SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவை அதிகரிக்கும் நிலையில் அழியும் அபாயம்: சந்தனமரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்குமா தமிழக வனத்துறை

2018-11-11@ 00:09:23

சேலம்: மரத் தங்கம் எனப்படும் சந்தன மரம் இந்தியாவை தாயகமாகக் கொண்டது. தமிழக வனப்பகுதியில் காலம், காலமாக வளர்ந்து வருகிறது. மருந்தாகவும், நறுமணப் பொருளாகவும் பயன்படும் சந்தனத்தின் உலகத் தேவையில் சுமார் 70 சதவீதத்தை இந்தியாவே ஈடு செய்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் சந்தனம் விளைந்தாலும்,இது வறட்சியை தாங்கி விளையக் கூடிய மரம் என்பதால் இயல்பாகவே தென் பகுதிக்கு உட்பட்ட கர்நாடகம், தமிழகம், கேரள வனப்பகுதிகளில் அதிகளவில் வளர்கிறது. உலகில் ஆஸ்திரேலியா சந்தனம், இந்திய சந்தனம் என இரு வகைகள் இருந்தாலும், 8 சதவீதம் வரையிலும் எண்ணெய் தன்மை இருப்பதால் இந்திய சந்தன மரங்களுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது.

1980ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் வனப்பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டன. இந்த மரத்தை புனித மரமாகவே மலை வாழ் மக்களும், கிராம மக்களும் கருதி பாதுகாத்து வந்தனர். மேலும் இயற்கையாக விழுந்து கிடக்கும் மரங்களையே வனத்துறையினர் சேகரித்து திருப்பத்தூர், சேலம், சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள சந்தன மரக் கிடங்குகளில் பாதுகாத்து வருகின்றனர். சேவு எனப்படும் ஹார்ட் உட் பகுதி வளருவதற்கு, அதாவது சந்தன எண்ணெய் கிடைப்பதற்கு ஒரு மரத்துக்கு 20 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் சந்தன மரத்துக்கு அதிக விலை கிடைக்கிறது என்பதால் எந்த பகுதி பயன்படக் கூடியது என்பதை அறியாமல் இளம் வயது நாற்றுகள் வளரும் போதே வெட்டப்படுகிறது. இந்த வகையில் தமிழக காடுகளில் இருந்து பெரும்பான்மை சந்தன மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் அடுத்த சில ஆண்டுகளில் மாநிலத்தில் சந்தனக் கட்டைகளே இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது. உலகத்திற்கே சந்தனத்தை வழங்கி வந்த நாம், நம்முடைய தேவைக்காக ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.  இது குறித்து விவசாயிகள் மேலும் கூறுகையில்,‘‘தனியார் நிலங்களில் சந்தன மரங்கள் வளர்ப்பதை 2002ம் ஆண்டு முதல் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சந்தன மர வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் சில இடர்பாடுகளால் அந்தத்திட்டம் அதிக விவசாயிகளை  சென்று சேரவில்லை. சந்தனமரங்கள் அடுத்த தலைமுறைக்கு மட்டுமே பயன்படக்கூடிய நீண்டகால பயிர் என்பதால் விவசாயிகள் சந்தன மர வளர்ப்பில் ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பாற்றுவதும் பெரும் சவாலாக உள்ளது.

மேலும், சந்தன மரங்களை விவசாயிகள் தாமாகவே விற்பனை செய்ய முடியாது என்பது மிகப்பெரிய தடைக்கல்லாக கருதப்படுகிறது. விற்பனை விலையில் 20 சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். 80 சதவீதம் மட்டும் விவசாயிகளுக்கு சேரும். இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டால் தங்களால் சந்தன மரத்தை வளர்க்க முடியும் என்கின்றனர் விவசாயிகள். தேவை அதிகரித்து விட்ட நிலையில், உற்பத்தி மிகவும் குறைந்து விட்டதால்,சந்தன மரங்களின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் சந்தன மரத்தை தனியார் நிலங்களில் வளர்க்கும் திட்டத்தை வனத்துறையினர் ஊக்குவிக்க வேண்டும்,’’  என்றனர்.
   
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘1980ம் ஆண்டுகளில் ஒரு டன்னுக்கு 20 ஆயிரமாக இருந்த சந்தனக்கட்டை விலை, தற்போது, 1 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் சந்தனம் தேவைப்படுகிறது. இதனால் தனியார் நிலங்களில் சந்தன மரத்தின் வளர்ப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,’’என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-03-2019

  22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • NerthikkadanTriplecane

  பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்