SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகிழ்ச்சி பொங்கட்டும்

2019-01-15@ 00:19:35

தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்தது பொங்கல் திருநாள். தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மொரீசியஸ் என தமிழர்கள் பரவி வாழும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக அம்மாநில அரசு விடுமுறை அளித்துள்ளது.

அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை, இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அசாமில் போகாலி பிகு என்றும், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் மகர் சங்கராந்தி என்றும், ஆந்திராவில் போகி என்றும் கொண்டாடப்படுகிறது. கரும்பு, பொங்கல் என இனிப்புச்சுவையோடு பொங்கலை கொண்டாடும் தமிழக விவசாயிகளின் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கிறதா?

ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒருமுறை வேளாண் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்கிறது. கடந்த அக்டோபர் மாதம் வெளியான 2015 - 16ம் ஆண்டின் வேளாண் கணக்கெடுப்பு அறிக்கை, தமிழக விவசாயம் குறித்த பல அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2010-11ம் ஆண்டில் 81 லட்சத்து 18 ஆயிரமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2015-16ம் ஆண்டில் 79 லட்சத்து 38 ஆயிரமாக குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு அடுத்ததாக, விவசாயிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருப்பது தமிழகத்தில் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல அகில இந்திய அளவில் கடந்த 2011 - 12ம் ஆண்டில் 15.96 கோடி ஹெக்டேரிலிருந்த விவசாய நிலங்களின் பரப்பளவு, 2015 - 16ல் 15.71 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது. தமிழகத்தில் 64.88 லட்சம் ஹெக்டேரிலிருந்து 59.71 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் 1.53 சதவீதம் விவசாய நிலங்கள் குறைந்துள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 7.98 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஆண்டு ஒன்றுக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 400 ஹெக்டேர் விளைநிலங்களை ஐந்தாண்டுகளில் தமிழகம் இழந்துள்ளது.

மாநில அரசின் பருவ மற்றும் பயிர் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பரப்பளவில் தமிழகத்தில் தரிசாக விடப்பட்ட நிலங்களின் பரப்பளவு 2010-11ம் ஆண்டில் 25.95 லட்சம் ஹெக்டேர். 2014-15ம் ஆண்டில் அது 27.32 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பயிர் செய்யும் நிலங்கள் 21 சதவீதம் தரிசாக மாறியுள்ளது என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும் பெருமளவு நிலத்தடி நீர் கடந்த ஒரு ஆண்டில் மிகவும் கீழே சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை என்பது தான் இதற்கு காரணம். கோடை காலத்தில் விவசாயம், குடிநீர் பிரச்னையில் இம்மாவட்டங்களில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர எரிவாயுக் குழாய், மின்கோபுரங்கள், எட்டுவழிச்சாலை என இருக்கும் நிலங்களின் பரப்பளவு அரசால் பறிக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் மீறி தான் உலகிற்கு உணவு படைக்க அரசுடனும், அதிகார வர்க்கத்துடனும் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் நெஞ்சுறுதி மிக்க போராட்டம்தான், தமிழகத்தில் பட்டினிச் சாவுகளைத் தடுத்து வருகிறது. அறுவடை திருநாளைக் கொண்டாடும் உழவர் பெருமக்களின் வீடுகளில் பொங்கலோடு, மகிழ்ச்சியும் பொங்க இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்