SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரவையில் கண்டன தீர்மானம்: மேகதாது அணை கட்ட வழங்கிய அனுமதியை உடனே வாபஸ் பெற வலியுறுத்தல்

2018-12-07@ 00:02:57

சென்னை: கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு  அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்க மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள்,  பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக தமிழக பேரவையை கூட்டி மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்  மற்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர்.இதை ஏற்று, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் 6ம் தேதி (நேற்று) மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும், துணை முதல்வரும் பேரவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  முன்மொழிந்தார்.அந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது:இந்த மாமன்றத்தில் 5-12-2014, 27-3-2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன்அனுமதி பெறாமல, கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்பதையும் மீறி, தற்பொழுது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்ப  கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாகஅணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள குழுமம் 22-11-2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் இந்த மாமன்றம் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறது.மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அந்த குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மன்றம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, கர்நாடகவில் உள்ள காவிரி படுகையில், மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் அனுமதியின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.இதைத்தொடர்ந்து, தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் மற்றும் தமிமுன்அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), டி.டி.வி.தினகரன் (அமமுக) ஆகியோரும் பேசினர். இவர்கள் அனைவரும் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிப்பதாக தெரிவித்தனர். சபாநாயகர் தனபாலும், தீர்மானத்துக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு  தமிழக அரசின் கடும் கண்டனம் மற்றும்  எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அல்லது வேறு எந்தவொரு காவிரி நீர் வழித்தடத்திலும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படுவதாக சபாநாயகர் தனபால் கூறினார். பின்னர், அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதை பாராட்டி மேஜையை தட்டி அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

தற்காலிக ஏசிகள் அமைப்பு
சட்டப்பேரவை கூடும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென  சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், அவசரம் அவசரமாக சட்டப்பேரவை கூடும் இடத்தில் தற்காலிகமாக 16 ஏசிகள் அமைக்கப்பட்டிருந்தன.

முடிவில் மாற்றமில்லை கர்நாடக அரசு பிடிவாதம்
பெங்களூரு: கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் ெபங்களூருவில் நேற்று கூறியதாவது: தமிழக அரசிடம் நேரடியாகவோ அல்லது மத்திய அரசின் மூலமாகவோ திட்டம் குறித்து விளக்க கர்நாடகா தயாராக  உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதமும் எழுதியுள்ளேன். இந்த அணை தமிழக அரசுக்கு சொந்தமான இடத்திலேயோ அல்லது தமிழகத்தின் நிதியிலேயோ கட்டப்படவில்லை. கர்நாடக அரசின் நிதியில் கர்நாடக  எல்லையில் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தால்   தமிழகத்திற்கு தான் 95 சதவீத பலன் உள்ளது. அணை கட்டும் முடிவில் மாற்றமில்லை. மேகதாது  அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து   கொள்ளாமலேயே சிறப்பு சட்டமன்றத்தை ஏன் கூட்டினார்கள் எனத் தெரியவில்லை.  மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது. அந்த  வழக்கை  சட்ட ரீதியாக அணுகுவதுடன் உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து  வழக்கில் வெற்றி பெறுவோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்