SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தின் செயல்பாடு : மக்களவை 47%, மாநிலங்களவை 27%

2019-01-11@ 00:11:58

புதுடெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக,  அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களவையில் 47 சதவீதமும், மாநிலங்களவையில் 27 சதவீதமும் மட்டுமே  அலுவல்கள் நடந்துள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மக்களவையில் கடந்த 9ம் தேதியும், மாநிலங்களவையில் நேற்று முன்தினமும் முடிந்தன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் இரங்கல் தீர்மானத்துடன் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அடுத்தடுத்த நாட்களில் எந்த பணியும் நடக்காமல் இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன.

மேகதாது அணை விவகாரத்தை கிளப்பி அதிமுக, திமுக எம்பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்பி.க்களும், ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி.க்களும் அமளி செய்ததால், கூட்டத் தொடரின் பெரும்பாலான நாட்கள் முடங்கின. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் செயல்பட்டது  தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று வெளியிட்டார். இதன்படி, மக்களவையில் 47 சதவீத அலுவலும்,  மாநிலங்களவையில் 27 சதவீத அலுவலும் மட்டுமே நடந்துள்ளது. இது குறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
* மக்களவையில் மொத்தம் 29 நாள் நடந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளும், மாநிலங்களவையில் 30 நாள் கூட்டத்தொடரில் 18 அமர்வுகளும் நடந்துள்ளன.

* மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* இரு அவைகளிலும் தலா 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* மாநிலங்களவையில் முத்தலாக், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நிலுவையில் இருந்த மற்ற 4 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
* மக்களவையில் 47 சதவீத அலுவல்களும், மாநிலங்களவையில் 27 சதவீத அலுவல்களும் நடந்துள்ளன.
* நாடாளுமன்றத்தின் இரு அவையிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன 124வது சட்ட திருத்த மசோதா நிறைவேறியது சிறப்பான சாதனையாகும். இதன் மூலம், ஏழ்மையில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை.  இந்த மசோதா நிறைவேற ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றாவது குறைவு
மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, நாடாளுமன்றத்தில் மிக குறைந்தளவில் அலுவல் நடந்ததில், இந்த குளிர்கால கூட்டத் தொடர் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன், 2016ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் 15 சதவீதமும், மாநிலங்களவையில் 18 சதவீதமும் அலுவல்கள் நடந்ததே மிகக்குறைவான எண்ணிக்கையாகும். கடந்தாண்டு தொடக்கத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் 16 சதவீதமும், மாநிலங்களவையில் 24 சதவீதமும் அலுவல்கள் நடந்தன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்