SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாய்களுக்கு ஸ்பெஷல் பார்லர்!

2018-11-27@ 12:13:49

“நாய், கிளி, பூனை, ஹாம்ஸ்டர்ன்னு செல்லப்பிராணிகள் நாம் விருப்பம் போல வளர்க்க ஆரம்பித்துவிட்டோம். அதில் எல்லாரும் விரும்பி வளர்ப்பது நாய் தான். நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் இன்றும் நம் காலைசுற்றி வலம் வரும் என்பதால் தான் எல்லாருடைய முதல் வோட் செல்லப்பிராணியான நாய்க்கு தான். அந்த செல்லப்பிராணியை அழகுபடுத்துவது நம்முடைய கடமை தானே. அதை தான் நான் செய்கிறேன்” என்கிறார் சென்னை, அண்ணாநகரை சேர்ந்த சித்ரா .‘‘நான் வேலைக்கு போகும் பெண் கிடையாது. அன்பான கணவன், ஆசையான பெண் குழந்தை அப்புறம் பாசமிக்க டெட்டி. டெட்டி எங்க வீட்டு செல்லப்பிள்ளை. (அவர் செல்லப்பிள்ளை என்று சொல்வது அவர்கள் வீட்டு செல்லப்பிராணிய தான்). இவங்கள சுத்தி தான் என் உலகம். டெட்டிக்கு இப்ப பதினொன்றரை வயசாகுது. நாலு மாசத்தில் இருந்து நான் டெட்டியை பார்லருக்கு கூட்டிக்கிட்டு போய் இருக்கேன்.

சென்னையில் இருக்கும் எல்லா பார்லருக்கும் நான் போய் இருக்கேன். எதிலும் எனக்கு திருப்தி இல்லை. ஒரு நாய் பார்லருக்கு வந்து சென்றதும் அந்த இடத்தை சுத்தம் செய்யமாட்டாங்க. அப்படியே செய்தாலும் அது சரியா இருக்காது. அதனாலேயே நான் டெட்டிக்கு தேவையான பிரஷ், டவல், ஷாம்பூ எல்லாம் எடுத்துக்கிட்டு போயிடுவேன். அப்பத்தான் எனக்கு ஒரு திருப்தி இருக்கும். அந்த சமயத்தில் தான், என்னைப் போல நிறைய பேர் செல்லப்பிராணிகள் வைத்து இருப்பாங்க. அவங்களும் இந்த பிரச்னையை சந்திச்சு இருப்பாங்க. நாம ஏன் அதை ஆரம்பிக்க கூடாதுன்னு தோணுச்சு. ஆனா அந்த சமயம் என் மகள் கல்லூரியில் படிச்சிட்டு இருந்தா. அவளை நான் பார்க்கிறதுக்கே நேரம் சரியா இருந்தது. எனக்கான கடமைகள்ன்னு இருக்கே. அதை நான் பூர்த்தி செய்யணும். அதன் பிறகு தான் நான் ஃப்ரீயா என்னோட வேலைய செய்ய முடியும். எல்லாரும் செட்டில் ஆகும் வரை காத்து இருந்தேன். இப்ப என் பொண்ணுக்கும் கல்யாணமாயிடுச்சு. இரண்டு பேரக் குழந்தைகள். இனிமேல் நாம ஃப்ரீ பேர்ட் தானே’’ என்று சொன்னவர் ஒன்றரை வருடத்துக்கு முன் செல்லப்பிராணிகளுக்கான பார்லரை துவங்கியுள்ளார்.

