SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகை மாற்றும் திறனாளிகள் !

2018-12-03@ 16:24:26

மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. மக்களைத் திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு அளிக்கச் செய்வது, மாற்றுத் திறனாளிகளுக்கு  எதிர்வரும் காலத்தில் பெரும் அளவில் வாய்ப்புகளை வழங்குவதற்கான அடிப்படைகளை உருவாக்க, மாற்றுத்  திறனாளிகளின் உரிமை குறித்த கருத்தரங்கு மற்றும் இலக்குகளின் நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகளை மதிப்பிடுவது போன்ற இவையாவும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கம்.

ஆரோக்கியம் மட்டுமே பிரச்னை அல்ல

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஆரோக்கியம் மட்டுமே பிரச்னை அல்ல. மாறாக, அது மனித உடலுக்கும் அதனை சூழ்ந்திருக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பைப் பிரதிபலிக்கும்  ஒரு சிக்கலான நிகழ்வாக இருக்கிறது. ஊனம் என்பது உடல் அல்லது மனக் குறைபாடுகளை மட்டுமன்றி மனநலிவு, தண்டுவட மரப்பு, பெருமூளை வாதம் போன்ற நோய்களையும் உள்ளடக்கியது.

இந்தக் குறைபாடுகளால் உடலியக்கம் பாதிக்கப்படுவதால் இதற்கு விரிவான மருத்துவப் பராமரிப்புகள் தேவைப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றவர்களுக்கு ஏற்படும் மேலும் சில நோய் பாதிப்புகளோடு முதுமை சார்ந்த பிரச்னைகளும் உண்டாக வாய்ப்புள்ளது. ஏதோ ஒரு வகையில் குறைபாடு உடையவர்கள் உலகில் 100 கோடி மக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 557 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.

இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவிகிதம். இவர்களில் ஆண்கள் 1 கோடியே 49 லட்சம் பேரும், பெண்கள் 1 கோடியே 18 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உடலியக்கக் குறைபாடு (கை, கால் செயலிழப்பு) செவித்திறன், பார்வை தொடர்பான குறைபாடு  உடையவர்கள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் வகைபாடு

மாற்றுத் திறனாளிகளை அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் உடல் உறுப்புகளில் குறைபாடு  உடையோர், பார்வைக் குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர், மனவளர்ச்சி மற்றும் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுடையவர்கள் (Multiple Disability) என்று ஆரம்பத்தில் 5 வகைகளாகப் பிரித்திருந்தனர்.

ஆனால் தற்போது இதோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து 22 வகைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் பாதிப்பிற்குள்ளானவர்கள், மூளை முடக்குவாதம், உயரக் குறைபாடுடையவர்கள், தசை அழிவு நோய், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், பகுதியளவு பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் பார்வை  இழந்தவர்கள், பகுதியளவு செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் முழுவதும் செவித்திறன் இழந்தவர்கள், முழுவதும் பேச்சுத்திறன் இழந்தவர்கள், வாசித்தல், சொல் அல்லது எழுத்து விளக்க இயலாமை போன்ற மேலும் சில கற்றல் குறைபாடுகள், கவனச்சிதறல் குறைபாடு, மனநோய்கள் என்று அவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இந்த பட்டியலில் Multiple Sclerosis மற்றும் நடுக்குவாதம் போன்ற நரம்பியல் சார்ந்த நோய்கள், ஹீமோபிலியா என்கிற ரத்த ஒழுக்கு நோய், தலசீமியா என்கிற ரத்த அழிவுச் சோகை நோய், Sicklecell Disease என்கிற ரத்தசோகை நோய் போன்றவையும் இணைந்துள்ளது.

எதிர்கொள்ளும் பிரச்னைகள்

போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளின்மை, மருத்துவ பராமரிப்பு அளிக்க முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, நவீன காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டுமான வசதிகளின்மை போன்ற பிரச்னைகள் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியக் கொள்கை 2006-ன் கீழ் சில திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் அது எல்லோருக்கும் கிடைக்கும்படி நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். மாற்றுத் திறனாளிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் இல்லாததே இதுபோன்ற திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு தடையாக உள்ளது.

சமூகப் புறக்கணிப்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான மக்களின் மனோபாவமும் இன்று அவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. சிலர் அவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றனர். ஆனால் சிலர் அவர்களை அலட்சியப்படுத்துவதோடு, எள்ளி நகையாடுகின்றனர். மேலும் அவர்களுடைய உணர்வுகளை சரியாக புரிந்து கொள்வதில்லை. நாம் அவர்களைப் பார்த்து நகைக்காமல் பொறுப்போடு நடந்து கொள்வதோடு, அவர்களுக்கு சரியான முறையில் ஆதரவளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தாண்டி, அவர்கள் ஒரு குடும்ப உறுப்பினராகவும், சமூக அங்கமாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களுடைய உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும். அவர்களுடைய திறமைக்கான வாய்ப்புகளை வழங்கி, அங்கீகரிக்க வேண்டும். அவர்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதை பூர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆர்வமும் உண்டு. மாற்றுத் திறனாளிகளை ஒரு சுமையாக கருதும் நமது பார்வையை மாற்றிக் கொள்வோம். நாம் அவர்களுக்கு அன்பு, ஆதரவு மற்றும் பராமரிப்பை வழங்குவதோடு, நட்புணர்வுடன் அவர்களோடு ஒரே சமூகமாக இணைந்து வாழ்வோம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிப்போம் !

* பொது போக்குவரத்து வசதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடமளிப்பதோடு, அதில் அவர்கள் அமர்வதற்கு அனுமதிப்போம்.
* அவர்களுக்கான வாகனம் நிறுத்தும் இடத்தை அவர்கள் பயன்படுத்த அனுமதிப்போம்.
* பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உங்கள் உதவியை நாடும்போது அவருக்கு உதவுங்கள்.
* கல்வி கற்பதில் மாற்றுத் திறனாளிகளுக்கும் சம உரிமை உண்டு. அவர்கள் கல்வி பயில்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். அவர்களுக்கு இடையூறு செய்யாதீர்கள்.
* அவர்களுடைய வயதுக்கு சமமான பிள்ளைகளுடன் இணைந்து கல்வி கற்க அனுமதியுங்கள்.
* மாற்றுத் திறனாளிகளுடைய குறைபாட்டின் அடிப்படையில் அவர்களை ஒதுக்காதீர்கள்.
* சமூகத் தடைகளின் அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதைத் தடுக்காதீர்கள்.
* பணியிடங்களில் அவர்களுக்கேற்ற பணிச்சூழலை உருவாக்க வேண்டும்.
* சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவும், சுதந்திரமாக வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

-க.கதிரவன்மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்