SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவொற்றியூர் பகுதியில் செயல்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்

2019-01-09@ 00:20:26

* சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
* நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வராததால், முக்கிய சாலைகளில் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் அவலம் உள்ளது.  திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ஆல்இந்தியா ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  தற்போது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதியில்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் எர்ணாவூர் சாலை வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. இந்த குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், நாள் கணக்கில் தேங்கும் கழிவுநீரால் துற்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குழாய் அடைப்பு ஏற்படும் போது, சம்பவ இடத்திற்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள், தற்காலிகமாக அடைப்பை சரிசெய்துவிட்டு செல்கின்றனர்.

ஆனால், நிரந்தர தீர்வு காணாததால் அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க ராஜாஜி நகரில் பல கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால், எர்ணாவூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் பங்கிங்காம் கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது.

இதனால், திருவொற்றியூரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற வரிகளை மாநகராட்சி வசூல் செய்கிறது. ஆனால், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கத்திவாக்கம், அன்னை சிவகாமி நகர், எர்ணாவூர் போன்ற இடங்களில் பாதாள சாக்கடை வசதியில்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து  வரக்கூடிய கழிவுநீரை ராஜாஜி நகர் அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர்  சுத்திகரிப்பு நிலையத்தில் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்,’’ என்றனர்.

தொடரும் விதிமீறல்
பங்கிங்காம் கால்வாயில் தனியார் யாராவது கழிவு நீரை லாரியில் கொண்டு வந்து விட்டால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த லாரிகளை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கிறார்கள். ஆனால், குடிசைமாற்று வாரிய கழிவுநீரை அதிகாரிகளே குழாய்கள் மூலம் பக்கிங்காம் கால்வாயில் விடுகின்றனர். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் பக்கிங்காம் கால்வாயில் விதிகளை மீறி கழிவு நீரை விடுவதற்கு எப்படி அனுமதியளிக்கப்படுகிறது, என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்