SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகடலோர மாவட்டங்களில் கனமழை 48 மணி நேரத்தில் வருமா கஜா புயல்? மீனவர்களுக்கு எச்சரிக்கை

2018-11-11@ 00:25:49

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற 14ம் தேதி புயலாக மாறுகிறது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில்  பரவலாக மழை பெய்தும் வந்தது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஓட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது 1300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வருகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது 13ம் தேதி புயலாக வலுவடையும். தொடர்ந்து இது மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி நகரும்.

அதன் பிறகு இது 14ம் தேதி இரவில் வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 14ம் தேதி மாலையில் இருந்து வட கடலோர தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு  இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் மழை இருக்கும். புயல் உருவாகும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் 12ம் தேதி இரவுக்குள்(நாளைக்குள்) கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி இன்று(நேற்று) சற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கிறது. இது மாலத்தீவு, குமரிக்கடல், லட்சத்தீவு  பகுதிகளில் தற்போது நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, நாகர்கோவிலில் 2 செ.மீ, இரணியல், நாங்குநேரி, மணிமுத்தாறு, குளச்சல், பாபநாசம், குமரி, தக்கலை, மயிலாடி, ஆத்தூரில் தலா 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அடுத்த 48 மணி நேரத்தில் புயல் வலுவடையும் என்று சொல்லப்படுகிறது. கஜா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் தாக்குமா என்பது 13ம் ேததி தெரிந்து விடும்.

புதிய புயல் கஜா
புதிய புயலுக்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப் பட உள்ளது. இந்த புயலுக்கான பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்தா புயலின் பாதிப்பு இருக்கும்
* ஐரோப்பிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, 16ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் கடலூர் மாவட்டம் பரங்கிப்ேபட்டை அருகே புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதே நேரத்தில் அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, 15ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணிக்குள் வேதாரண்யம், நாகப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தேசிய பேரிடர் மேலாண்மை மையம் கணிப்பின்படி ‘வர்தா புயல்’ போன்று இந்த புயலின் பாதிப்பு இருக்கும் என்று கூறியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்