SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டி சறுக்கல்

2018-12-24@ 00:32:21

‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்தோடும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு உருவான  கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பொதுமக்கள் விலைவாசி உயர்வினை நேரடியாக எதிர்கொண்டனர். பல பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி பெயரில் கூடுதலாக ஒரு தொகையை பொதுமக்கள் கட்ட நேர்ந்தது. சாதாரண, நடுத்தர மக்கள் இன்றும் பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டியின் கொடுமையை நேரில் உணருகின்றனர்.5 மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர் பாஜ அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சில சமரசங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் புத்தாண்டு முதல் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. 28 சதவீத வரிவிதிப்பில் இருந்து 18 சதவீத வரி விதிப்புக்குள் அவை கொண்டு வரப்பட உள்ளன. இதன் விளைவாக வாகன உதிரி பாகங்கள், கணினி மானிட்டர், டிஜிட்டல் காமிரா, சிமென்ட் பொருட்கள், ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா டிக்கெட்டுகளுக்கான வரிவிதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சாதாரண, நடுத்தர மக்களின் தேவைகளுக்கான சில பொருட்களின் விலை கட்டாயம் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓட்டல்கள் தோறும் பொதுமக்கள் சாப்பிடும் கட்டணத்தோடு ஜிஎஸ்டியாக ஒரு தொகையை வாரி வழங்க வேண்டியுள்ளது. இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் உணவருந்த பிளாட்பார்ம் கடைகளை தேடி செல்ல வேண்டியுள்ளது. எனவே சிறியரக ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும்.அதேபோல் ஏழை, நடுத்தர மக்கள் சேமிப்பாக கருதும் இன்சூரன்சிற்கு விதிக்கப்படும் வரி குறைப்பும் அவசியம். நகரங்களில் இன்று பெருகி வரும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு வாடிக்கையாளரை அதிகம் பாதிக்கிறது எனவே, பலசரக்கு பொருட்களுக்கான வரிவிதிப்பை மேலும் குறைத்தால் சாமானிய மக்கள் பயன்பெறுவர்.வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு, பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளுக்கான வரிகளை முற்றிலுமாக ரத்து செய்ய இப்போது முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வங்கி கணக்குகளை அதிகமாக பயன்படுத்தி வந்த சாமானிய மக்களே வரிக்கொடுமையில் இருந்து இப்போது தப்பியுள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழில் நிறுவனங்களுக்குள் சமதளத்திலான போட்டிகளும், வாடிக்கையாளர்களுக்கு உரிய லாபம், வெளிநாடுகளுக்கு இணையான முன்னேற்றம் ஆகியன கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதையெல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அடைந்ேதாமோ என்பதே கேள்விக்குறிதான்.பெயரளவில் வரிகுறைப்பு என கூறிவிட்டு செல்லாமல், அதன் அமலாக்கத்தை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். வரி குறைப்புகளால் மக்கள் நன்மைகளை அனுபவிக்கும் சூழல்களையும் உருவாக்கி தர வேண்டும். ஏனெனில் பல பொருட்கள் விலை உயர்ந்த பின்னர், மீண்டும் இறங்குவதே இல்லை. சிறு, குறு வியாபாரத்தை மட்டுமின்றி, பொதுமக்கள் சுமையையும் குறைப்பதாக வரிகுறைப்பு அமைவது அவசியம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்