SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘பாய்சனாக’ மாறிய பிஞ்சு குழந்தைகளின் ‘பாச பவுடர்’ ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்

2018-12-17@ 00:53:51

* பல ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிப்பு * தெரிந்தே விற்பனை செய்தது அம்பலம்

புதுடெல்லி: ஜான்சன் பேபி பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலந்திருப்பதும், இந்த பவுடர் பயன்படுத்திய பல ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.யாருக்காவது குழந்தை பிறந்திருந்தால் உடனே வாங்கக்கூடிய கிப்ட் ‘ஜான்சன் பேபி கிட்’ ஆகத்தான் இருக்கும். இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பவுடரை எல்லாம்  நம்புகிறார்களோ இல்லையோ... ஜான்சன் பேபி பவுடரை விட என் குழந்தைக்கு பாதுகாப்பு வேறெதுவுமே இல்லை என்று அடித்துச் சொல்வார்கள் தாய்மார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதே நிலைதான்.  இந்த நம்பிக்கையை தூள் தூளாக்கும் வகையில் வந்துள்ளது ஒரு பரபரப்பு ரிப்போர்ட். ஜான்சன் பவுடர் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதுதான். இதற்கு முன்பும் ஜான்சன் தயாரிப்புகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவா எச்வேரியா என்ற பெண் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு ஜான்சன் பேபி பவுடர்தான் காரணம் என கண்டுபிடித்த அவர் லாஸ் ஏஞ்சலஸ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 11 வயதில் இருந்தே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வருவதாகவும், இதனால்தான் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு 417 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதோடு இச்சம்பவத்தை பலர் மறந்து விட்டனர்.

 இந்த சூழ்நிலையில் மற்றொரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான பல்வேறு உண்மைகளை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. டெக்சாஸ் நகரில் மசாஜ்  பள்ளி நடத்தி வந்தவர் டார்லின் காக்கர். 52 வயதானபோது இவருக்கு நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டது தெரிந்தது. மிகக்கொடிய இந்த புற்றுநோய் வந்ததற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் காரணம்  என தெரிய வந்தது. சுரங்கம், கப்பல் கட்டும் பணி, தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குதான் இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். ஆஸ்பெஸ்டாஸ் துகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் தொடர்ேப இல்லையே என மண்டையை குழப்பி  யோசித்த அவருக்கு, சிறு வயது முதலே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வந்தது ‘பொறி தட்டியது’. தனது 2 பெண் குழந்தைகளுக்கும் இந்த பவுடரை போட்டு வந்தார். ஏனென்றால் இதை தவிர எந்த துகளுடனும் அவருக்கு  சம்பந்தம் இல்லை. ஆராய்ந்து பார்த்தபோது, ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருந்தது தெரிய வந்தது. உடனே ஜான்சன் நிறுவனம் மீது 1999ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் டார்லின். ஆனால், ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலக்கவே இல்லை என சாதித்து விட்டது ஜான்சன் நிறுவனம். வாதி என்பதால் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு  இவருக்குதான். இதனால் வழக்கில் தோல்வி அடைந்தார். நோய் தீவிரத்தால் 2009ல் இறந்தார்.

