SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதை மறைக்கவே ஐவர் கொலை : கூலிப்படை தலைவன் பரபரப்பு பேட்டி

2019-01-12@ 00:04:38

புதுடெல்லி: கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூலிப்படை தலைவன் ஷயான் டெல்லியில் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.  கொடநாடு ெகாள்ளை, ெகாலை தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டு, டெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தும், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியும் பங்களாவுக்குள் நுழைந்து அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டதும், கேரளாவை சேர்ந்த கூலிப்படை மூலம் திட்டத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் சேலம் அருகே கார் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளியான கோவையை சேர்ந்த சயன், பாலக்காடு அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயன் மற்றும் கேரளாவை சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுமார், 16 மாதங்களுக்குப் பிறகு, கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் திடீர் தகவல் கொண்ட ஆவணப்படத்தை நேற்று டெல்லி பிரஸ் கிளப்பில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் என்பது ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே திட்டம் தீட்டப்பட்டதாகும். இதுகுறித்து தற்போது கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் ஊழியர்களிடம் நேரிடியாக தொடர்பு கொண்டு விசாரித்தோம்.  

அவர்களும் இதனை உறுதி செய்யும் விதமாக சில ஆதாரம் அடங்கிய பதிலை எங்களிடம் தெரிவித்துள்ளனர். அவையனைத்தும் ஆவணப்படத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது எஸ்டேட்டில் இருந்த 28 சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
எஸ்டேட்டில் சுமார் 7 வருடமாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக இருந்தவரும் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து முதலில் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் இதுநாள் வரையில் கிடப்பில் போட்டுவிட்டனர். போலீஸ் எஸ்பி முரளி ரம்பாதான் இந்த வழக்கை விசாரித்தார். அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் அவரது விசாரணை நேர்மையாக நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும் ஜெயலலிதாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவத்தின் போது இரண்டு காவலாளிகளும் மது போதையில் இருந்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும். இவை அனைத்தும் எங்களது விசாரணையில் மேலும் வலுசேர்க்கும் விதமாக ஆதாரங்கள் அமைந்துள்ளது. மேலும் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவம் தொடர்பாக முழு ஆதாரங்கள் வெளியிடப்படும். வீடியோ ஆதாரங்களைத்தேடி, கைப்பற்றிய பிறகுதான் 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதனால் எடப்பாடி மீதும் நாங்கள் சந்தேகப்படுகிறோம். அதிமுகவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் கருதுகிறோம் என தெரிவித்தார்.

இந்த நிருபர்கள் சந்திப்பின் போது குற்றவாளிகளான ஷயான் மற்றும் மனோஜ் உடனிருந்தனர்.  வழக்கில் 2வது குற்றவாளியான ஷயான் நிருபர்களிடம் கூறியதாவது:  ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் என்னை நேரில் அணுகினார். இவர் எனக்கு 5 வருடங்களாக நெருங்கிய நண்பர்.

இந்த நிலையில் தான் கொடநாடு எஸ்டேட்டில் ரூ.2ஆயிரம் கோடி ரொக்கப்பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகவும், அவற்றை எடுத்து தற்போதைய முதல்வர் எடப்பாடியிடம் கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருப்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை.  மேலும், தமிழகத்திலிருந்து இதற்காக ஆள் கூட்டி வரக்கூடாது எனவும், கேரளாவில் இருந்து கொள்ளையர்களை அழைத்து வருமாறும் கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்.

இதையடுத்து தான் நான், கனகராஜ் உட்பட 15 பேர் கொண்ட கும்பல் கொடநாடு எஸ்டேட்டின் உள்ளே நுழைந்தோம். அப்போது 2 காவலாளிகள் அங்கே இருந்தனர். அதில் காவலாளி ஓம்பகதூர் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தார். இதையடுத்து அவர் கூச்சல் போட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை கட்டிப்போட்டுவிட்டு, எஸ்டேட்டின் உள்ளே சென்றோம். அதில், காவலாளி பகதூர் மூச்சு திணறி இறந்துவிட்டார். இதையடுத்து அங்கு ஒரு அறையில் இருந்த ஆவணங்களை ஒரு பெரிய பையில் போட்டு எடுத்துக்கொண்டு இரண்டு வாகனங்களில் தப்பி சென்று விட்டோம்.

 மேலும் கொள்ளையடிக்கப்பட்டதில் பல வீடியோ ஆதாரங்களும் உள்ளது. அதில் அப்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவிடம் காலில் விழுந்து அழுதது, மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி கொடுத்தது அனைத்தும் உள்ளது.  இதற்காக எங்களுக்கு ரூ.5 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. ஆனால் அதனை கொடுப்பதற்குள் கனகராஜ் கார் விபத்தில் இறந்தார். இந்த கொலையிலும் சில விஐபிக்களின் தொடர்பு உண்டு. இந்த கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் தான் கனகராஜ் உட்பட 5 பேர் இறந்துள்ளனர். இவை அனைத்திலும் உயர் மட்ட அளவில்  சதி திட்டம் கண்டிப்பாக உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் என்னையும் கொலை செய்ய முயற்சி செய்தனர். ஆனால் நானும் எனது மனைவியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிக்கப்போவது யார்?

ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பதவி ஏற்றார். அதன்பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், பதவி விலகினார். 2017 பிப்ரவரி 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்றார். முதல்நாள் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆனாலும், சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே அணியாகவே இருந்தனர். கொடநாடு கொலை சம்பவம் ஏப்ரல் மாதம், அதாவது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்று, 2 மாதத்தில் நடந்துள்ளது. கொடநாட்டில் கொலை நடக்கும்போதும் சசிகலா, எடப்பாடி அணியினர் ஒன்றாகவே இருந்தனர்.

ஏப்ரல் 10ம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போதும் எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாகவே இருந்தனர். ஆகஸ்ட் மாதம்தான் எடப்பாடி அணியும், டிடிவி அணியும் தனியாக பிரிந்தது. அதே மாதம், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர். இதனால் கொடநாடு சம்பவத்தை தீவிரமாக விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் பேட்டி
சென்னையில்,  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: இது அரசியல் உள்நோக்கத்துடன், பொய்யான,  அபாண்டமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அரசு மீதும், முதல்வர் மீதும்  அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கூறப்பட்டுள்ளது. இதை சட்டப்படி  சந்திப்போம். சட்டப்படி வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆவணப்படத்தில் ஆதாரங்கள்
நேற்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் எஸ்டேட்டில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு ஆதாரம் கொண்ட விவரங்களை கூறியுள்ளனர். அதில்,” கொள்ளை சம்பவத்தன்று இரண்டு காரில் வந்த கும்பல் முதலாவதாக காவலாளியை தாக்கி விட்டு பின்னர் ஆவணங்கள் இருந்த அறை பகுதிக்கு சென்று மொத்த ஆவணங்களையும் எடுத்து சென்றனர். இதற்கு ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் முக்கிய ஆளாக இருந்து செயல்பட்டார். இவர் பலமுறை எஸ்டேட்டுக்கு வந்துள்ளார் என்றனர்.
 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்