SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக வனத்தில் கஞ்சா சாகுபடி அதிகரிப்பு போதை தடுப்பு பிரிவு போலீஸ் பணி முடக்கம்

2018-11-11@ 00:07:31

கோவை: தமிழக வனத்தில் கஞ்சா சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க  வேண்டிய போதை தடுப்பு போலீசாரின் பணி முடங்கி கிடக்கிறது. கோவை  மாவட்டத்தில் வாளையார், சிறுவாணி, பாரப்பட்டி, தோலம்பாளையம், ஆனைமலை வன  விலங்கு சரணாலயம், ஈரோடு மாவட்டத்தில் திம்பம், ஆசனூர் வனம், தேனி  மாவட்டத்தில் வருஷநாடு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம்  மாவட்டத்தில் ஏற்காடு, கொல்லிமலை மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்தில்  கஞ்சா சாகுபடி பரவலாக நடப்பது தெரியவந்துள்ளது. மாநில அளவில் வனத்தில் சுமார் 300  ஏக்கர் பரப்பில் கஞ்சா சாகுபடி நடக்கும் பகுதிகளாக அடையாளம்  காணப்பட்டுள்ளது.

வனத்தில்  கஞ்சா விதை தூவி விடும்  கும்பல், 9 மாதம் காத்திருந்து முதிர்ந்த கஞ்சா  செடியை அறுவடை செய்து  வியாபாரத்திற்கு அனுப்பி வைக்கிறது. ஒரு கஞ்சா செடி 3  முதல் 7 கிலோ எடை  வரை இருக்கும். செடிகளை வெட்டி காய வைத்து விதைகளை  நீக்கி, பாக்கெட்  செய்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள். சாகுபடி செய்யும்  இடத்தில் ஒரு கிலோ  கஞ்சா 3 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. கடத்தி வந்து  விற்பனை செய்யும்  இடத்தில் ஒரு கிலோ கஞ்சா 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம்  வரை விற்பனை  செய்யப்படுகிறது. இதுதவிர, ஆந்திரா விஜயவாடாவில் உள்ள பாடகிரி மலையில்  இருந்து தினமும் 10 முதல் 15 டன் கஞ்சா தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 7,354 கிலோ கஞ்சா  கடத்தி விற்றதாக 1,995 பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில், இதுவரை 6,550  கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்டவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர். 1 கிலோ கஞ்சா வைத்திருந்தால் 1 ஒரு ஆண்டு சிறை அல்லது 10  ஆயிரம் ரூபாய் அபராதம், 1 கிலோ முதல் 20 கிலோ வரை கஞ்சா வைத்திருந்தால் 10  ஆண்டு சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம், 20 கிலோவிற்கு அதிகமாக கஞ்சா  வைத்திருந்தால் 20 ஆண்டு சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க  சட்டத்தில் இடம் இருக்கிறது.  ஆனால், கஞ்சா கும்பல் மீது போலீஸ் பிடி இறுகுவதுஇல்லை. கஞ்சா வியாபாரிகள் மீது போலீசார் வழக்கு  பதிவுசெய்யும்போது பெரும்பாலும் 100 கிராம், 200 கிராம் என குறைந்த  அளவில் சிக்கியதாகவே கணக்கு காட்டுகின்றனர்.

கஞ்சா தடுப்பு  நடவடிக்கை மாநில அளவில் பெயரளவிற்கு மட்டுமே இருக்கிறது. கஞ்சா கும்பலிடம் இருந்து பெற வேண்டியதை பெற்றுக்கொண்டு, தமிழக போதை பொருள் தடுப்பு  பிரிவு  போலீசார் (என்.ஐ.பி) மற்றும் வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.  இதனால், ஆண்டுதோறும் கஞ்சா பரப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மாநில அளவில் 10  ஆயிரம் பேர் கஞ்சா வியாபாரம் செய்வதாக தெரிகிறது.  கல்லூரி மாணவர்கள், ஐ.டி  இளைஞர்கள், டிரைவர்கள் என பலதரப்பினர் வாடிக்கையாளராகி விட்டனர். இவர்கள் மூலமாக கஞ்சா வியாபாரம் ஜரூராக நடக்கிறது. கோவையில் கல்லூரி மாணவர்களையே வியாபாரிகளாக  மாற்றிவிட்ட கொடூரம் நடந்துள்ளது. கஞ்சா பொட்டலங்களை கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் சப்ளை செய்வது  அதிகமாகி விட்டது.

மாநில அளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கஞ்சா போதைக்கு  அடிமையாக இருக்கிறார்கள். தமிழகத்தில் பதுக்கப்படும் கஞ்சா மூட்டைகள்  கணிசமாக கேரள மாநிலத்திற்கும் கடத்தப்படுகிறது. இதுபற்றி போதை பொருள்  தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையின் தென்மேற்கு பருவக்காற்று, அதிகாலை பனி, தூறல் மழை ஆகியவை கஞ்சா சாகுபடிக்கு  ஏற்றதாக உள்ளது. சோலை வனத்தில் மரங்கள் குறைவாக  இருக்கும். இப்பகுதியில் புற்களை அகற்றிவிட்டு, கஞ்சா விதைகளை தூவி செடி  வளர்க்கிறார்கள். இரண்டு மாதம் நன்றாக கவனித்து வளர்த்தால், பிறகு கவனிப்பு  இல்லாவிட்டாலும் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். கஞ்சா தோட்டம்  இருப்பது வனத்துறையினருக்குதான் தெரியும். கூட்டு சோதனைக்கு வனத்துறையினரை  அழைத்தால் அவர்கள் வர மறுக்கிறார்கள்.

வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால்  வனத்துறை உதவியின்றி எங்களால் காட்டிற்குள் செல்ல முடியாது. கஞ்சா கும்பலை தேடி போனால், கேரள வனத்திற்குள் தப்பி  விடுவார்கள். இல்லாவிட்டால் நாட்டு வெடிகுண்டு வீசுவார்கள், நாட்டு துப்பாக்கி மூலம் துப்பாக்கி சூடு  நடத்துவார்கள். போதை பொருள் தடுப்பு பிரிவில் ஒரு எஸ்.பி, 12 டி.எஸ்.பி, 16  இன்ஸ்பெக்டர்கள், 17 எஸ்.ஐக்கள், 126 போலீசார் மட்டுமே உள்ளனர். இந்த  எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, வனத்துறையுடன் சேர்ந்து, கூட்டு ரெய்டு நடத்தினால் மட்டுமே கஞ்சா கும்பலை பிடிக்க முடியும். இவ்வாறு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

மாநில  அளவில், 2 கிலோவிற்கும் அதிகமாக கஞ்சா சிக்கினால் அந்த வழக்குகள் போதை  பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் (என்.ஐ.பி.) ஒப்படைக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.பி  போலீசாரிடம் இப்படி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்குகளில் குற்றவாளிகள் சிக்கவில்லை. கஞ்சா கும்பல் மூலமாக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக  கிடைப்பதால் ரெய்டு முடங்கிவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்