SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எய்ட்ஸ் இல்லா உலகம் படைப்போம்!

2018-11-26@ 14:49:39

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எச்.ஐ.வி. உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்னையாக தொடர்ந்து இருந்து வருகிறது. எய்ட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோயானது, மனித நோய்த்தடுப்பு குறைபாட்டு வைரஸால்(Human Immunodeficiency Virus- HIV) உண்டாகிறது. இந்த எச்.ஐ.வி. கிருமி நமது உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தை படிப்படியாக சிதைத்து, அழித்து இறுதியில் எய்ட்ஸ் நோயை உண்டாக்குகிறது.இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி சர்வதேச எய்ட்ஸ் தினம்  (World AIDS Day)அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகள் குறையும்போது, பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து இறுதியில் உயிரைப் பறிக்கும் நிலை ஏற்படுகிறது. தற்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும் எச்.ஐ.வி. உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்னையாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2015-ம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரப்படி உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.5 கோடி பேராகவும், எய்ட்ஸால் மரணமடைந்தவர்கள் 11 லட்சம் பேராகவும் இருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

எய்ட்ஸ் நோயின் முக்கிய அறிகுறிகள்


காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசை வலி, வாய் அல்லது பிறப்புறுப்புப் புண், மூட்டு வலி, தொடர் களைப்பு, திடீர் எடை இழப்பு, தொற்று எளிதில் பரவுதல், வயிற்றுப்போக்கு, இருமலும் மூச்சடைப்பும், நாக்கு அல்லது வாயில் நீடித்த வெண்புள்ளி அல்லது அசாதாரண புண், நனைக்கும் இரவு வியர்வை, தோல் அரிப்பு, மங்கலான பார்வை போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.

எச்.ஐ.வி. பரவும் வழிகள்

* எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் உறவு கொள்ளும்போது விந்து மற்றும் பெண்ணுறுப்புத் திரவத்தின் மூலம்தான் இந்த நோய்க்கிருமி பெரும்பாலும் பரவுகிறது.
* தொற்றுள்ள ரத்தத்தால் அசுத்தமடைந்த ஊசியையோ, சிரிஞ்சையோ மறுபடியும் பயன்படுத்துவதால் பரவுகிறது.
* தொற்றுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவர் உடலுக்கு ரத்தம் செலுத்தும்போது பரவுகிறது.
* HIV தொற்றுள்ள தாயின் ரத்தத்தின் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கும், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கும் பரவுகிறது.
* மூளை அல்லது முதுகுத்தண்டைச் சுற்றி இருக்கும் மூளைத்தண்டு வடத் திரவம், எலும்பு மூட்டுகளைச் சூழ்ந்திருக்கும் திரவம், கருவைச் சூழ்ந்து இருக்கும் பனிக்குட நீர் போன்ற திரவங்கள் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு பரவுகிறது.
* பச்சை அல்லது காது குத்தும்போது எச்.ஐ.வி. பரவும் ஆபத்து உள்ளது. எனவே பச்சை குத்தல், காது குத்தல், அக்குபஞ்சர் மற்றும் பல் மருத்துவத்தின்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். Antiretroviral Therapy (ARV)என்கிற, எச்.ஐ.வி. தொற்றுக்கு கொடுக்கப்படும் இந்த சிகிச்சையின் மூலம் அந்த கிருமியைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும்.

இந்தத் தொற்று உடையவர்களும், தொற்று ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களும் ஆரோக்கியமான, நீண்ட, பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும். சரியான நேரத்தில் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் இந்த வைரஸ் பெருகுவதைத் தடுக்க முடியும். அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நிறுவனங்களில் எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் நோயோடு வாழ்பவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியமான இந்த சிகிச்சை தற்போது இலவசமாகவே கிடைக்கிறது. எச்.ஐ.வி. தொற்று கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையளிப்பது வலியுறுத்தப்படுகிறது.

நோய்த்தடுப்பு முறை

எய்ட்ஸைத் தவிர்க்க ABC என்கிற ஓர் எளிய முறையைப் பின்பற்றலாம். அதாவது A-Abstain (தவிர்த்தல்), B-Be faithful (உண்மையாய் இருத்தல்), C-Condomise (காப்புறை பயன்படுத்துதல்) என்பதுதான் அந்த முறை. இதோடு பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்வது அவசியம்.

* எச்.ஐ.வி. தொற்று அல்லது எய்ட்ஸ் நோய் பற்றிய சரியான புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
* இந்த நோய் ஆபத்தைக் குறைக்க, உடலுறவில் ஈடுபடும்போது காப்புறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
* ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசி, சிரிஞ்சுகளை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இத்தொற்றைத் தடுக்கலாம்.
* ஆணுறுப்பின் நுனித்தோலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம்.
* அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் மூலம் மட்டுமே ரத்த மாற்றம் செய்ய வேண்டும்.
* பெற்றோரிடம் இருந்து குழந்தைக்குத் தொற்று பரவுவதைத் தடுக்க மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுவது அவசியம்.
* பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களுடைய இணையர்கள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற நபர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனை செய்வது நல்லது.

எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் ஏற்படும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இந்தத் தொற்று படிப்படியாக வளர்ந்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை முடக்கி இறுதியில் எய்ட்ஸ் நோயை உண்டாக்குகிறது. எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது, அவர்களைத் தொடுதல், கைகுலுக்குதல் போன்ற உடல் தொடர்புகளால் எச்.ஐ.வி. பரவுவதில்லை. இந்த வைரஸ் உடலுறவு அல்லது உடல் திரவங்கள் மூலமே பெரும்பாலும் பரவுகிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம். AIDS நோய் குறித்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு அரசின் இலவச உதவி எண் - 1097 ஐ தொலைபேசியில் அழைத்து உரிய உதவியைப் பெறலாம்.

- க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்