SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பின் தங்கியது ரகுராம் ராஜன் பேச்சு

2018-11-11@ 03:09:26

வாஷிங்டன்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டு பின்தங்கியது என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவின் பெர்க்லே பகுதியில் உள்ள கலிபோர்னியா பல்லைக்கழகத்தில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த 2012 முதல் 2016ம் ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டு புயல்கள் அடுத்தடுத்து தாக்கின. இது இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி உச்சத்துக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவின் வளர்ச்சி சரிந்தது.

ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி மிக வலுவானது. முன்பு இது மூன்றரை சதவீதமாக இருந்தது. தொழில் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நுழைகின்றனர். அவர்களுக்கு வேலை வேண்டும். இந்த சூழ்நிலையில் 7 சதவீத வளர்ச்சி போதாது. இது இன்னும் அதிகரிக்க வேண்டும். தற்போது இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு, கச்சா எண்ணெய் இறக்குமதியைதான் இந்தியா சார்ந்துள்ளது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். வங்கிகளின் வராக் கடன் அதிகரிக்கிறது. இதை முற்றிலும் சுத்தப்படுத்த வேண்டும். அப்போதுதான் வங்கி வளர்ச்சி பாதையில் செல்லும்.

வராக் கடன் பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள் இல்லாததால், அதை சுத்தம் செய்ய வங்கிகளுக்கு நீண்ட காலம் ஆகிறது. திவால் விதிமுறை மட்டும் வராக் கடன்களை சுத்தப்படுத்துவதற்கான வழிமுறையாக இருக்க முடியாது. இந்த சவால்களை எதிர்கொள்ள பல்நோக்கு அணுகுமுறை தேவை. இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7 சதவீதத்துக்கும் குறைந்தால், நாம் ஏதோ தவறு செய்கிறோம் என அர்த்தம். இந்தியாவில் மாதத்துக்கு 10 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். நாடு தற்போது 3 விதமான நெருக்கடிகளை சந்திக்கிறது. ஒன்று மோசமான கட்டமைப்பு. நல்ல கட்டமைப்புகள்தான் வளர்ச்சியை ஏற்படுத்தும். 2வது மின்சார துறையில் குறுகியகால இலக்குகள் அகற்றப்பட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தேவைப்படுவோருக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். 3வது வங்கிகளின் வராக் கடன்களை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்