SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சை பசேல் ஆடுகளம்... எகிறப் போகும் பவுன்சர்கள் பெர்த்தில் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம்

2018-12-14@ 01:51:51

பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட பெர்த் மைதானத்தின் ஆடுகளம் பச்சை பசேலென்று புற்கள் நிறைந்துள்ளதால், பவுன்சர்கள் எகிற காத்திருக்கிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இந்திய அணிக்கு உச்சகட்ட சவாலை தர உள்ளது. இப்போட்டியில் காயம் காரணமாக அஷ்வின், ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த மைதானம் புதுக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. அடிலெய்டில் தோற்றதும், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பெர்த் மைதானத்தை தங்களுக்கு சாதகமாக அமைக்க முடிவு செய்தது. அதன்படி, பெர்த் ஆடுகளம் முழுக்க முழுக்க வேகத்துக்கு சாதகமாக செதுக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் புற்கள் நிறைந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால், வேகப்பந்து வீச்சே இப்போட்டியின் முடிவை தீர்மானிக்கும் என்பது உறுதி. ஆடுகள அமைப்பாளர் சிப்தோர்ப் கூறுகையில், ‘‘வேகத்துக்கு சாதகமாக, பவுன்சர்கள் வீசக்கூடிய ஆடுகளத்தை தயாரிக்க வேண்டுமென கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கேட்டுக் கொண்டது. அதன்படி, எங்களால் முடிந்த அளவுக்கான, பவுன்சர்களின் சொர்க்கமாக, இந்த ஆடுகளத்தை அமைத்துள்ளோம்’’ என மிரட்டுகிறார். பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டு ஆடுகளங்கள் என்றாலே இந்திய அணிக்கு கொஞ்சம் அலர்ஜிதான். அதுவும், ஆஸ்திரேலியாவில் என்றால் சொல்லவே வேண்டாம்.

அந்த வகையில், இப்போட்டி கோஹ்லி அன்ட் கோவுக்கு உண்மையான சவாலாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் பேட்டிங்கில் அவ்வளவு வலுவில்லை.
ஆனால், பந்துவீச்சில் குறிப்பாக வேகத்தில் ரொம்பவே ஸ்ட்ராங்கான அணியாக உள்ளது. ஸ்டார்க், ஹேசல்வுட் வேகத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் அவ்வளவு எளிதாக சமாளித்து விட முடியாது. எனவே, இந்திய அணி கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டியது அவசியம். அடிலெய்டில் இந்திய அணியின் பேட்டிங் கூட அவ்வளவு பிரமாதமாக இல்லை. இரு இன்னிங்சிலும் புஜாரா 123, 71 ரன்களை குவித்ததால் மட்டுமே தப்ப முடிந்தது. எனவே பெர்த்தில், மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆட வேண்டியது கட்டாயமாகி உள்ளது. ஏற்கனவே துவக்க வீரர் பிரித்வி ஷா காயத்தால் அணியில் இடம் பெறாத நிலையில், இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ரோகித் ஷர்மா இருவரும் காயம் காரணமாக இடம் பெறாதது இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. கடந்த போட்டியில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ரோகித் எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்க்கவில்லை. என்றாலும் இரு முக்கிய வீரர்கள் இல்லாதது சற்று பின்னடைவே. ரோகித்துக்கு பதிலாக இளம் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி இடம் பெற உள்ளார். அஷ்வினுக்கு பதிலாக புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா இடம் பெறலாம்.

ஆஸ்திரேலியாவை போல இந்திய அணியும் வேகப்பந்துவீச்சில் வலுவாகவே உள்ளது. இஷாந்த், பூம்ரா, முகமது ஷமி அடிலெய்டில் அசத்தியிருக்கிறார்கள். இவர்கள் பெர்த்திலும் பட்டையை கிளப்புவார்கள் என நிச்சயம் நம்பலாம். இவர்களின் வேகத்திற்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, உயிரோட்டமான, பவுன்சர் எகிறும் பெர்த் ஆடுகளத்தில் அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். இதில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னிலையை அதிகப்படுத்துமா?  இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MauCylinderBlastUP

  உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • NorthEastSyriaTurkey

  சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

 • DutchKingIndiaVisit

  அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

 • SaddleridgeFire19

  கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

 • EcuadoranProtest2k19

  பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்து ஈக்வடார் நாட்டில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்: இதுவரை 7 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்