SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 மாவட்டங்களில் 20 ஆயிரம் கோடியில் திட்டம் குழாய் மூலம் இயற்கை எரிவாயு சாத்தியமா?

2018-12-09@ 00:20:07

* விளை நிலங்கள் பறிபோகும் என விவசாயிகள் அச்சம்
* தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு
சேலம்: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை எடுத்து வந்து வீட்டு காஸ் இணைப்பு கொடுக்கும் திட்டம் ₹20 ஆயிரம் கோடியில் செயல்பாட்டுக்கு வருகிறது.  விளை நிலங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில்  எழுந்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம், அதிகளவு மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில், முதல் 15 நகரங்கள் பட்டியலில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளது என  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன்படி, அதிக மாசு ஏற்படுத்தும் வாகன எரிபொருள்  உபயோகம், சமையலுக்கு எல்பிஜி காஸ் உபயோகம், நிலக்கரி, விறகு போன்ற திட எரிபொருள் உபயோகம் போன்றவற்றை குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க  நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதுவரையில் நாடு முழுவதும் 402 மாவட்டங்களில் இத்திட்டத்தை  செயல்வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய 10  மாவட்டங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தை 8 ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வர ₹20 ஆயிரம் கோடி  செலவிடப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 3 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான முறையில் குழாய் மூலம்  வீட்டிணைப்பு வழங்கி, எரிவாயு உபயோகத்தை சிக்கனமாக்கவுள்ளனர்.

இதுபோக பெட்ரோல் பங்க்குகளில்,இயற்கை எரிவாயு நிரப்பும் மையங்களை தனியாக ஏற்படுத்தவுள்ளனர். அதில், கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட அனைத்து வகை வாகனங்களுக்கு இயற்கை  எரிவாயு நிரப்பிட இயலும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கும் இணைப்புகளை வழங்கி காற்று மாசை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு சென்னை  மற்றும் கொச்சியில் இருந்து 10 நகரங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டு வரவுள்ளனர். விளை நிலங்கள் வழியே இதனை எடுத்து வர திட்டமிட்டுள்ளனரோ என விவசாயிகள்  அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே கொச்சி-பெங்களூரு கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. விளை நிலங்கள் அதிகளவு பாதிக்கப்படுவதால், இத்திட்டத்தை கைவிட  வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர். அதேபோல், தற்ேபாது 10மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வரவுள்ள இயற்கை எரிவாயு விநியோக திட்டம் விளைநிலங்களை அழித்து விடுமோ என்ற  அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இத்திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய்களை பதித்து செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் காற்றை விட எடை குறைவான இயற்கை எரிவாயு  எவ்வித விபத்தையும் ஏற்படுத்தாது, குழாயில் இருந்துவெளியேறினாலும் எளிதில் காற்றில் கலந்துவிடும் என்கின்றனர். நாட்டில் தற்போது 28 லட்சம் வீடுகளில் இயற்கை எரிவாயு இணைப்பு உள்ளது. இதனை 1 கோடி இணைப்புகளாக  அதிகரிக்கவே 402 மாவட்டங்களில் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறோம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயற்கை எரிவாயு  விநியோக திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முழுக்க முழுக்க பாதுகாப்பாக இத்திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய்களை பதி த்து செயல்வடிவத்திற்கு கொண்டு  வருவோம். முதல் 2 ஆண்டிற்குள் பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவை நிரப்பும் பணி தொடங்கப்படும். பின்படிப்படியாக வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும்  என்கின்றனர் அதிகாரிகள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்