‘‘நாய் தானே அதுக்கு என்ன தெரியும்ன்னு நாம நினைப்பது தவறு. என்ன அதனால் பேச முடியாது ஆனா அதன் வெறுப்பை அல்லது அன்பை மிக சாதுர்யமாக வெளிப்படுத்தும். எல்லாவற்றையும் விட டெட்டிக்காக நான் சென்னை முழுக்க அலைஞ்சிருக்கேன். எனக்கு அவனுக்கு என்ன தேவைன்னு தெரியும். செல்லப்பிராணிகளை ஃபேஷனுக்காக வாங்குவதில்லை. குறைந்த பட்சம் 10 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை செலவு செய்து வாங்கும் போது அதை பராமரிக்க தயங்க மாட்டாங்க. அந்த பராமரிப்பை நாம அவங்க மனசு திருப்திக்கு செய்து தரணும். அது தான் என்னோட முக்கிய நோக்கமா இருந்தது. எல்லாவற்றையும் விட இந்த பார்லரை நடத்துறவங்க அந்த இடத்துக்கே வரமாட்டாங்க. அதனால அங்க எப்படி செயல்படுறாங்கன்னு இவங்களுக்கு தெரியாது. நான் அப்படி இருக்க கூடாதுன்னு நினைச்சேன். என் பார்லர் என் கண்பார்வையில் தான் செயல்படணும்ன்ணு நான் உறுதியா இருந்தேன். எல்லாவற்றையும் விட நான் செய்யும் வேலை என் டெட்டியை டிஸ்டர்ப் செய்யக்கூடாதுன்னு ரொம்பவே கவனமா இருந்தேன்’’ என்றவர், செல்லப்பிராணிகளுக்கான தன்னுடைய ஸ்பெஷல் பார்லர் திட்டங்களை பற்றி விவரித்தார்.

‘‘இவங்களுக்கான பார்லர் ரொம்பவே சிம்பிள் தான். ஒரு டேபிள், குளிக்க வைக்க ஷவர், அதற்கான ஷாம்பூ, சீப்பு, நெயில்கட்டர், முடிகளை வெட்ட கத்தரிக்கோல், குளிச்ச பின் காய வைக்க டிரையர் புளோயர் அவ்வளவு தான். என்ன இவங்க ஒரு நாய் குளிச்சிட்டு போன அடுத்த நிமிடம் அந்த இடத்தை முழுசா சுத்தம் செய்யணும். அப்பத்தான் அடுத்த நாய்க்கு குரூம் செய்யும் போது வசதியா இருக்கும். எல்லாவற்றையும் விட இவர்களை பராமரிக்க நல்ல ஆட்கள் தேவை. தெய்வார்தியமாக என்னிடம் வேலைக்கும் நான்கு பேரும் ரொம்பவே எனக்கு செட்டாயிட்டாங்க. இவங்க வேற வேற பார்லரில் வேலைப் பார்த்தவங்க. டெட்டியை நான் சென்னை முழுக்க பார்லருக்கு கூட்டிட்டுபோய் இருக்கேன். அதனால இவங்க எல்லாருமே டெட்டியை ஹேண்டில் செய்து இருக்காங்க.

இவங்க இங்க வேலைக்கு சேர்ந்ததும் நான் சொன்ன முதல் வார்த்தை, இவங்கள குழந்தை மாதிரி பொறுமையா கையாளணும் என்பது தான். என்ன அவங்க மூடுக்கு ஏற்ப நாம வளைந்து கொடுக்கணும். சில சமயம் அவங்க நல்ல மூடில் இருக்க மாட்டாங்க. அப்ப கொஞ்சம் அவங்கள விளையாட விட்டு பார்க்கலாம். அப்பத்தான் செட்டில் ஆவாங்க. அவங்கள டேபிள் மேல உட்கார வச்சுட்டா போதும், அப்படியே சைலன்டாயிடுவாங்க.இங்க குளிப்பாட்டுவோம், ஆயில் மசாஜ் செய்வோம், முடியை நல்லா சீவிவிடுவோம், கட் செய்வோம், காது மற்றும் கால் பாதங்களையும் சுத்தம் செய்வோம், பல் கூட விலக்கி விடுவோம். இது எல்லாமே குரூமிங் தான்.

