SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு: பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் புகழாரம்

2018-12-16@ 20:00:41

சென்னை: கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டி சென்னை ஒ.எம்.சி மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலைஞருக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். திமுக தலைவர் கலைஞர் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் கலைஞரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு  செய்யப்பட்டு, சிலை தயாரிக்கப்பட்டது. கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  

விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்தி உள்ளிட்ட திரைத்துறையினர் விழாவில் பங்கேற்றனர். சிலை திறப்பு விழா முடிந்தவுடன் சோனியாகாந்தி, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் மத்தியமைச்சர் தயாநிதிமாறன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சோனியா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் பங்கேற்றனர்.

சோனியாகாந்தி உரை:
கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன் என்றும் 60 ஆண்டுகால தமிழக அரசியலை கலைஞர் அவர்கள் நிர்ணயித்திருக்கிறார், கலைஞரின் சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கிறேன், 2004 -ல் தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்த நாள் கலைஞருக்கு பெரும் மகிழ்ச்சி தந்த நாள் என சோனியாகாந்தி புகழாரம் சூட்டினார். 13 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாதவர் கருணாநிதி என்றார். தமிழுக்கு காங்கிரஸ் அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியது தான் கருணாநிதி வாழ்க்கையில் நிறைவான தருணம் என்றும் தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரை:
உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கருணாநிதி சாதாரண அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக இருந்தார் என்றும் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். கருணாநிதியை நினைவில் வைத்து தமிழக மக்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை அனுமதிக்க கூடாது என்றார்.

கலைஞரின் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என நினைத்துக்கொண்டு அங்கு சென்றேன். பலப்பல ஆண்டுகளாக அரசியலில் தலைவராக இருப்பவரின் வீடு எளிமையாக இருந்ததை கண்டு வியந்து போனேன் என்றார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை:
கலைஞர் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் திமுக வரலாற்றிலும் என்னுடைய வாழ்நாளிலும் இன்று மிக முக்கியமான நாள் என்றார். 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார், இன்று கலைஞர் சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் இன்று மறக்க முடியாத நாள் என்றும் கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன் ,கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார் என்று ஸ்டாலின் உருக்கமான பேசினார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது என்றும் வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார் டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை ,அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்றார். கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வராதது ஏன்? என்றும் தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம் என்றார். ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன் என்றும் நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும், மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் உரை:
நேரு குடும்பத்தோடு, கோபாலபுரம் குடும்பம் இணைந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி என்றார். கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றும் கருணாநிதி இல்லை என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.
தேசிய தலைவர்கள் சென்னை வந்து சென்றால் அவர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும் என்றும் அடுத்த பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல்காந்தி என்று தெரிவித்தார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உரை:
தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி என்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி என்று தெரிவித்தார். மேலும் கருணாநிதியை எவ்வாறு கவுரவிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலினும், தேசியளவில் ராகுலும் மாற்றத்தை கொண்டுவருவார்கள் என்றும் பிரதமர் மோடிக்கு சவாலாக இருக்கிறார் ராகுல் காந்தி, மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உரை:
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டவர் கருணாநிதி என்றும் அரசியல், இலக்கியம், திரைத்துறை என எல்லாவற்றிலும் சாதனை படைத்தவர் கருணாநிதி என்றார். பெரியார், அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி, பெரியார், அண்ணா வழியில் திராவிட இயக்க கொள்கையை ஒளிர செய்தவர் கருணாநிதி என்றும் கருணாநிதியின் புகழை ஒரு பேச்சில் விவரித்து விட முடியாது என்றும் கூறினார். தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் இருக்கும் என்றும் சமூக பொருளாதார மாற்றம் தான் கருணாநிதியின் உயிர் மூச்சாக இருந்தது என்றார். திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் உலகில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உரை:
எதிர்கால தமிழ் சமுதாயம் கருணாநிதி செய்த நன்மைகளை என்றென்றும் நினைக்கும் என்றும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க பாடுபட்டவர் கருணாநிதி என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசு அனைத்து துறைகளையும் சீரழித்துவிட்டது என்றும் கூட்டாட்சி தத்துவத்தை முற்றிலும் தகர்த்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார்.  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு பலன்தரவில்லை என்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் அனைவரும் இணைந்திருக்கிறோம் என்றார். தமிழகத்தில் திமுகவை வெற்றி பெற செய்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக அரசு இயக்கி வருகிறது என்றும் சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்துவிட்டது என்றார்.  தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது என்றும் ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது என்றும் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்