SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 மாநில வாக்குப்பதிவுக்கு பிந்தைய மக்களின் மனநிலை: கருத்துக்கணிப்பு முடிவுகளால் பாஜ அதிர்ச்சி

2018-12-08@ 21:45:15

புதுடெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜ ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரும்பான்மையான கருத்துக்கணிப்பில் கூறப்படுவதால், அக்கட்சி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 2019ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதவாக்கில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் நேற்று வரை சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் முடிந்தன. இந்த மாநிலங்களில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் பாஜவும், மிசோரமில் காங்கிரசும், ெதலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் 5 மாநில தேர்தல் குறித்து  பல்வேறு அமைப்புகள் நடத்திய வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்றும், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜ - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், மிசோரமில் மிேசா தேசிய முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.முன்னதாக நேற்று நடந்த தேர்தலில் ராஜஸ்தானில் 73.85 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.பொதுவாக 2 மாநிலங்களிலும் தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில், ராஜஸ்தானின் அல்வரில் உள்ள ஒரு கிராமத்தில் வாக்குச்சாவடியை நோக்கி அத்துமீறி செல்ல முயன்ற நபர்களை தடுப்பதற்காக துணை ராணுவப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதேபோல், பிகானீரின் கோலயாத் பகுதியில் வாக்குச்சாவடி முன் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. ஓரிரு வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்தமாக தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

ராஜஸ்தானில் ஜல்ராபதான் தொகுதியில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பாஜ மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் களத்தில் உள்ளார். கடந்த தேர்தலில் 160 இடங்களில் பாஜவும், 25 இடங்களில் காங்கிரசும் வெற்றி பெற்றன. தெலங்கானாவை பொறுத்தவரை 119 தொகுதிகளில், தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் தெரிவித்தார். ஆனால், அமங்கல் பகுதியில் வாக்குப்பதிவு நடைமுறையை பார்வையிடச்சென்ற காங்கிரஸ் வேட்பாளர் வம்சிசந்த் ரெட்டியை, பாஜ தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு மேல் பல்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்களும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய முடிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. 5 மாநில கருத்துக்கணிப்பு முடிவுகளில், பாஜ ஆளும் 3 மாநிலங்களும் தனிப்பெரும்பான்மை அல்லது ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்ப முடியாத நிலையில் முடிவுகள் தெரிவிப்பதால், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் உறைந்துபோய் உள்ளனர். இவை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் துவங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வந்தால், இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜவுக்கு அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும், மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

 • 21-05-2019

  21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • russiabicycle

  ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

 • canadaplastic

  கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்