சில நாய்களுக்கு முடி நிறைய இருக்கும். அவங்களுக்கு ஷாம்பு போட்டு குளிப்பாட்டுவது அவ்வளவு சுலபம் கிடையாது. குளிச்ச பின் நல்ல டிரையர் மற்றும் புளோயர் கொண்டு காய வைக்கணும். அப்படியே விட்டுட்டா முடியில் சிக்கல் ஏற்பட்டு அது சருமப் பிரச்னைக்கு வழிவகுக்கும். அதாவது, முடியில் சிக்கல் விழுந்தா, அது அப்படியே திக்கான முடிச்சு போலாயிடும். அதனால் சருமத்திற்கு காற்றோட்டம் இருக்காது. விளைவு சருமப் பிரச்னை. இதற்கு ஒரே தீர்வு அவங்களின் மொத்த முடியையும் ஷேவ் செய்வது தான். முடி 15 நாட்களில் வளர்ந்துவிடும் என்றாலும், இவங்க ரொம்பவே மனசு உடைஞ்சிடுவாங்க. அவங்களுக்கு ஒரே ஷேமாயிடும். அதனால முடி வளரும் வரை வெளியவே வரமாட்டாங்க. அதனால் அவங்களுக்கு தினமும் சீவிவிடுவது தான். தினமும் சீவும் போது, உடைந்து போன முடிகள் நீங்கி அங்க புதிய முடி வளரும். முடியும் அதிகம் கொட்டாது.

சில சமயம் நிறைய முடி இருக்கும் நாய்களுக்கு நிறைய பூச்சி வர வாய்ப்புள்ளது. அதிகமா இருந்தா, டாக்டரிடம் சென்று சரியான சிகிச்சை பெறவேண்டும்’’ என்றவர் நாம் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அவர்களும் செலுத்துவார்கள் என்றார்.‘‘அன்பு என்ற சொல் எல்லாருக்கும் பொதுவானது. அவங்க பெயரை சொல்லி கூப்பிட்டு தடவி கொடுத்தாலே போதும் நட்புறவு கொண்டாடுவாங்க. அப்படி இருந்தும் சில நாய்களுக்கு கால் பாதங்களையோ அல்லது காது மடல்களையோ தொட்டா பிடிக்காது. அப்படி இருக்கும் செல்லப்பிராணிகளை முதலில் அந்த இடத்தில் பழக வைப்போம். பிறகு தான் மற்ற வேலைகள் ஆரம்பிக்கும். நிறைய முடி இருக்கும் நாய்களுக்கு தான் அதிகம் முடிக் கொட்டும். தினமும் சீவி விட்டாலே போதும். முடி அதிகம் கொட்டாது. சில நாய்கள் வெளித் தோற்றத்தில் பார்க்க பிரமாண்டமா இருக்கும். ஆனா மனசுக்குள்ள ரொம்பவே மிருதுவா இருப்பாங்க. என் டெட்டிக்கு நான் சாப்பாடு  கொடுத்தா தான் சாப்பிடுவாங்க. என் கணவரோ இல்லை மகளோ அல்லது வீட்டில் வேலை செய்பவர்களோ யார் வைச்சாலும் சாப்பிடாது’’ என்றவர் நாய்களுக்கு மட்டும் இல்லை பூனைகளையும் இங்கு குஷிப்படுத்தலாம் என்கிற தகவலையும் வெளியிடுகிறார்.

‘‘பூனை ரொம்பவே சுகவாசி பிராணி. இஷ்டம் இருந்தா தான் வருவாங்க. இல்லைன்னா பிராண்டி விட்டுடுவாங்க. அதன் நகம் கத்தி மாதிரி இருக்கும். அதனால் அவங்க வந்ததும் முதல் வேலை நகத்தை வெட்டிடுவோம். அதன் பிறகு தான் மற்றவை எல்லாம். இவங்க நாய் போல சொல் பேச்சு கேட்கமாட்டாங்க. ஒரு இடத்தில் நிக்க மாட்டாங்க. குதிச்சு ஓடிடுவாங்க. அதனால ரொம்பவே ஜாக்கிரதையா ஹேண்டில் செய்யணும். இவங்களுக்கு சிகை அலங்காரம் நிறைய செய்யலாம். ஒரு சிலர் சிங்கம் போல முடி வெட்டசொல்வாங்க. சிலர் குட்டி பூனைக்கு இருப்பது போல கேட்பாங்க’’ என்ற சித்ரா இங்கு அழகு மட்டுமில்லை அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனிப்பதாக
தெரிவித்தார்.

