SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகம் மாநில அரசுகளின் உரிமைகள், அதிகாரங்கள் பறிப்பு: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

2018-12-16@ 03:17:39

புதுடெல்லி:  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதா குறித்து 6 மாதங்களுக்கு முன்பு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டது.  வரைவு மசோதாவில் உள்ள குறைபாடுகள், அதனால் தமிழகம்  போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.   மேலும், சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தின் கருத்துகள், ஆலோசனைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூன்  மாதம் இந்த அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதா தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அணைகளின் பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு சட்டமும், மாநில அரசுகளின் செயல்பாட்டையும் உரிமைகளையும் எந்த வகையிலும் பறித்து விடக்கூடாது என அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின்  2வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அரசியல் சட்டப்பிரிவு 252, உட்பிரிவு 1ன்படி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றக் கோரி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டு  வர உத்தேசித்துள்ள மசோதாவில், இத்தகைய குறிப்பு எதுவும் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. மாநிலங்களில் ஓடும் நதிகளின்  மீது கட்டப்பட்டுள்ள அணைகள், நீர்த்தேக்கங்களின்  செயல்பாடு,  பராமரிப்பு அந்த மாநில அரசிடமே இருக்கும். இது, இந்திய அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையின் 2வது பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சம்.  ஆனால், மத்திய அரசின் உத்தேச மசோதாவில் இதற்கு எதிரான கருத்து இடம்பெற்றுள்ளது. அணைகள், நீர்த்தேக்கங்களை ஆய்வு செய்யும் வரம்பு மீறிய அதிகாரத்தை தேசிய அணை பாதுகாப்பு அமைப்புக்கு வழங்க மசோதாவில்  வகை செய்யப்பட்டுள்ளது.
 
ஒரு மாநில அணைகள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை, மாநிலங்களுக்கு இடையேயான, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில், மற்றொரு மாநிலம் சொந்தம் கொண்டாடி,  பராமரித்து, செயல்படுத்தி வருவது பற்றி இடம் பெறவில்லை.  தமிழ்நாட்டின் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் அரசு,  உரிமையுடன் நிர்வகித்து வருகிறது. ஆனால், இந்த அணைகள் பக்கத்து மாநிலத்தில் உள்ளன. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா, இந்த உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. கடந்த காலங்களில்  இருந்து தற்போது வரையில் தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து விவாதிக்காமல் அவசர கதியில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது. மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும்  பறிக்கும் இது போன்ற சட்ட மசோதா குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காலாவதியான மசோதா
* கடந்த 2010ம் ஆண்டு இதேபோன்ற மசோதாவை அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில் இடம் பெற்றிருந்த சில குறிப்பிட்ட அம்சங்களுக்கு  தமிழக அரசு ஆட்சேபணை தெரிவித்திருந்தது. இதனால் மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியாகி விட்டது.
* தமிழகத்தின் நலன்களை பாதிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி கடந்த ஜுன் மாதம், பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி  மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு பாலைவனமாகும்?
தமிழகத்துக்கு பல ஆண்டாக நதிநீர் சிக்கல்கள் தொடர்கின்றன. மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டினால்,  டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல், முல்லைப் பெரியாறு  நீரை தடுக்க புதிய அணையை கேரளா கட்ட  அனுமதித்தால், தேனி, மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முடங்கி விடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneer_laari_kudam11

  குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

 • kali_dogsa1

  கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

 • firoilsuthigari11

  அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

 • 24-06-2019

  24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-06-2019

  23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்