SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் உள்ள இல்லத்தில் சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

2018-12-10@ 00:20:13

* மதசார்பற்ற கூட்டணி குறித்து ஆலோசனை * கருணாநிதியின் சிலை திறப்புக்கு அழைப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தியை சந்தித்து, கூட்டணி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், வருகிற 16ம் தேதி சென்னை  அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்றார். காலை 11.20 மணிக்கு சோனியா காந்தியின்  இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், அவரை சந்தித்து பேசினார். அப்போது, வருகிற 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி,  விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.அத்துடன், சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து, அஜயன் பாலா எழுதிய “செம்மொழிச் சிற்பிகள்” நூலினை வழங்கி  வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, மத்தியில் பாஜவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்தும்  பேசினார்.

மேலும், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் திட்டங்கள், கோரிக்கைகள், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். “மேகதாது அணை” கட்டுவது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும்  பேசினார். இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடம் நடந்தது. சந்திப்புக்கு பின் காலை 11.55 மணிக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு,  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து டெல்லி மின்டோரோ என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இன்று மு.க.ஸ்டாலின் டெல்லியில் தங்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். மத்தியில் நடந்து கொண்டிருக்கும் பாஜவுக்கு ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த  கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர் இரவே மு.க.ஸ்டாலின்  சென்னைக்கு திரும்புகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து மடல்
சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச்  செய்தி: “72வது பிறந்தநாள் கொண்டாடும்  நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு, திமுக சார்பில்,  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞரின்  மீது மாறாத பற்றும் பாசமும் கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக்  கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று,  தமிழர்களின்  நூற்றாண்டு கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச் செம்மொழியே எனப்  பிரகடனப்படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர்.

மதச்சார்பின்மைக்  கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும்,  அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில  இந்திய அளவில்  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத்  தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும்  பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க  செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா, நலமோடும் மகிழ்வோடும் நீண்ட  நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின்  வளர்ச்சிக்கும்  முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும்  விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SiberiaPolarBearStreet

  ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

 • RahulBirthday2k19

  கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

 • GrassBridgePeru

  ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

 • RoyalAscot2k19

  இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்