SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ் கட்டணம் உயர்வால் பக்தர்கள் வருகை குறைகிறது பவுர்ணமி கிரிவல நாட்களில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

2018-12-10@ 13:03:46

திருவண்ணாமலை : மாதந்தோறும் பவுர்ணமி கிரிவல நாட்களில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பஸ் கட்டண உயர்வால் பக்தர்களின் வருகையும் படிப்படியாக குறைந்து வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தென்இந்தியாவின் புகழ்மிக்க ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக  வழிபடப்படும் அண்ணாமலையார் சிவனாலயம் இங்கு அமைந்திருக்கிறது. மலைவடிவாக சிவன் காட்சியளிப்பதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையை’ வலம் வந்து வழிபடுகின்றனர்.


திருவண்ணாமலை கிரிவலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்கது. ஆனாலும், கடந்த 25 ஆண்டுகளில், பவுர்ணமி கிரிவலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. கிரிவல பக்தர்களின் வருகை அதிகரிப்பால், பல்வேறு வளர்ச்சிப்பணிகள் கிரிவலப்பாதையில் நடந்து வருகிறது. ஆனால், பவுர்ணமி கிரிவல நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகைதரும் வெளியூர் பக்தர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. பவுர்ணமிக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் கட்டண கொள்ளை நடக்கிறது. பயணிக்க தகுதியற்ற பஸ்கள் தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

சென்னை, பெங்களூர மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்கினால், வெளியூர் பக்தர்கள் சிரமம் இல்லாமல் திருவண்ணாமலை வந்து செல்ல வசதியாகவும், வாய்ப்பாகவும் அமையும். ஆனால், தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி போன்ற மிகப்பெரிய விழாக்களில்கூட, சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் போராடித்தான், தீபத்திருவிழாவுக்கு சிறப்பு ரயில்களை பெற வேண்டிய நிலை உள்ளது.


தொலைதூர நகரங்களில் இருந்து, பல மணி நேரம் பஸ் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், நெரிசலில் சிக்கித்திணறி, இருக்கை கிடைக்காமல் நின்று பயணித்து திருவண்ணாமலை வந்தடைகின்றனர். மேலும், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து சில கிமீ தூரம் நடந்து கடந்தால்தான், கிரிவலப்பாதையை அடைய முடியும். அதன் பிறகு, 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் செல்வது விவரிக்க வேதனையானது.

அதனால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருவோர் படும் அவதி அதிகம். இரவு கிரிவலம் முடிந்ததும், அதிகாலையில் சிறப்பு பஸ்கள் கிடைப்பதில்லை. எனவே, விடிய, விடிய கிரிவலம் செல்லும் பக்தர்கள், அதன்பிறகு வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும், கிரிவலத்தின் மீதுள்ள ஈடுபாட்டின் பக்தியின் காரணமாகவே பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக பஸ் கட்டண உயர்வு பக்தர்களின் வருகையை வெகுவாக பாதித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக பக்தர்கள் வருகையும் குறைய தொடங்கியிருக்கிறது.


கடந்த இரண்டு ஆண்டுகளில் பஸ் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துவிட்டது. அதிலும், பவுர்ணமி சிறப்பு பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, குடும்பத்துடன் கிரிவலம் செல்ல திட்டமிடுவது என்பது, நடுத்தர குடும்பங்களுக்கு மிகப்பெரிய பொருட்செலவாகும். எனவே, குடும்பம் குடும்பமாக கிரிவலம் வந்தவர்கள், குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே கிரிவலம் வரும் நிலைக்கு மாறிவிட்டது.

குறிப்பாக, சென்னை, பெங்களூரு மற்றும் திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை, பஸ் கட்டண உயர்வினால் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, விஷம் போல உயர்ந்துள்ள பஸ் கட்டணத்தைவிட, ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு. சாதாரண, நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு உகந்தது ரயில் கட்டணம். மேலும், திருவண்ணாமலை நகருக்குள் ரயில் நிலையம் அமைந்திருப்பதால், கோயிலுக்கும் கிரிவலத்துக்கும் பக்தர்கள் வந்து செல்வது எளிது. பஸ் பயணத்தைவிட, ரயில் பயணம் துயரில்லாதது.


ஆனால், பக்தர்களின் தேவை அறிந்து பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்க இதுவரை ரயில்வே நிர்வாகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.காட்பாடி- விழுப்புரம் இடையே திருவண்ணாமலை வழியாக மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதை கடந்த 2014ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்பிறகும், மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயக்கிய ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான தகுதியான வழித்தடம் அமைந்திருந்தும், திட்டமிட்டு ஆன்மிக நகரை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பது பொதுமக்களிடயே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்