SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயமுறுத்தும் குழப்பம்

2019-01-17@ 01:50:27

கர்நாடகா மாநில அரசியலில் இப்போது துவங்கியுள்ள தலைவலி அத்தனை எளிதில் தீராது போல்தான் தெரிகிறது. 5 வருட ஆட்சியை குமாரசாமி நிறைவு செய்வது கடினம் தான். ஒரு பக்கம் கூட்டணியான காங்கிரஸ் தரப்பில்  குடைச்சல் என்றால், மறுபுறம் மயிரிழையில் ஆட்சியை பறிகொடுத்த பா.ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள். மத்தளம் போல் இருபக்கமும் அடிபட்டு, தவித்து வருகிறார் முதல்வர் குமாரசாமி. கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 2018 மே மாதம் 12ல் தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 222 இடங்களில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக 104  இடங்களை பிடித்தாலும், ஆட்சி அமைக்க கூடிய இடங்கள் கிடைக்கவில்லை. ஆதரவும் இல்லை. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து முதல்வர்  பதவி குமாரசாமிக்கு வழங்கப்பட்டது.வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற குமாரசாமி முதல்வர் பதவியில் அமர்ந்த போதே இந்த ஆட்சி நீடிக்க கூடியதா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா தன் பங்கிற்கு  ஆட்சியை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தார். மறுபுறம் பா.ஜனதா சார்பில் எடியூரப்பா.

அத்தனை பரீட்சைகளையும் தாண்டி முதல்வர் குமாரசாமி ஆட்சி நடத்தி வந்தார். இப்போது இக்கட்டான நிலை. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருசிலர் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தகவல் வந்தது. இடையே பா.ஜனதா  எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அரியானாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.  இப்போது பார்த்தால் முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம்  தெரிவித்துள்ளனர். இதன்மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகலால் இப்போதைக்கு குமாரசாமி அரசுக்கு ஆபத்தில்லை. இருந்தாலும்  அமைச்சர் பதவிக்காக உட்கட்சி குழப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை மாதங்கள் குமாரசாமி நிம்மதியாக ஆட்சி நடத்தப்போகிறார்  என்பதுதான் தெரியவில்லை. அதே சமயம் பா.ஜனதாவும் விடுவதாக இல்லை. மக்களவை தேர்தலுக்கு முன் எப்பாடுபட்டாவது கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் தற்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளது. அரசியல் குழப்பம்  இப்படியே நீடித்தால் மக்களவை தேர்தலுடன் கர்நாடக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்