SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுமை தீர்ப்பாய தீர்ப்பு அரசுக்கு தலைகுனிவு அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்: முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-12-16@ 00:36:05

சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு. திமுக., எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இனியாவது அமைச்சரவையில் கொள்கை  முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஏற்றுக்  கொள்ள முடியாது என்று நெற்றியில் அடித்ததைப் போல் சுட்டிக்காட்டி ஆலையைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் 40 பக்கத் தீர்ப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசின்  கன்னத்தில் ஓங்கி விடப்பட்ட அறையாகவே அமைந்திருக்கிறது.மனிதநேயமற்ற முறையில் போலீஸ் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி, அறவழியில் போரா டிய 13 பேரின் உயிரைப் பறித்த இந்த அரசு, லட்சக்கணக்கான மக்களுக்கு  சுகாதாரக் கேடு விளைவிக்கும், சுற்றுப்புறச் சூழலை அடியோடு நாசப்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதிலும் அலட்சியம் காட்டி, இன்று டெல்லி பூமியில் முதல்வர் எடப் பாடி பழனிசாமி அவமானப்பட்டு  அசிங்கப்பட்டதோடு மட்டுமின்றி, நிர்வாகத் திறமை க்குப் பெயர் போன தமிழக அரசு அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஆலையை மூட அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுங்கள் என்று திமுக சார்பில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வாதாடினேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே  கோரிக்கையை வலியுறுத்தின. ஏன். உயர் நீதிமன்ற நீதிபதிகளே அரசாணை போதாது, அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று எச்சரித்தார்கள்.ஆனால் எதையும் காது கொடுத்துக் கேட்காமல் எல்லாவற்றிலும் கரை கண்டதைப் போல, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பதிலாக ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட் டுப்பாடு வாரியம் அனுப்பிய கடிதத்தை மட்டும் ஏற்றுக்  கொண்டு அதன் அடிப்படை யில் ஆலையை மூடி அரசாணை பிறப்பித்தது அதிமுக அரசு.இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நிர்வா கத் திறமையில் தாங்கள் புலிகள் போல் கருத்து தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியின் கருத்தினை கேலி செய்தார்கள். உயர்நீதிமன்ற  நீதிபதிகளின் எச்சரிக்கையை ஏற்க மறுத் தார்கள். இருவரும் இனிமேல் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது என்று அடாவடியாகப்  பேசினார்கள்.

ஆனால் இன்று தேசிய தீர்ப்பாயத்தின் தீர்ப்பு முதல்வரின் முகத்தில் கழுவ முடியாத கரியைப் பூசியிருக்கிறது. நியாயப்படுத்த முடியாத உத்தரவு என்றும், தமிழக அரசு தன்னிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில்  எடுக்கப்படாத முடிவு என்றும் இடித்துரைத்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதல்வரின் ஆணவப் பேச்சுக்கும், அலட்சியமான நிர்வாகத்திற்கும் தர்ம அடி கொடுத்திருக்கிறது.தினம் தினம் கோப்புக்களைப் பார்த்து உடனுக்குடன்  முடிவு எடுத்து விடுகிறேன் என்று வீண் தம்பட்டம் அடித்து வீராப்புப் பேசி வரும் முதல்வரின் நிர்வாக லட்சணம் தீர்ப் பின் ஒவ்வொரு வரியிலும் சிரிப்பாய் சிரிக்கிறது. கொள்கை முடிவு எடுத்து ஆலை மூடப்படவில்லை  என்பதால் அந்த அரசு ஆணையை ரத்து செய்யும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு இருக்கிறது என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் பார்த்தால், திமுக குறிப்பிட்டது போல் கொள்கை முடிவு எடுத்திருந்தால் பசுமைத் தீர்ப்பாயம்  நிச்சயம் தலையிட்டிருக்காது என்றே தெரிகிறது. ஆகவே உயர்நீதிமன்றமும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் எடுத்து வைத்த வாத த்தை ஏதோ உள்நோக்கத்துடன் ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இதற்கு தார்மீக பொறுப்பேற்று  தூத்துக்குடி மக்களிடம் மட்டு மல்ல. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடமும் உயிரிழந்த குடும்பங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகவே, இனியாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேல்முறையீடு செய்வோம் என்று வழக்க மான பல்லவியைப் பாடிக் கொண்டிருக்காமல், உடனடியாக  தமிழக அரசு முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆபத்து தொடர் பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து, அந்த ஆலை தொடருவது சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும்  என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்