாகிகள் சுற்றி நின்று கொண்டார்களாம். தொழிலாளர்களுக்கு பிரச்னை என்றால், சங்க நிர்வாகிகள் வருவதில்லை. பிறகு எப்படி நாங்கள் நிகழ்ச்சிக்கு வருவோம் என்று அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் கூறி உள்ளார்களாம். எனவே விரைவில் போக்குவரத்து கழக அதிகாரிகள் மாறுகிறார்களா அல்லது போக்குவரத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மாறுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்