SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசே துணைபோவதா?

2019-01-05@ 01:12:53

சபரிமலை ஐயப்பன் கோயிலை மதம்சார்ந்த ஒரு இடமாக பார்ப்பதை தவிர்த்து சமூக கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். ஆன்மிகம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதனால் தான் இறைவன் வசிக்கும் கோயில் என்பது புனித இடம், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற  அடிப்படை பண்பாட்டை தொன்றுதொட்டு பின்பற்றி வருகிறோம். இறைவன் மீதான நம்பிக்கையின் பேரில்,  மது, புகையிலை தவிர்த்து காமம்,கோபம் ஆகியவற்றை  புறந்தள்ளி நல்ல சிந்தனையுடன் 48 நாட்கள் விரதம் இருப்பது நம்மை நாமே சுத்திகரித்து கொள்ளவும், உடல் மற்றும் மனத்தூய்மைக்கும் வழிவகுக்கிறது. சபரிமலையில் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற  உச்சநீதிமன்ற உத்தரவை கையில் எடுத்துக்கொண்டு நம்பிக்கை சார்ந்த இடமான சபரிமலையில் வன்முறையை கட்டவிழ்த்துவிட தனது அதிகாரத்தை அரசே பயன்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்  என்பது தான் சமூக ஆர்வலர்களின் கேள்வி. இதனால் சபரிமலையை தங்கள்  உயிருக்கும் மேலாக மதித்து வணங்கி வந்த பக்தர்களின் மனம் புண்பட்டுள்ளது.

இதுபோன்று மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயத்தில் கேரள அரசு தலையிட்டு தங்கள்  கட்சியின் கொள்கை முகத்தை பிரதிபலிக்க முயற்சிப்பது சமூக சீரழிவை தான் ஏற்படுத்தும். ஒழுக்கமும், நற்பண்புகளும் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களில், மாணவர்கள் புகைபிடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும்  நடந்து கொள்ளலாம். ஒழுங்காக படித்து தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் போதும்  என்று சொல்லமுடியுமா? அப்படி அனுமதித்தால் அந்த மாணவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சமுதாயத்தில் ஒழுக்கமும், பண்பும் இல்லாமல்  சிறந்த மனிதனாக நடமாடமுடியுமா?. கோயில் என்பது மனிதனின் மனதை பண்படுத்தி  வாழ்க்கையை புரியவைக்கும் சிந்தாந்த பெட்டகமாகவும், வேதாந்த நூலகமாகவும்  திகழ்கிறது. பாலியல் வன்முறைகள் அதிகரித்துவிட்ட தற்போதைய மோசமான  சமுதாயத்தில், மது, மாதுவை மறந்து நல்லொழுக்க நெறியை கடைபிடிக்க  சபரிமலையின் கட்டுப்பாடுகள் சிறப்பாக உதவி செய்கின்றன. எனவே அந்த கட்டுப்பாடுகளை உயிர்ப்புடன் வைக்க வேண்டியது சமூக அமைதியும், நலமும்  விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால் இதை மத ரீதியாக  வேறுபடுத்தி  அரசியல் செய்து மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைப்பது தரம் தாழ்ந்த செயல்களாகவே
கருதப்படும்.

உணர்ச்சி மிகுதியால் இப்பிரச்னையை அணுகாமல் சமூக கண்ணோட்டத்தோடு பார்த்தால், சபரிமலையின் கட்டுப்பாடுகள் மனித மாண்பை வளர்க்கவும், பண்புகளை செம்மைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த விவகாரத்தில்  சம்பந்தப்படாத மனசாட்சியுள்ள மனிதர்களும் ஒப்புக்கொள்வார்கள். சபரிமலையில் உள்ள விலங்குகள் கூட ஐயப்பன் என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு இதுவரை  யாரையும் துன்புறுத்தியது கிடையாது. அப்படிப்பட்ட அமைதியான இடத்தை பிரச்னை  பொருளாக்கி சீரழிவுக்கு வழிவகுத்துவிடாதீர்கள் என்பதே உண்மையான பக்தர்களின்  சிரம் தாழ்ந்த வேண்டுகோளாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்