ஆனால் அவர் தேடித்தேடி களைத்துப்போன ஆதாரங்கள் இப்போது வெளிவந்துள்ளன. அதாவது, 1972ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரை  ஜான்சன் பேபி பவுடர் மூன்று முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில்  ஆஸ்பெஸ்டாஸ் பவுடர் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. நிறுவன மெமோ மற்றும் ஆவணங்களில் இதை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளது ராய்டர்ஸ்.அதற்கு ஆஸ்பெஸ்டாஸ் கலந்துள்ளது தெரிந்த பிறகும், அதை மறைத்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் ஷவர் டூ ஷவர் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக சுமார் 11,700 வழக்குகள் போடப்பட்டுள்ளன.பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இந்த பவுடரை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், நீதிமன்றம் இழப்பீடு  அறிவித்தாலும் மேல் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்று விடுகிறது ஜான்சன் நிறுவனம். காரணம், நிரூபணம் இல்லை என்பதுதான். இப்போது இந்த உண்மைகளை போட்டு உடைத்து விட்டது ராய்டர்ஸ் செய்தி  நிறுவனம். இதுகுறித்து நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டார்லினின் மகள்கள் கேடி இவான், கிறிஸ்டல் டெகார்டு ஆகியோர் கூறுகையில், கடைசி வரை தனது வழக்குக்கான ஆதாரங்களை எங்கள் தாய் தேடி வந்தார் என  கூறியுள்ளனர். இந்த விவகாரம் ஜான்சன் நிறுவனத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தில் முடிந்த அரவணைப்பு
* ஜான்சன் அண்ட் ஜான்சன், அமெரிக்க நிறுவனம்.
* குழந்தைகளுக்கு மட்டுமின்றி, சரும மற்றும் தலைமுடி பாதுகாப்பு, பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், மருத்துவ கருவிகள், மருந்து பொருட்கள் தயாரிக்கிறது.
* 1886ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம், 132 பழமை வாய்ந்தது. இந்த பாரம்பரிய நம்பிக்ைகதான் தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.
* குழந்தைகளுடனான பாசப்பிணைப்பு, அரவணைப்புக்கு அடையாளமாகவே இந்த நிறுவனத்தின் பேபி பவுடர் உள்ளிட்ட குழந்தைகள் தயாரிப்புகள் கருதப்பட்டன. ஆனால், ஆபத்துக்கான துவக்கப்புள்ளியாகவே இது மாறியுள்ளது  அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
* ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) என்றதுமே, வீடுகள், தொழிற்சாலைகளில் போடப்பட்டிருக்கும் கூரைதான் எல்லாரது நினைவுக்கும் வரும்.
* இந்த கூரை தீப்பிடிக்காது, பாதுகாப்பானது என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட உண்மை. இதில் கிரிசோடைல், குரோசிடோலைட், அமோசைட், டிரெமோலைட், ஆக்டினோலைட், ஆந்தோஃபைலைட் தாதுக்கள் உள்ளன. இந்த  அனைத்து வகை கல்நார்களும் வெப்பத்தை அரிதில் கடத்தும் தன்மை கொண்டவை. இதன் மூலக்கூறு அமைப்பில் சிலிக்கான், ஆக்சிசன் உள்ளன.
* இதில், கிரிசோடைல் உட்பட அனைத்து கல்நார் வகையும் புற்றுநோயை உண்டாக்கும் இயல்பு கொண்டவை. நுரையீரல், மூச்சுக்குழல், கர்ப்பப்பை, இடைத்தோல் புற்றுநோயை உருவாக்கும்.
* இதுதவிர நுரையீரல், தொண்டைகளில் பல நோய் பாதிப்புகளை இவை ஏற்படுத்துகின்றன.
* ஆசிய நாடுகளில்  இன்னும் கல்நார் பயன்பாடு உள்ளது. ஆந்திரா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்டில் கல்நார் பவிவுகள் காணப்படுகின்றன.
* இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.25 லட்சம் டன் கல்நார் கையாளப்பட்டுகிறது.  இதில் ஒரு லட்சம் டன் ஏற்றுமதியாகிறது.
* கோவை, அகமதாபாத், ஐதராபாத், மும்பையில் சிமென்ட் ஆலைகளில் பணிபுரிவோரிடம் கல்நார் நுரையீல் நோய் பாதிப்பு 3 முதல் 5 சதவீதம் காணப்படுகிறது.
* கல்நார் துணி ஆலைகளில் 10 ஆண்டில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் கல்நார் நுரையீரல் விகிதம் 9 சதவீதமாக உள்ளது. இது சுரங்க ஊழியர்களிடம் 3 சதவீதம், பதப்படுத்தும் ஆலைகளில் 21 சதவீதம் என உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

 • apayin_kuppai11

  ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

 • protest_dailymail111

  சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்