SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொருளாதார தடையை மீறி ஈரானுடன் ரகசிய வர்த்தகம்: வாவெய் டெலிகாம் நிறுவனத்தின் பெண் அதிகாரி கனடாவில் கைது

2018-12-07@ 02:30:21

ஒட்டவா: சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வாவெய் உயர் பெண் அதிகாரியும் நிறுவனரின் மகளுமான மெங்க் வான்ஜூ கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அமெரிக்கா மீது சீனா ஆத்திரமடைந்துள்ளது.  சீனாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் வாவெய் டெக்னாலஜிஸ் லிமிடெட். இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 170 நாடுகளுக்கு செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் நிறுவனர் ரென் ஜெங்பை, சீன ராணுவத்தின் முன்னாள் பொறியாளர். இவரது மகள் மெங்க் வான்ஜூ. ஹவாய் நிறுவனத்தின் உயர் நிதி அதிகாரியாக உள்ளார்.

வாவெய் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களை தனது ஊழியர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. மேலும், அமெரிக்க உளவுத்துறை ஹவாய் நிறுவன செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், கனடாவின் வான்கூவரில் கடந்த 1ம் தேதி வாவெய் நிறுவனரின் மகள் மெங்க் வான்ஜூ கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர், ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை மீறி வர்த்தக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், கனடாவில் கைது செய்யப்பட்ட மெங்க், விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். ரகசியமான இந்த கைது நடவடிக்கை, அர்ஜென்டினாவில் ஜி20 மாநாடு நடக்கும் சமயத்தில் நடந்துள்ளது. அப்போதுதான், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர்கள் டிரம்ப்-ஜின்பிங் சமரசம் செய்து கொண்டனர். இதற்கிடையே, மெங்க்கின் கைது சீனாவை ஆத்திரப்படுத்தி உள்ளது.

‘‘கைதுக்கான முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை. இது மனித உரிமையை மீறும் செயல். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவிக்கிறது’’ என ஒட்டவாவில் உள்ள சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே போல, எந்த விதிமுறையையும் தாங்கள் மீறி செயல்படவில்லை என
வாவெய்  நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் அமெரிக்கா-சீனா வர்த்தக உறவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ஹாங்காங், ஷாங்காங் பங்கு சந்தையும் நேற்று வீழ்ச்சியை சந்தித்தது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் இசட்.டி.இ. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது 7 ஆண்டு தடையை அமெரிக்கா விதித்தது. அந்நிறுவனம் வடகொரியா, ஈரான் மீதான பொருளாதார தடையை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளை முந்திசாதித்த வாவெய்
தகவல் கசிவு, ஒட்டு கேட்கப்படுதல் உள்ளிட்ட தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் அம்சங்கள் இருப்பதால் வாவெய் நிறுவனத்தின் உபகரணங்களை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சமீபத்தில் நிராகரித்தன. இங்கிலாந்தின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான பிடி நிறுவனமும், வாவெய் உபகரணங்களை நிராகரிப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது.  அமெரிக்க சந்தையிலும் இது நிராகரிக்கப்பட்டாலும், இந்தாண்டின் 2ம் காலாண்டில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தை முந்தி உலகிலேயே அதிக செல்போன் தயாரிக்கும் 2வது நிறுவனம் என்ற சாதனையை வாவெய் படைத்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

 • 20aacident_died11

  சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்