SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசின் கடமை

2018-12-31@ 00:39:56

தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில், 31.5.2009க்கு முன்னர் நியமனம் ஆன இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ₹8370 என்றும், ஒரு நாள் கழித்து அதாவது 1.6.2009க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹5200 அடிப்படை ஊதியம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி, ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள். இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

2016 பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களில் பலரின் உடல்நிலை மோசமானபோது, முதல்வர் ஜெயலலிதா, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் இந்த நிலை தொடர்ந்து, 7வது ஊதியக்குழு நடைமுறையிலும் வஞ்சிப்பதைக் களைய வேண்டும் என்று கோரி 2018, ஏப்ரல் மாதம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக, ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ஒரு நபர் ஊதியக் குழுவை அமைத்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக அந்தக் குழு தனது அறிக்கையைத் தரவில்லை. தமிழக அரசும் அதுகுறித்து கவனத்தில் கொள்ளாமல் இடைநிலை ஆசிரியர்களை அலட்சியப்படுத்தி வருகிறது.

கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்ததும் முதல்வர் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறியதால் போராட்டத்தை ஒருநாள் தள்ளிவைத்தனர். ஆனால் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரே பேச்சுவார்த்தைக்கு வந்ததை அடுத்து இடைநிலை ஆசிரியர்கள் 6 நாட்களாக சென்னை டிபிஐ வளாகத்தில் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாநிலை போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் மயக்கமடைந்தனர். பல அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின்பு தான் கோரிக்கைகளுக்கான தீர்வு குறித்த முடிவு தெரிய வரும் என பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். போராட்டங்களை விடவும் கோரிக்கைகள் நிறைவேறுவது முக்கியம் என்ற நோக்கில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். எதிர்கால சமூகத்தை கட்டமைக்கும் முக்கிய பங்கு கல்வித்துறைக்கே உள்ளது.

மாணவர்களை ஒழுக்கமானவர்களாகவும், தகுதிமிக்கவர்களாகவும் உருவாக்க வேண்டிய ஆசிரியர்கள் மகிழ்வான, இயல்பான மனோநிலையுடன் பணிபுரிய வேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. பொதுவாக அரசு அமைக்கும் குழுக்கள் வழங்கும் அறிக்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியாததல்ல. இருப்பினும் சம வேலைக்கு சம ஊதியம் கிடையாது என்றால் அது கல்வித்துறையை ஆட்டம் காணச் செய்யும் என்பதே உண்மை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்