SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் அடிலெய்டில் ஆஸி. - இந்தியா பலப்பரீட்சை: கோஹ்லி & கோவுக்கு சவால்

2018-12-06@ 00:34:45

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், அடுத்து 4 போட்டிகள்  கொண்ட கடினமான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சாதிக்க முடியாமல் தடுமாறி வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.குறிப்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோக வரலாற்றை மாற்றி எழுதும் கடுமையான சவாலை கோஹ்லி & கோ எதிர்கொண்டுள்ளது. சூப்பர்  பார்மில் இருப்பதுடன், உலகின் நம்பர் 1 வீரராகவும் ரன் மெஷினாகவும் விளங்கும் கோஹ்லி, இம்முறை வெற்றிகளைக் குவித்து சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் கோஹ்லி அபாரமாக விளையாடி ரன் குவித்தும், சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அணி தோல்வியைத் தழுவ நேரிட்டது. எனவே, அனைத்து வீரர்களும்  ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆஸி. அணி பிளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில், இந்தியா 12 வீரர்கள் அடங்கிய அணியை நேற்று வெளியிட்டது.  ஐந்து பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்துக்கு விடை கொடுக்கப்பட்டு பூம்ரா, இஷாந்த், ஷமி வேகக் கூட்டணியுடன் அஷ்வின் சுழல் என தாக்குதல் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.6வது வீரராகக் களமிறங்குவதில் ரோகித் ஷர்மா, ஹனுமா விஹாரி இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்று காலை தெரியவரும். இளம் வீரர் பிரித்வி ஷா காயம் காரணமாக  விளையாட முடியாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. லோகேஷ் ராகுல், முரளி விஜய் இருவரும் இன்னிங்சை தொடங்க உள்ளனர். பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக சதம் விளாசிய விஜய் மிகுந்த  நம்பிக்கையுடன் களமிறங்குகிறார். அதே சமயம், ராகுல் கணிசமாக ரன் குவித்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

புஜாரா, கோஹ்லி, ரகானே, பன்ட் என்று நடுவரிசை பலமாக இருந்தாலும், குறைந்தபட்சம் இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப் அமைவது மிக அவசியம். புற்களுடன் கூடிய ஆடுகளத்தில் இந்திய வேகங்கள் மிரட்டுவார்கள் என  எதிர்பார்க்கலாம். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஸ்மித், வார்னருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆஸி. அணியை பலவீனப்படுத்தி உள்ளது. அந்த அணியில் தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் அறிமுகமாகிறார்.  ஆஸ்திரேலியாவும் 3 வேகம் + ஒரு ஸ்பின்னர் என்ற பந்துவீச்சு வியூகத்துடன் களமிறங்குவது சுவாரசியத்தை அதிகமாக்கி உள்ளது.இரு அணிகளுமே தொடரை வெற்றிகரமாகத் தொடங்கும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

அணிகள்:
இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், இஷாந்த்  ஷர்மா, ஜஸ்பிரித் பூம்ரா, முகமது ஷமி (ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பார்திவ் பட்டேல், பிரித்வி ஷா, உமேஷ் யாதவ்).ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ்,  ஜோஷ் ஹேசல்வுட்.

* அடுலெய்டு மைதானம் கோஹ்லிக்கு மிக ராசியானதாக கருதப்படுகிறது. இங்கு அவர் 3 சதம் விளாசி உள்ளதுடன் சராசரியாக 98.50 ரன் குவித்துள்ள்ளார்.
* 2014-15 டெஸ்டில் விளையாடிய ஆஸி. அணியில் நாதன் லயன் மட்டுமே இடம் பெற்றுள்ளார் (மிட்செல் மார்ஷ் சேர்க்கப்படவில்லை). இந்திய அணியில் 7 வீரர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
* கடந்த 70 ஆண்டுகளில் ஆஸி. சென்று விளையாடிய 44 டெஸ்டில், இந்தியா 5 வெற்றி மட்டுமே கண்டுள்ளதுடன், ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியதில்லை.
* 2003-2004 தொடரில் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் ராகுல் டிராவிட், அஜித் அகர்கரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
* ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில் ஒரு டிரா, 4 தோல்வி கண்டுள்ளது. இந்தியா 3 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்