SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வனத்துறை கட்டுப்பாடுகளால் மூங்கில் கிடைக்காமல் தவிக்கும் புல்லாங்குழல் தயாரிப்பாளர்கள்: அரசு பள்ளிகளில் இசை ஒலிக்க ஏக்கம்

2018-12-09@ 00:20:05

செய்துங்கநல்லூர்: வனத்துறையின் கட்டுப்பாடுகளால் மூங்கில்கள் போதியளவு கிடைக்காமல் புல்லாங்குழல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர்.தூத்துக்குடி  மாவட்டம், வைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் வடகால் கரையில் உள்ள  மேலமங்களாபுரத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜ் (48). புல்லாங்குழல்  தயாரிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ள இவர், தனது தந்தை காளிமுத்துவிடமிருந்து  இக்கலையை கற்றுக்கொண்டார். புல்லாங்குழல் செய்வதற்கான மூங்கிலை  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து  வனத்துறை அனுமதியுடன் வெட்டி வருகிறார். அதன்பின்னர்  தேவைக்கேற்ப அதனை வெட்டி காயவைத்து பக்குவப்படுத்துகிறார். பின்னர் தீயில்  வாட்டி சுருதிக்கு தகுந்தவாறு தீயில்  சுடப்பட்ட கம்பியால் ஓட்டைகள் போட்டு  புல்லாங்குழலை உருவாக்குகிறார். இந்த புல்லாங்குழல் 60 ரூபாய் முதல் 1000  ரூபாய் வரை விற்கப்படுகிறது.புல்லாங்குழல்களில் 8 ஓட்டைகளுடன் கூடிய குழல்  கர்நாடக சங்கீதத்திற்கும், 6 ஓட்டை மீடியம் குழல் வெஸ்டன்  சங்கீதத்திற்கும், 8 ஓட்டை மீடியம் குழல் சாஸ்திரிய  சங்கீதத்திற்கும்  பயன்படுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்த பல வித்வான்கள் இவரது தயாரிப்பு புல்லாங்குழல்களை ஆர்வமாக வாங்குகின்றனர்.  இதுதவிர பிரபல சினிமா இசைக்குழுவினருக்கும் இவரது தயாரிப்புகள் சப்ளை  செய்யப்படுகிறது. இதுகுறித்து பட்டுராஜ் கூறும்போது, என்னுடைய தந்தை காளிமுத்து ஆரம்ப காலத்தில்  ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பூசாரி நடராஜ வல்லவராயரிடம்  புல்லாங்குழல் இசை படித்தார்.  அதன்பின் டவுன் கணபதியா பிள்ளை நடத்திய  கர்நாடக இசைக்கச்சேரியில் பக்க வாத்தியமாக புல்லாங்குழல் இசைத்து வந்தார். அந்த  சமயத்தில் புல்லாங்குழல்களை தயாரிக்க வேண்டும்  என அவருக்கு ஆசை வந்தது.  இதற்காக சென்னை சென்ற அவர் அனந்தராம அய்யர் என்பவரிடம்  புல்லாங்குழல் செய்ய கற்றுக் கொண்டார். பின் மேல மங்களபுரம் வந்து  இங்கேயே  புல்லாங்குழல் தயாரிக்க ஆரம்பித்தார். அவருடன் நான் சிறு வயதில்  இருந்தே அருகிலிருந்து இதனை கற்றுக் கொண்டேன்.

நெல்லை மாவட்ட வனப்பகுதி புலிகள் சரணாலயமாக உள்ளதால் இங்கு மூங்கில்கள் வெட்டி எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனால் சிலவேளை கேரளாவிலிருந்தும்  வனத்துறையிடம் அனுமதி பெற்று ஒரே தரமான 100  மூங்கில்களை எடுத்து வந்தால் அதில் 20 முதல் 30  புல்லாங்குழல்களே தயாரிக்க முடிகிறது. மூங்கில்களை நன்றாக காய வைக்க  வேண்டும். அதன் பின் தேர்ந்தெடுத்து  நேர்த்தியாக துளை போடவேண்டும். பின்னர் அதை வாசித்து எத்தனை கட்டை என  தரம் பிரிக்க வேண்டும். சில வேளையில் ஓட்டை போட்ட பின்பு கூட வாசிக்க  இயலாத  புல்லாங்குழலாகி விடும். இதனால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறை கட்டுப்பாடுகளால் தரமான மூங்கில்கள் கிடைப்பதில்லை. விதிமுறைகளை தளர்த்தி வெட்டிக்  கொள்ள அனுமதித்தால் மட்டுமே என் போன்ற தயாரிப்பாளர்களால் தொழில் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் இசை வகுப்புகள் ஏதும் நடத்தப்படுவதில்லை. நகர்ப்புறங்களில் பலர் தனியாக வகுப்பெடுக்கின்றனர். ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே தங்கள்  குழந்தைகளை இசை வகுப்புகளில் சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் நியமித்து புல்லாங்குழல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தால் என்னைப்போன்ற பல கலைஞர்கள்  வாழ்வில் ஒளி பிறக்கும். மாணவர்களுக்கும் மன அழுத்தம் குறைந்து படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடியும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்