SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டிய இடங்களில் மரக்கன்று நட்ட விவசாயிகள்

2018-11-11@ 02:15:50

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட இடத்தில் சாலையோரம் புதிய மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டனர். இதை தடுத்த அதிகாரிகளுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.10ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8வழி பசுமைச்சாலை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 277 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் இந்த சாலைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 8வழிச்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 இந்நிலையில், நேற்று மதியம் சேலம் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்கரை புதூர் அருகே, 8வழிச்சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகளை விவசாயிகள் நடஇருப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் அந்த பகுதியில்  போலீசாருடன் வருவாய்த்துறையினர் திரண்டனர். அப்போது பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கையில் பதாகைகளுடன் அந்த இடத்தை நோக்கி வந்தனர். அதில், ‘‘மரம் வெட்டி அரசே மரம் நடுகிறோம், விவசாயிகளை வாழவிடு, வேண்டாம் எங்களுக்கு 8வழிச்சாலை’’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.   

 இதையடுத்து அங்கிருந்த ஏடிஎஸ்பி சுரேஷ்குமார், டிஎஸ்பிக்கள்  சூரியமூர்த்தி, அண்ணாமலை மற்றும் தாசில்தார் வள்ளிதேவி ஆகியோர், மரம் நட ஆயத்தமான விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. மரக்கன்றுகளை வேறு இடத்தில் நடுமாறு அதிகாரிகள் கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு, கையோடு கொண்டு வந்த மரக்கன்றுகளை சாலையோரத்தில் நட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘8வழிச்சாலைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், டெண்டர் என்ற பெயரில் அதிகாரிகளின் துணையோடு சிலர், நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டினர். அதற்கு பதிலாக அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை நடவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், மரங்களை வெட்டியவர்களும், அரசு அதிகாரிகளும் அதனை கண்டு கொள்ளவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை நட்டோம்,’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்