SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூரில் அதிகரிக்கும் கந்துவட்டி கும்பல் கண்ணீர் சிந்தும் ஏழை தொழிலாளர்கள்: முற்றுப்புள்ளி வைக்குமா காவல்துறை?

2018-12-16@ 03:21:52

* தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, சிறு முதலாளிகளாக இருந்தாலும் சரி, அதிகாலை கண் விழிப்பதற்கு முன்பே இவர்களது இருசக்கர வாகனம் கந்துவட்டி கும்பலால் கபளீகரம் செய்யப்பட்டு விடுகிறது.
* கையெழுத்திட்ட, நிரப்பப்படாத காசோலையை ஆவணமாக பெற்றுக்கொண்டு, கந்துவட்டி கும்பல் கடன் வழங்குகிறது.

திருப்பூர்: திருப்பூரில் நாளுக்கு நாள் கந்துவட்டி கும்பல் அதிகரிக்கிறது. ஏழை தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இதற்கு காவல்துறை முற்று ப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்படுகிறது. இந்நிறுவனங்களில் கட்டிங், அயர்னிங், டெய்லரிங், பேக்கிங், செக்கிங், நிட்டிங்,  சிங்கர், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல், லோக்கல் மெஷின் ஆகிய பிரிவுகளில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிகரிக்கும் தொழிலாளர் எண்ணிக்கை காரணமாக, திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி, புறநகர்  பகுதிகளிலும் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. இங்கு, தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, அன்றாடம் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர் வந்து செல்கின்றனர்.

இவர்கள், சராசரி அளவைவிட குறைவான சம்பளம் வாங்குவதால், இவர்களது தேவையை உணர்ந்து, கந்துவட்டி கும்பல் திருப்பூரில் கால் பதித்துள்ளது. சேலம், தஞ்சாவூர், தேனி, விருதுநகர், நாகப்பட்டினம், மதுரை, நாமக்கல்,  திருெநல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். குடும்பம் அல்லாத தனி நபர்கள், அந்தந்த கம்பெனி விடுதி மற்றும்  தனியார் விடுதிகளில் தங்குகின்றனர். இவர்களை குறி வைத்து கந்துவட்டி கும்பல் கடன் தொகை வழங்குகிறது. பணம் இல்லாமல் கஷ்டப்படும் தருணத்தை உணர்ந்து, 1,000 முதல் 2,000 ரூபாய் வரை கொடுக்கின்றனர். பணம்  கொடுக்கும்போதே, ஆயிரமாக இருந்தால், 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை; 2,000 ரூபாயாக இருந்தால், 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை பிடித்தம் செய்து, மீதித்தொகையை கொடுக்கின்றனர்.

பின்னர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், வீடு வீடாக சென்று 200, 250, 350, 500 ரூபாய் என அவரவர் வருவாய்க்கு ஏற்ப வட்டி வசூலிக்கின்றனர். ஆனால், பல தொழிலாளர்களால் அதிகப்படியான வட்டியுடன் கடன்  தொகையை சேர்த்து திருப்பிக்கொடுக்க முடியவில்லை. இதனால், மென்மேலும் கடன் வாங்கி, கந்துவட்டி கும்பலிடம் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். செல்போன், வாட்ச், மோதிரம் என துவங்கி, தட்டுமுட்டு சாமான்கள்  வரை விற்று வட்டியும், அசலும் திரும்ப செலுத்துகின்றனர். கந்துவட்டி கும்பல் நெருக்கடியால், பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சமீப காலமாக கந்துவட்டி கும்பல் அதிகமாக  தலையெடுத்துள்ளன.

தொழிலாளர்கள் மட்டுமின்றி, சிறு பனியன் நிறுவனம் நடத்தும் முதலாளிகளும் கந்துவட்டி கும்பலிடம் தின வட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். கையெழுத்திட்ட, நிரப்பப்படாத காசோலையை ஆவணமாக பெற்றுக்கொண்டு,  கந்துவட்டி கும்பல் கடன் வழங்குகிறது. வார இறுதி நாளில், சிறுதொழில் நிறுவனம் நடத்தும் முதலாளிகள் இக்கும்பலிடம் கடன் வாங்கி, வார சம்பளம், நூல்வாங்கும் செலவு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்கின்றனர். இவர்களும்  பல நேரங்களில் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல், ஆலை உபகரணங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பல கம்பெனியில் உள்ள மெஷினை பறிமுதல் செய்வதிலேயே கந்துவட்டி கும்பல் கவனம்  செலுத்துகிறது.

தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, சிறு முதலாளிகளாக இருந்தாலும் சரி, அதிகாலை கண் விழிப்பதற்கு முன்பே இவர்களது இருசக்கர வாகனம் கந்துவட்டி கும்பலால் கபளீகரம் செய்யப்பட்டு விடுகிறது. பல நேரங்களில் ரவுடி  கும்பலுடன் வந்து மிரட்டுகிறார்கள். இதனால், தொழிலாளர்கள், சிறு முதலாளிகள் என பலதரப்பினரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிகளவில் வட்டி செலுத்திவிட்டு நஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். திருப்பூருக்கு வேலை  தேடி வரும் இளைஞர்கள் பலர், கஷ்டப்பட்டு தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்குகின்றனர். பின்னர், சிறிது காலத்திற்கு பிறகு கந்துவட்டி கும்பலிடம் பறிகொடுத்து விடுகின்றனர். இருசக்கர வாகனம் பறிமுதல்  செய்யப்படும்போது பல தொழிலாளர்கள் அழுது புலம்புவது வாடிக்கையாகிவிட்டது.

கந்துவட்டி, வாராந்திர பண்ட், மீட்டர் வட்டி, முதலாளிகளுக்கான வார வட்டி, ஏலச்சீட்டு, குழு சீட்டு என பல வகைகளில் கந்துவட்டி கும்பல் நடமாடுகிறது. திருப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்துவட்டியால்  பாதிக்கப்பட்ட அடகுகடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் மனைவி, குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல், திருப்பூரில் ஏராளமான துயரம் நடந்தாலும், கந்துவட்டி கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை.  போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதில்லை. கந்துவட்டி வசூலிக்க, தமிழக அரசு தடை விதித்திருந்தாலும், திருப்பூரில் வெளிப்படையாகவே கந்துவட்டி தொழில் தயக்கமின்றி நடக்கிறது. ஏழை தொழிலாளர்களின்  கஷ்டத்தை போக்க, திருப்பூரில் கந்துவட்டி கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகர காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருப்பூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து திருப்பூர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’பாதிக்கப்பட்ட மக்கள் கந்துவட்டி கும்பல் மீது புகார் கொடுத்தால்தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. கந்து  வட்டிக்கு கடன் வாங்கி, பணத்தை செலுத்திவிட வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்க யாரும் முன்வருவதில்லை. இதனால் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க  முடியவில்லை’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்