SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புத்தாண்டு சிந்தனை

2019-01-01@ 00:16:24

பழைய வானம் தான். ஆனால், ஒவ்வொரு நாளும் புதிய காட்சிகளை அது நமக்கு தருகிறது. அதுபோலவே வாழ்க்கையும், ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை நமக்கு கற்றுத்தருகிறது. புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் அனுபவங்களின் வழியே கடந்த காலத்தை பரிசீலிப்பது அவசியம்.இந்தியா பல்வேறு கலாச்சார, பழக்க வழக்கங்களைக் கொண்டது. மாநிலத்திற்கு மாநிலம் பிரச்னைகள் வேறுபடுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, காவிரி, பெரியாறு, பாலாறு என தொடரும் நீராதாரப்  பிரச்னையோடு தற்போது மேகதாது அணை விவகாரம் டெல்டா விவசாயிகளை மிரட்டுகிறது. மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய கல்வி, சுகாதாரத்திற்கான நிதி வெட்டி சுருக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்குட்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறார். வரதட்சணை, மது, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களால் ஏற்படும் உயிரிழப்பும், பொருள் இழப்பும் ஏறுமுகமாகவே உள்ளது.வளர்ச்சியடைந்த நாடு என்று பெருமை கொள்ளப்படும் இந்தியாவில் 350 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். இந்தியாவில் 40 சதவீத மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத நிலை தொடர்கிறது. இந்தியாவின் சமனற்ற பொருளாதார நிலை  தலித்துகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது.

நாடு முழுவதும்  இன்னும் 39 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஊட்டச்சத்துக்குறைபாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவீதம் பேர் வயதுக்கு  ஏற்ற உயரத்தைவிட குறைவாக உள்ளனர். 21 சதவீதம் பேர் உயரத்துக்கு ஏற்ற எடையை விட குறைவாக உள்ளனர். 36 சதவீதம் பேர் வயதுக்கு ஏற்ற எடையைவிட குறைவாக உள்ளனர். பதினெட்டு வயதுக்குட்பட்ட  சிறார்களில் ஐந்து சதவீதத்தினர் ஆதரவற்று வாழ்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் பெரும் கவலையளிக்கிறது.விவசாய நிலை, அதை விட கவலையளிப்பதாக உள்ளது. பேரிடர்களாலும், மழையின்மையாலும்  விவசாய நிலங்களை விட்டு பெருநகரங்களை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து  வருகிறது. வறுமை, கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை பற்றிய பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2  ஆண்டுகளாக விவசாயிகளின் தற்கொலை புள்ளிவிபரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவே இல்லை.விவசாயத்தைக் காக்கவேண்டும் என்று டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கடன் தள்ளுபடி செய்யும்  நாட்டில், விவசாயக்கடனுக்காக டிராக்டர் உள்ளிட்ட உடமைகளை ஜப்தி செய்யும் நிலை தொடர்கிறது. இத்தகைய நிலைபாடு மாற வேண்டும். விவசாய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு, சமவேலைக்கு  சம ஊதியம், திருநங்கைகளின் துயர்துடைக்க புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இந்த ஆண்டாவது  நிறைவேற்றவேண்டும். அத்தகைய திசைவழியை நோக்கி இந்தியா செல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்