SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐநா.வில் அமெரிக்கா ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட ஹமாசுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

2018-12-08@ 01:23:19

ஐ.நா: ஹமாஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 32 நாடுகள் பங்கேற்கவில்லை. பொதுச் சபையில் மூன்றில் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர், இஸ்ரேல் பகுதிக்குள் அடிக்கடி ராக்கெட் குண்டுகளை வீசி வன்முறையை தூண்டுகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பாவி மக்கள் அதிகளவில் பலியாகின்றனர். காசா எல்லையில் சுரங்க பாதைகள் அமைத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு ஐ.நா பொதுச் சபையில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன் நேற்று பேசிய ஐ.நா.வின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹேலே, ‘‘இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் 500க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரப்படவில்ைல’’ என பேசினார்.

அதன்பின் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 87 ஓட்டுகளும், எதிராக 58 ஓட்டுக்களும் கிடைத்தன. இந்தியா உட்பட 32 நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தன. ஐ.நா பொதுச் சபை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இந்த தீர்மானத்துக்கு கிடைக்காததால், இது தோல்வியடைந்தது. இது குறித்த நிக்கி ஹேலே கூறுகையில், ‘‘ ஐ.நா உறுப்பு நாடுகள் சரியான நடவடிக்கை மேற்கொள்ள இந்த தீர்மானம் ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் இது தோல்வியடைந்து நியாயமற்றது. வேறு எந்த நாட்டின் மீதான தீவிரவாத நடவடிக்கைக்கு நாம் கண்டனம் தெரிவிக்க தயங்க மாட்டோம். ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு நாம் கண்டனம் தெரிவிக்க முடியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலால் அதிகம் பாதிக்கப்படுவது பாலஸ்தீன மக்கள்தான்’’ என்றார்.

இஸ்ரேல் தூதர் டேனி டான் பேசுகையில், ‘‘ஐ.நா. மீண்டு எழ இந்த தீர்மானம் ஒரு வாய்ப்பாக இருந்தது. இதற்கு எதிராக வாக்களித்தவர்கள் வெட்கப்பட வேண்டும். ஹமாஸ் தீவிரவாதிகள் காசா மக்களை நாசம் செய்கிறார்கள். சர்வதேச விதிமுறைகளை மீறி ஹமாஸ் இயக்கம் செயல்படுகிறது. ஹமாஸ், அல்-கய்தா, போகோ ஹரம் தீவிரவாதிகள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை’’ என்றார். இதற்கு பதில் அளித்த சவுதி அரேபிய பிரதிநிதி, ‘‘கடந்த 1967ம் ஆண்டிலிருந்து ஐ.நா. பொதுச் சபை கொண்டு வந்த எந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதித்ததில்லை’’ என்றார்.

தலிபான் புதிய தலைவர்களுக்கு தடை விதிக்காததற்கு கண்டனம்

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி ஈனாம் காம்பீர் பேசியதாவது: சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச தீவிரவாத பட்டியலில், உலகில் நடைபெறும் தீவிரவாத செயல்களில் 4ல் ஒரு பங்கு ஆப்கானிஸ்தானில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்னையை தீர்க்க ஐ.நா ஒன்றும் செய்யவில்லை. தலிபான் அமைப்பின் புதிய தலைவர்களுக்கு தடை விதிக்கவும், மறைந்த தலிபான் தலைவர்களின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளிக்க மறுக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவினால்தான், உலகம் முழுவதும் அமைதி நிலவும் என்பதை நாம் கடந்த கால பாடங்களில் இருந்து நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

 • jetairweys_delli11

  வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்