SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களின் வரிப்பணம் 1,700 கோடி வீணாகும் அவலம் பயன்பாட்டுக்கு வருமா கிராம சேவை மைய கட்டிடங்கள்: திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை

2018-12-09@ 00:20:00

வேலூர்: தமிழகம் முழுவதும் ₹1,700 கோடிக்கும் மேல் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடங்கள் திறக்கப்படாமல் சிதிலமடைந்து வருவதாக புகார்  எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தில் கோடிக்கணக்கில் நிதி சுருட்டப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறையிலேயே கோரிக்கை  எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்களை எளிதில் பெறுவதற்காக இ-சேவை மையங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, தாலுகா  அலுவலகங்களில் தொடங்கப்பட்டன. இங்கு வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது,  ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை படியெடுப்பது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் எளிதில் கிடைக்கின்றன. அதேநேரத்தில் கிராமப்புற மக்கள் வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறைகளின் திட்டங்கள் மானியங்களை பெற அருகில் உள்ள நகர்ப்பகுதிகளுக்கு சென்று  விண்ணப்பங்களை வாங்கி சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மேலும் மின்கட்டணம் உட்பட கட்டணங்களை செலுத்தவும், கிராமங்களில் வசதியில்லை. தற்போது தாலுகா அலுவலகங்கள்  மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இ சேவை மையம் என்ற பெயரில் ஆன்லைனில் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை செயல்பாட்டில் உள்ளது.இம்மையங்களில் இருப்பிடச்சான்று, வருவாய் சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றுக்கு  விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா மாறுதல் போன்ற  வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புற மக்களுக்கு இச்சேவையை  மேலும் விரிவுபடுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கிராம சேவை  மையம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது.

இம்மையத்தில் அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டது.  மேலும் ரயில் டிக்கட் முன்பதிவு போன்ற சேவைகளையும் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ₹14 லட்சம் ஒரு மையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் 12,524 ஊராட்சிகளில் ஏறத்தாழ ₹1,750 கோடி மதிப்பீட்டில் கிராம  சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டிடங்கள் கட்டப்பட்டு இதுவரை  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.இதுபோல் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1,603 ஊராட்சிகளில் கிராம சேவை மையங்கள் கட்ட திட்டமிடப்பட்டு 90 சதவீதம் ஊராட்சிகளில் பணி முடிந்து கட்டிடங்கள் இன்னும்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. அதேநேரத்தில் 10 சதவீத ஊராட்சிகளில் கட்டிடப்பணி அடித்தளத்துடனும், அரைகுறையாகவும் முடிக்கப்பட்டுள்ளதாக புகார்  எழுந்துள்ளது. பல மாவட்டங்களில் கிராம சேவை மையங்களுடன் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடங்கள், பொதுகழிப்பறைகளும் கிராம சேவை மையங்கள் அருகிலேயே கட்டப்பட்டு அவையும்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் ₹3 ஆயிரம் கோடிக்கு மேல் வீணாவதாகவும், கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால்  சிதிலமடைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், இத்திட்டத்தில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் கட்டப்பட்ட கட்டிடங்களும் தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் மூலம்  கோடிக்கணக்கில் கிராம சேவை மைய கட்டிடங்கள், மகளிர் குழு கட்டிடங்கள், பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே, கிராம சேவை மைய கட்டிடங்களில் மின்இணைப்பு, கணினி வசதி, இன்டர்நெட் வசதியுடன் தேவையான பணியாளர்களையும் நியமித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன்  மூலம் கிராம மக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே  தங்களுக்கு தேவையான அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது, உரிய சான்றிதழ்கள், ஆவணங்களை பெறுவது போன்ற சேவைகளை பெற  முடியும். அதேபோல் இத்திட்டத்தில் கோடிக்கணக்கில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்