SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கு அழைப்பு: டிச. 22-ல் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

2018-12-08@ 19:05:54

புதுடெல்லி: வரும் 22ம் தேதி டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அனைத்து மாநில நிதியமைச்சர் முன்னிலையில் நடக்கவுள்ளதால், அடுத்தாண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலை மையப்படுத்தி சில பொருட்களின் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு இலக்காக ரூ. 12 லட்சம் கோடி வரிவசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. அவ்வப்போது மத்திய நிதியமைச்சர் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அந்தந்த மாநில நிதியமைச்சர் முன்னிலையில் நடத்தப்படும். அதில், சில வரிகள் திருத்தம், குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்படும்.

இந்நிலையில் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் வரும் 22ம் ேததி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக நிதி அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தற்போது 5 மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடப்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு சில வரிக்குறைப்பு முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.தற்போது, 35 பொருட்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இவற்றில் பல பொருட்களை குறைவான வரி எல்லைக்குள் கொண்டுவருவது குறித்து மாநில நிதியமைச்சர்கள் மத்தியில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும்,சில பொருட்களுக்கு 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீத வரிக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஏசி, டிவி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது. ஆடம்பர பொருட்கள் பட்டியலில் உள்ள சில பொருட்கள் மீதான வட்டி விகிதங்கள் 18 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்ஜெட் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளதால், ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் மக்களைக் கவர மத்திய அரசுக்கு வாய்ப்புகள் உள்ளதாக, பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். விழாக் காலத்தில் மக்கள் அதிகம் நுகர்வதை ஊக்குவிக்கக் குளிர் சாதன பெட்டி, வாஷிங் மெஷின், எலக்ட்ரிக் சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பல கைவினை பொருட்களின் ஜிஎஸ்டி விகிதத்தை ஜூலை மாதம் குறைத்தனர்.

வர இருக்கும் இடைக்கால பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறைக்கு இப்படி வரி விகிதத்தினைக் குறைத்ததும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் மத்திய அரசு 7.76 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டி கீழ் வசூலித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு 12 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்வதை இலக்காக வைத்துள்ளதாக ஜிஎஸ்டி மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய நிதித்துறை ஆலோசகர் நியமனம்: மத்திய நிதித்துறையின் ஆலோசகராக கிட்டதிட்ட நான்காண்டுகளாக இருந்த அரவிந்த் சுப்ரமணியம், ஜிஎஸ்டி விவகாரம் தொடங்கி பல்வேறு முக்கிய விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார். மீண்டும்  ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதாக கூறி, கடந்த ஜூன் மாதம் நிதித்துறை ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் நாட்டின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

 • 17-12-2018

  17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்