SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால் மேகதாது குறித்து விவாதிப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

2018-12-10@ 00:13:57

சென்னை: “எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பங்கேற்றால் மேகதாது அணை விவகாரம் குறித்து  நாங்கள் விவாதிப்போம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாளைய(இன்றைய) தினம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தி கூட்டி இருக்கிறார். மத்தியிலே நடந்து கொண்டிருக்கக்கூடிய மதவாதம் பிடித்த பிஜேபி ஆட்சிக்கு முடிவு கட்டக் கூடிய வகையில் ஒரு தரமான கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்தக் கூட்டத்திலேயே ஒரு நல்ல முடிவை எடுக்க இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு திமுக சார்பில் எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. எனவே, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நடைபெறக்கூடிய கூட்டத்திலே நான் பங்கேற்க இருக்கிறேன்.

வருகிற 16ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை சோனியா காந்தியால் திறந்து வைக்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி பங்கேற்க இருக்கிறார்கள். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், என்னுடைய தலைமையில் அந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து  நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு: 5 மாநிலங்களினுடைய தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது. அந்த முடிவுகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? தேர்தல் முடிவு வந்ததற்குப் பிறகு அந்த தாக்கத்தை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். கஜா புயல் சம்பந்தமாக ஏற்கனவே நீங்கள் அதிக அளவில் விஷயங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். இது சம்பந்தமாக டெல்லி செல்லும் போது பிரதமர் அலுவலகத்தில் ஏதாவது உங்களின் சார்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்படுமா? ஏற்கனவே பிரதமர் பார்வையிட வரவில்லை என்பதைக் கண்டித்து தொடர்ந்து நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். எனவே, இந்தச் சூழ்நிலையில் நீங்கள் கேட்பது போல பிரதமர் அலுவலகத்தை நாங்கள் சந்திக்கின்ற வாய்ப்பு நிச்சயமாக இல்லை.

ஏற்கனவே, தமிழக அரசின் சார்பில் அதற்குரிய வலியுறுத்தலை, வற்புறுத்தலை தொடர்ந்து அழுத்தம் தரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம். மேகதாது விவகாரம் குறித்து  சோனியா காந்தியிடம் எடுத்துச் சொல்லப்படுமா? நிச்சயமாக இந்தப் பிரச்னை குறித்து நாங்கள் விவாதிப்போம். அதுமட்டுமல்ல, நடைபெறவிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வர் பங்கேற்பார் என்று சொன்னால் அவரிடத்திலே நிச்சயமாக நாங்கள் இதுகுறித்து வலியுறுத்துவோம். இவ்வாறு பதில் அளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-03-2019

  21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்