SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ள நடிகர், நடிகைகளுக்கு திடீர் ‘செக்’

2018-12-16@ 03:24:23

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கொச்சி நகரம் தான் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் 2வது இடத்தில் உள்ளது என்று அதிகமாக யாருக்கும் தெரியாது. பல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள்  அடிக்கடி கொச்சி வந்து முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து செல்வதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த 1 வருடத்தில் மட்டும் ₹50 கோடிக்கும் அதிகமாக போதைப்  பொருள் கொச்சியில் பிடிபட்டுள்ளது. இந்தியாவில் மிக அரிதாக கிடைக்கும் கொகைன், எம்.டி.எஸ். போன்ற போதைப்பொருள் கூட கொச்சியில் மிக சுலபமாக கிடைக்கும். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு  மலையாள சினிமா உலகத்தினருடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் உதவியுடன் போதைப் பொருள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலுள்ள மற்ற சினிமா துறையினரை விட மலையாள சினிமா துறையினருக்கு துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் அதிக செல்வாக்கு உள்ளது. பல முன்னணி மலையாள நடிகர்கள் இந்தியாவுக்குள்  மட்டுமல்லாமல் துபாய், குவைத் போன்ற நாடுகளில் கூட நிலம், அடுக்கு மாடி குடியிருப்புகள் உட்பட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரமாக இருந்தாலும் கொச்சி தான் மலையாள  சினிமாவுக்கு தலைநகரமாகும். இதனால் தான் மம்மூட்டி, மோகன்லால் உட்பட அனைத்து முக்கிய நடிகர், நடிகைகளும் கொச்சியில் வீடு, நிலம் வாங்கி செட்டிலாகி உள்ளனர். மும்பை, டெல்லி, சென்னை போன்ற மெட்ரோ  நகரங்களை ஒப்பிடும்போது கொச்சி ஒன்றுமில்லை என்றாலும், மெட்ரோ நகரங்களுக்கு இணையாக இங்கு நிலத்திற்கு அதிக மதிப்பு உள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவை ஒப்பிடும்போது மலையாள சினிமாத்துறை மிகச்சிறியது தான் என்றாலும், மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிருத்விராஜ் உட்பட முக்கிய நடிகர்கள் அனைவரும் கோடிகளில் தான் சம்பளம்  வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கும் பணத்தை பெரும்பாலும் இவர்கள் ரியல் எஸ்டேட்டில் தான் முதலீடு செய்கின்றனர். பலரும் தங்களது பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் பல நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளதாக  கூறப்படுகிறது. இப்படி அளவுக்கதிகமாக நிலம் வாங்கிக் குவித்துள்ள மலையாள நட்சத்திரங்களுக்கு இப்போது சனி திசை தொடங்கிவிட்டது. கேரள கலை நேசிப்பாளர்கள் சங்க தலைவரான தாமோதரன் என்பவரின் மூலம் தான்  மலையாள சினிமா நட்சத்திரங்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இவர் ஒரு மனு கொடுத்தார். அதில், கேரளாவில் ஒரு துண்டு நிலம் கூட இல்லாத பல லட்சம் பேர் உள்ளனர். குடும்பத்தில் யாராவது இறந்தால் உடலை அடக்கம்  செய்யக்கூட இடமில்லாத எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் பல சினிமா நட்சத்திரங்கள் அளவுக்கதிகமாக நிலங்களை வாங்கி குவித்துள்ளனர். நில சீர்திருத்த சட்டத்தின்படி அவர்களிடமிருந்து நிலங்களை கைப்பற்றி  நிலமில்லாதவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு  மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த 1 வருடமாக கிடப்பில் போட்டிருந்த தாமோதரனின் மனு இப்போது உயிர் பெற்றுள்ளது. அந்த மனு மீது உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கூறி வருவாய் துறை அமைச்சருக்கு முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து தாமோதரன் கூறியது: கேரளாவில் ஒரு துண்டு நிலம் கூட இல்லாத லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஆனால் பல மலையாள நடிகர்கள் கைவசம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. சாதாரண மக்கள் கொடுத்த  பணத்தினால் தான் இவர்கள் மாட மாளிகைகளையும், சொத்துக்களையும் வாங்கி குவிக்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்த போது இவர்கள் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கேரளாவில் வரலாறு  காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கோடிகளில் புரளும் மம்மூட்டி, மோகன்லால் உட்பட முன்னணி நடிகர்கள் யாரும் பெரிதாக உதவ முன்வரவில்லை. மம்மூட்டியும், அவரது மகன் துல்கர் சல்மானும் சேர்ந்து வெறும் 25  லட்சம் மட்டுமே கொடுத்தனர். இதேபோல மோகன்லால் 25 லட்சம் கொடுத்தார். ஒரு சினிமாவுக்கு பல கோடிகள் வாங்கும் இவர்கள் மக்களுக்கு கொடுத்த பணம் மிக குறைவாகும். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு,  கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடிகர், நடிகைகள் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

கேரள நிலச்சீர்திருத்த சட்டத்தின்படி ஒருவர் 15 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்க கூடாது. எனவே இந்த சட்டத்தை பயன்படுத்தி அதிக நிலத்தை வைத்திருக்கும் நடிகர், நடிகைகளிடமிருந்து நிலத்தை கைப்பற்றி  இல்லாதவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே மலையாள சினிமா நட்சத்திரங்களின் சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்பை கேரள வருவாய் துறை தொடங்கி விட்டது.  வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரனின் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு நில வருவாய் ஆணையாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், மாவட்டங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரிலுள்ள நிலம் குறித்த விவரங்களை சேகரித்து உடனடியாக அனுப்பவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என கூறப்படுகிறது. கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கை சொத்துக்களை வாங்கி குவித்துள்ள மலையாள நட்சத்திரங்களுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

 • pandacub

  உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்