SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ கல்லூரி சீட் வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: போலி நீதிபதி உட்பட இருவர் கைது

2018-11-11@ 01:50:48

சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த போலி நீதிபதி உட்பட இருவரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் பசுபதி (55). இவர், கடந்த 2015ம் ஆண்டு தனது மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க, நெமிலி கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் என்பவர் மூலம் முயற்சி செய்தார். அப்போது அவர், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ண மேனன் என்பவரிடம் உதவியாளராக பணிபுரியும், விழுப்புரம் மாவட்டம் கேதார் கிராமத்தை சேர்ந்த முருகவேல் மூலம் மருத்துவ படிப்பில் சேர்த்து விடலாம், என கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 2015 மே மாதம், ஓய்வு பெற்ற நீதிபதி  பாலகிருஷ்ண மேனனை விழுப்புரத்தில் சந்தித்து, தனது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.25 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் ரூ.25 லட்சத்தை பசுபதி செலுத்தியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி கல்லூரியில் சீட் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கடந்த 17ம் தேதி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., பொன்னியிடம், பசுபதி புகார் கொடுத்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் விருதுநகர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பாலகிருஷ்ண மேனன், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த அவரது உதவியாளர் முருகவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், பாலகிருஷ்ண மேனன் போலி நீதிபதி என தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் நேற்று திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அரசு ஊழியர் சிறையிலடைப்பு
கிண்டி மடுவன்கரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தரணிதரன் (29), ராயபுரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ராயபுரம் சோமுசெட்டி 5வது தெருவை சேர்ந்த கர்ணன் (55)  என்பவர், சென்னை மாநகராட்சி 50வது வார்டில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் ரூ.7.50 லட்சம் வாங்கினார். ஆனால், இதுவரை வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதேபோல், ராயபுரத்தை சேர்ந்த கண்ணியப்பன்  என்பவரின் உறவினரிடம் ரூ.3.10 லட்சம், காசிமேட்டை சேர்ந்த சிவராஜ் என்பவரிடம் ரூ.2.70 லட்சம், மகேஷ் என்பவரிடம் ₹2 லட்சம் என பலரிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தார்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்ணனை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இரிடியம் மோசடியில் சிக்கியவர்கள்
விழுப்புரம்: கைதான கேரள மாநிலத்தை சேர்ந்த பாலகிருஷ்ண மேனன், இரிடியம் மோசடியிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலோகத்தை உருமாற்றி, தாமிரத்தால் ஆன அண்டாவை பாலித்தீன் கவரில் சுற்றி, அதை இரிடியம் என மோசடி செய்து, நண்பர்களுடன் விற்க முயன்றபோது, ராஜபாளையம் போலீசார் பாலகிருஷ்ண மேனன் உட்பட 7 பேரை கைது செய்து கடந்த அக்டோபர் 17ம் தேதி சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதையறிந்த திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜபாளையம் சென்று, மோசடி வழக்கில் பாலகிருஷ்ண மேனனையும், அவரது உதவியாளர் என கூறிய வேல்முருகனை விழுப்புரத்திலும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்