SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போதைக்காக அதிகளவு ஸ்பிரிட்ரசாயன பொடி கலந்து தயாராகிறது: மது பிரியர்களின் உயிர் கொல்லியாக மாறும் போலி சரக்குகள்

2018-12-16@ 03:25:28

நாகர்கோவில்: தமிழகத்தில் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மது விற்பனை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றப்பட்டது. இந்த நேரம் குறைப்பு குடிகாரர்களின் எண்ணிக்கையை  குறைக்கவில்லை. மாறாக போலி மது விற்பனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவையொட்டி உள்ள மாவட்டங்களில் போலி மதுபானங்களின் விற்பனை உச்சத்தில் உள்ளன.  கேரளாவில்  இருந்து ஸ்பிரிட் மற்றும் ரசாயன பொடிகளை கலந்து போலி மதுபானங்கள் தயாரித்து, அவற்றை குவார்ட்டர் பாட்டில்களில் அடைத்து 100, 120 என விற்பனை செய்கிறார்கள். குடிசை தொழில் போல் வீடுகளில் இந்த போலி  வகை மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.  

கடந்த சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், போலி மதுபானங்களுடன் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், நாகர்கோவில் அருகே ஒரு தோப்பில் போலி  மதுபான ஆலை செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து போலி மதுபான ஆலையை  மதுவிலக்கு பிரிவு போலீசார் கண்டுபிடித்து அங்கிருந்த எரிசாராயம் (ஸ்பிரிட்) மற்றும் காலி மதுபாட்டில்கள், பிரபல டாஸ்மாக் மது  கம்பெனியின் பெயர்கள் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.  இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரல்வாய்மொழி அருகே ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு வந்ததை போலீசார்  கண்டுபிடித்து கணவன், மனைவி உள்பட 3 பேரை கைது செய்தனர். இவர்கள் டாஸ்மாக் பார்களுக்கு போலி மதுபானங்களை சப்ளை செய்திருக்கிறார்கள். கேரளாவில் இருந்து தண்ணீர் கேன்கள் போர்வையில் கொண்டு வரப்படும்  போலி மதுபானங்களை வீட்டில் வைத்து பாட்டிலில் அடைத்து அவற்றை பைக், கார்களில் கொண்டு சென்று பார் உரிமையாளர்கள் உதவியுடன் விற்பனை நடந்துள்ளது.

இந்த வகை போலி மதுபானங்களில் அதிகளவு ஸ்பிரிட் மற்றும் ரசாயனம் கலக்கப்படுவதால், மூளை பாதிக்கப்படுவதுடன், அதை குடிப்பவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனால் இவ்வாறு உயிர் கொல்லி  மருந்தான  போலி மதுபானங்களை பார் உரிமையாளர்கள் மற்றும் சில கும்பல் பணத்துக்கு ஆசைப்பட்டு எளிதில் விற்பனை செய்கிறார்கள். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ₹4 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை இதில்  லாபம் அடையும் நிலை உள்ளது. இவர்கள் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பும், இரவு கடை அடைத்த பின்னரும் தான் விற்பனையை நடத்துகிறார்கள். தமிழகம்  முழுவதுமே இந்த போலி மதுபானங்கள் சப்ளை செய்யப்படுவது  கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால் காவல் துறை இது தொடர்பான விசாரணையில் ஆர்வம் காட்டுவதில்லை. கையில் கிடைத்தவர்களை கைது செய்து, ஜாமீனில் விடுவதுடன் தங்களது பணியை முடித்துக்கொள்கிறார்கள். ஒரு சில இடங்களில் மாமூல்  வாங்கி கொண்டு, போலி மதுபான விற்பனையை காவல்துறை கண்டுகொள்வதில்லை. உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக தான் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு மதுக்கடைகள் வந்தன. ஆனால் இப்போது  கள்ளச்சாராயத்துக்கு இணையாக மது பிரியர்களின் உயிர்களை குடிக்கும் ஓர் அரக்கனாக போலி மதுபானங்கள் மாறி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு  போலி மது விற்பனையாளர்கள் மீது  இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், உயிரிழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்ற சூழல் உருவாகி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்