‘‘எந்த ஒரு செல்லப்பிராணி இங்க வந்தாலும் முதல்ல அவங்க உடம்புல என்ன இருக்குன்னு தான் பார்ப்போம். சில சமயம் அதன் பல்லு முழுக்க கரையா இருக்கும். அப்படி இருந்தா அதற்கு பல் வலி இருக்குன்னு அர்த்தம். பொதுவா சோர்ந்து படுத்தாலோ, வாந்தி எடுத்தாலோ தான் உடல் நிலை சரி இல்லைன்ணு நினைக்கிறோம். அதையும் தாண்டி இவர்களுக்கு பிரச்னைகள் இருக்கும். நிறைய முடி இருக்கும் நாய்களுக்கு பூச்சி அதிகம் இருக்கும். ஏன் பொடுகு பிரச்னை கூட இருக்கும். அதற்கான சிறப்பு சிகிச்சை முறை உண்டு. உடல்ல பூச்சி இருந்தா அதற்கான ஊசி கால்நடை மருத்துவரிடம் இருக்கும். அதை போட்டுவிட்டு இங்க வந்தா நாங்க உடல் முழுக்க மருந்த தடவி பிறகு பூச்சி நீக்குவதற்கான ஷாம்புவை போட்டு குளிக்க வைப்போம்.

அதே போல் பொடுகு பிரச்னை இருந்தா அதற்கு தனி சிகிச்சை. இவங்க தொடர்ந்து வந்தா இந்த பிரச்னையும் இருக்காது. என்ன பூச்சியும் சரி, பொடுகும் சரி இரண்டுமே தொற்றிக் கொள்ளும். அதனால சிகிச்சை எடுத்த பின் பார்லரை நன்கு சுத்தம் செய்திடுவோம். அப்பத்தான் அது மற்ற நாய்கள் மேல் பரவாது’’ என்றவர் நாய் குட்டியை நானு மாசம் முதல் குரூமிங் செய்யவேண்டுமாம்.‘‘செல்லப்பிராணிகளின் பலனுக்கான தான் இதை ஆரம்பிச்சேன். இதன் மூலமா அதிக பணம் சம்பாதிக்கணும்ன்னு எண்ணம் இல்லை. டெட்டிக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கும் வரக்கூடாதுன்னு தான் துவங்கினேன். பிரான்சைசும் கொடுக்கும் எண்ணம் இல்லை. நாமளாவது பார்ட்டின்னு போறோம். இவங்க எங்க போவாங்க. ஒரு நாள் பார்லர் இவங்க வருவது அவங்களது மனசை ரிலாக்சாக்கும்’’ என்றார் சித்ரா .

- ப்ரியா
படங்கள் : சதீஷ்


டெட்டி, தி பிளைண்ட் டாக்!


இந்த டெட்டி, லசாப்சோ வகையை சேர்ந்த நாய். வயசு பதினொன்றரை வருடம். டெட்டி எட்டு மாதத்தில் போட்டுக் கொள்ள வேண்டிய ஒரு தடுப்பூசியை மாற்றி தவறாக போட்டுவிட்டார்கள். அதன் பாதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் டெட்டியை ரொம்பவே கஷ்டப்படுத்தி இருக்கிறது. சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு, உடல் ரீதியாகவும் பல பிரச்னைகளை டெட்டி சந்தித்தான். அவனை எப்படி எப்படியோ காப்பாற்றி அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் சித்ரா குடும்பத்தினர். தவறான ஊசி போட்டதால் டெட்டியின் பார்வை முழுதாக பாதிப்படைந்துள்ளது. அப்படி இருந்தும் சித்ரா குடும்பத்தினர் டெட்டியை மிகவும் கவனமாக பார்த்து வருகிறார்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் போல.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

 • 21-05-2019

  21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • russiabicycle

  ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

 • canadaplastic

  கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்