SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூளை பாதிப்பால் உறுப்புகள் செயலிழக்கும் குழந்தைகளுக்கு தனித்துறை அமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2018-11-11@ 01:03:17

சென்னை: மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்த குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் தனித்துறையை அமைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ள தனது 10 வயது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுணர்களை நியமித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதித்த டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த சிறுவனைக் குணப்படுத்த முடியாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி கருணைக்கொலையும் செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிரிக்கர் பாயின்ட் தெரபி சிகிச்சை மூலம் தங்களால் சிறுவனை குணப்படுத்த முடியும் என்று அனிருதா மெடிக்கல் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனுக்கு டிரிக்கர் பாயின்ட் தெரபி மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் சிகிச்சை தரப்பட்டு (தசைநார் மற்றும் எலும்பு தூண்டுவித்தல் சிகிச்சை) தற்போது சிறுவன் குணமாகி வருவதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு சிறுவனின் நிலை குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்த நீதிபதி, மருத்துவர்களைப் பாராட்டினார். அப்போது, சிறுவனின் தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் கவிதா ராமேஷ்வர் நீதிபதியிடம், திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதேபோன்ற நோயினால் 14 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:தற்போது திருச்சி மாவட்டத்தில் மூளை பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்த குழந்தைகளின் புள்ளிவிபரம் மட்டும் தரப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அளவில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று தமிழக அரசிடமும், நாடு முழுவதும் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று மத்திய அரசிடமும் புள்ளிவிபரங்கள் இல்லை. எனவே, இந்த விஷயம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சர்வே எடுக்க வேண்டும்.

மூளை பாதிப்பால் குறைந்த அளவு பாதிக்கப்பட்ட குழந்தைகள், முழு அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான சர்வேயை மாநில அரசு எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க சிகிச்சை தர வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் பிஸியொதெரபி படிக்கும் மாணவர்களுக்கு டிரிக்கர் பாயின்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் தெரபியை பாடமாக சேர்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் மாநில அரசு கொண்டு செல்ல வேண்டும்.மூளை பாதிப்பால் உறுப்புகள் செயலிழந்து போயுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் தனித்துறையை உருவாக்க வேண்டும்.

தாலுகா அளவில் இந்த நோய்க்கான சிகிச்சை அளிப்பது குறித்து அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை தர நரம்பியல் துறையில் நிபுணர்கள் உள்ளதை மாநில அரசு உறுதி ெசய்ய வேண்டும்.இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாதம் ₹15 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். மாற்று முறை மருத்துவமான  ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதியில் இதற்கான சிகிச்சை உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். டிரிக்கர் பாயின்ட் மற்றும் மஸ்குலர் ஸ்கெலிட்டல் தெரபி சிகிச்சையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலை உள்ளதால்.

இந்திய மருத்துவக் கவுன்சில் இதற்கான டிப்ளமோ படிப்புகள் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். அல்லது வெளிநாடுகளிலிருந்து இந்த சிகிச்சை நிபுணர்களை அழைத்துவந்து இந்திய மாணவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் தருவதற்காக இந்திய மருத்துவக் கவுன்சிலை இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்கிறது. எனவே, இந்த கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வரும் 29ம் தேதி பதில் தர வேண்டும். இல்லையென்றால் மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும். வழக்கு வரும் 29ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்