SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கையை பிடித்து இழுத்தார்; தகாத வார்த்தைகள் பேசினார் காமராஜர் பல்கலை பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார்

2018-12-09@ 02:04:13

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்  திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறையின் ஆராய்ச்சி மாணவி கவிதா(25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கேரள மாநிலம், காயான்குளத்தை சேர்ந்த இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: நான் மதுரை காமராஜர் பல்கலை.யில் பிஎச்டி முழுநேர ஆராய்ச்சி மாணவியாக உள்ளேன். ஒன்றரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். எனக்கு வழிகாட்டி மற்றும் மேற்பார்வையாளராக துறைத்தலைவர் கர்ணமகாராஜன் நியமிக்கப்பட்டார். படிப்பில் சேர பல மாதங்கள் காலதாமதம் செய்ததால் 2 லட்சம் கொடுத்தேன்.  உரிய ஆய்வுப்பணிகளை முறையாக செய்து வருகிறேன். அவர் தனது அறையிலேயே இருக்கை தந்து அமரவைத்தார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூசகமாக தன் காம இச்சையை தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வந்தார்.
படிப்பை விட்டு விட்டு ஊருக்கே போகலாமா என்ற அளவில் டார்ச்சருக்கு ஆளானேன். கடந்த நவம்பரில் கேரள பல்கலை.யில் என் ஆராய்ச்சி படிப்பிற்கான தகவல் சேகரிப்பிற்கு ஒரு மாதம் அனுமதி கேட்டதற்கு முதலில் மறுத்தார். பல்வேறு முயற்சிக்கு பிறகு சம்மதித்தார். ‘‘தனியாக பேச வேண்டும். ரயில் நிலையத்தில் இறக்கி விடுகிறேன்’’ என்று
நெருங்கினார்.

பயந்து போன நான், கடந்த நவ.2ம் தேதி அவரிடம் தெரிவிக்காமல் சொந்த ஊருக்கு கிளம்பி விட்டேன். மாலை 4 மணிக்கு அவர் போன் செய்தும் எடுக்கவில்லை. எஸ்எம்எஸ், வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி தொடர்ந்து ‘ஆப்சென்ட்’ போடுவதாக மிரட்டினார். ஒரு மாதம் தகவல் சேகரிப்பு பணி முடிந்து திரும்பியபோது, எனக்கு ஒரு மெமோ கொடுத்து விரட்டி விட்டார். ‘என் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்’ என்றேன். அதற்கு, ‘உன் எதிர்காலம் நீ என்னிடம் நடந்து கொள்வதில்தான் இருக்கிறது’ எனக்கூறி என் கையைப் பிடித்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். கதறி அழுதேன். அதை தனது மொபைல் போனில் கர்ணமகாராஜன் வீடியோ எடுத்து ரசித்தார். பெல் அடித்து ஆபீஸ் ஊழியர்களை வரவழைத்து என்னை அலுவலகத்திலிருந்து விரட்டியடித்தார். மன அழுத்தத்தினால் விடுதி வாசலில் மயங்கி கீழே விழுந்தேன். என்னை பல்கலை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர் பாலியல் தொல்லை தந்து, மனஉளைச்சலை கொடுத்த துறைத்தலைவர் கர்ணமகாராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். புகார் தெரிவித்துள்ள மாணவிக்கு, திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

இதுகுறித்து கர்ணமகாராஜனிடம் கேட்டபோது, ‘‘நான் பெண்களிடம் மிக நாகரீகமாக நடப்பவன். அவர்களை மகள்போல பாவிக்கிறேன். மாணவி 4 மாதமாக பயிற்சிக்கு வரவில்லை. இதனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்தேன். அழுதபடி போன மாணவி மருத்துவமனையில் சேர்ந்தார். நான் அங்கும் போய் விசாரித்தேன். நான் கையை பிடித்து இழுத்ததாகவும், பணம் பறித்ததாகவும் தவறாக கூறி உள்ளார். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை விரைவில் தெரிவிப்பேன்’’ என்றார். ஏற்கனவே கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த வழக்கில், அவர் மற்றும் மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்மலாதேவி இப்பல்கலையில் புத்தாக்க பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் பேராசிரியர்கள் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி, சந்தானம் குழுவினர், சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மற்றொரு பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பேராசிரியர் முருகனின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம்  நடந்ததாக கூறி கர்ணமகாராஜனை சிபிசிஐடி விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicovalcano

  மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

 • modipuja

  உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்