SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சின்னா பின்னமான பூங்கா... கேள்விக்குறியான பாதுகாப்பு... சொத்தவிளை பீச் சொர்க்க பூமியாக மாறுமா?

2018-12-06@ 20:32:00

சுசீந்திரம்: விஐபிக்கள் தொடங்கி சாதாரண மக்களும் விடுமுறை நாட்களில் குடும்பமாக சென்று பொழுதை கழிக்க குமரியில் இடங்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம், கன்னியாகுமரி, வட்டக்கோட்டை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த இடங்கள் அனைத்தும் அதிகாரிகளின் மெத்தனபோக்கால் போதிய பராமரிப்புகள் இல்லாமல் உள்ளன.இது தவிர அடிப்படை வசதிகள் என்பது மருந்துக்கு கூட இல்லை என்ற குற்றச்சாட்டு அனைவரது மத்தியிலும் எழுந்து இருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரு சுற்றுலா பகுதிதான் சொத்தவிளை பீச். குமரியின் நீளமான கடற்கரை பகுதி என்ற சிறப்பும் இந்த கடல் பகுதிக்கு இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்றில்லாமல் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் அங்கிருந்து நேராக சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சொத்தவிளை பீச்சுக்கு வருகின்றனர். முன்பு வந்து சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பஸ்வசதிகள் அதிகமாக இருந்தன. இதனால் பீச் பகுதியும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சொத்தவிளை பீச்சுக்கு வருகின்ற சாலை, ஓகி புயலின் கோர தாண்டவத்தால் பெருத்த சேதமானது. சிறிய வாகனங்கள் கூட சென்று வர முடியாத அளவுக்கு அந்த சாலை துண்டு துண்டாகி விட்டது. இதையடுத்து பஸ் போக்குவரத்தும் அதிரடியாக துண்டிக்கப்பட்டது. நாளடைவில் சுற்றுலா பயணிகளும் சொத்தவிளை பீச்சை மறந்தனர்.இந்த நிலை இப்போதுவரை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. சொத்தவிளை பீச்சில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பொழுது போக்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட பூங்காவில் தற்போது எந்தவித வசதிகளும் இல்லை என்பது வேதனையான ஒன்று. தற்போது சின்னா பின்னமாகி பூங்காபோல் இல்லாமல் பெரும் அலங்கோலமாக காணப்படுகிறது. குழந்தைகள் விளையாடும் சறுக்குகள், ஊஞ்சல்கள் தொடங்கி ஓய்வு எடுப்பதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப்புகள் வரை அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இவற்றை சரி செய்வதற்கான எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை. இதே போல் பாதுகாப்பு வசதி என்பதும் ஒரு பெரும் கேள்வி குறியாகி உள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்றார்கள் என்பதை தெரிந்தும் ஏனோ சம்பந்தப்பட்ட போலீசார் மருந்துக்கு கூட அந்த பகுதியை எட்டிபார்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக எழுந்து இருக்கிறது. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக போய்விட்டது. வருகின்ற போகின்ற சுற்றுலா பயணிகளை வழி மறித்து பணம், நகையை பறிப்பது ஒருபுறம் அதிகமாகவே அரங்கேறுகிறது.
இது தவிர கடலில் பாதுகாப்பு வேலிகள் என்று எதுவும் அமைக்கவில்ைல. ஆகவே ஆனந்தமாய் குழிக்கின்றவர்கள் ஆர்வ கோளாறால் ஆழமான பகுதிக்கு சென்று விடுகின்றனர். ராட்சத அலைகள் அவர்களை இழுத்து சென்று விடுகின்றன. சமீபத்தில் மாணவர்கள் உள்பட 3 பேரை இழுத்து சென்று இருப்பதாக அந்த பகுதிைய சேர்ந்த பொது மக்கள் கூறுகின்றனர்.

குடும்பமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று ஆசையில் வருகின்றவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் ஆகியவை சரியான முறையில் இல்லாததால் பொது மக்கள் சொத்தவிளை பீச்சை முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானமும் பறியோய்விட்டது. தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக சொத்தவிளை பீச் மாறிவிட்டது.இதை நிரூபிக்கும் வகையில் பயணிகள் அமர்ந்து இருக்கின்ற இடங்களில் மது பாட்டில்கள் கிடப்பதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. சொத்தவிளை பீச்சை உரிய முறையில் பராமரித்து, கூடுதல் வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் விடுமுறை நாளில் பொது மக்கள் கூட்டமாக வந்து பொழுதை கழிக்க வசதியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இதன் மூலம் அரசுக்கு வருமானமும் இரட்டிப்பாக வரும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்களின் கோரிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்