SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை விவசாய முறையை பயிற்றுவிப்பதுடன் அரசு பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

2018-11-11@ 00:07:29

வேலூர்: இயற்கை விவசாயத்தை தழைக்க செய்யும் வகையில் தரமான விதைகளையும், உரம் தயாரிப்பதையும் அரசு ஏற்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘சுழலும் ஏர் பின்னது உலகம்’, ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என விவசாயத்தின் மேன்மையை நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நாட்டிற்கு சோறு போடும் உன்னதமான செயலை தங்கள் வாழ்நாள் கடமையாக எண்ணி பொறுப்புடன் செயல்பட்டனர். நாளுக்குநாள் மாற்றம் அடையும் நவீன கலாச்சாரம் நம் உழவுத் தொழிலையும் அசைத்து பார்த்தது. 1939ம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு நடந்த 2ம் உலகப்போர் ஏற்கனவே சிதைந்து கிடந்த நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் உணவு உற்பத்தியை கைவிட்டு ராணுவத்திற்கு தேவையான குண்டுகள் தளவாடங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டன.

புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு அமோனியம், சல்பர் போன்ற ராசாயன வேதிப்பொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது. போர் முடிந்த நிலையில் இருப்பு வைக்கப்பட்ட அமோனியம், சல்பர் போன்ற ரசாயனங்களை அகற்ற முடியாமல் ஆதிக்க நாடுகள் திணறின. இதையடுத்து ரசாயன கலவையை அதிகளவில் உற்பத்தி செய்த அமெரிக்கா அவற்றை ஒரு இடத்தில் கொட்டி வைத்துவிட்டு அதனை அகற்றுவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது உரம் கொட்டி வைத்த இடத்தில் செடிகள் வேகமாக வளர்வதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதை வைத்து 1965ம் ஆண்டு காலக்கட்டத்தில் உலக நாடுகளின் பக்கம் தன் பார்வையை திருப்பியது. ரசாயனத்தை உரமாக மாற்றி தனக்கு அடிமைபட்டிருந்த நாடுகளில் விற்பனை செய்ய முடிவு செய்தது. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் விவசாயம் பெரும் சரிவை சந்தித்தது. வறட்சி காரணமாக உணவு உற்பத்தி முடங்கியது. நெருக்கடி நிலையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்து நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உலக நாடுகள் எங்கள் நாட்டின் விவசாய முறைகளை பின்பற்றினால் லாபம் அதிகரிக்கும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். மேலும், தங்கள் நாட்டில் தயாரிக்கும் உரங்களை பயன்படுத்தினால் விளைச்சல் அதிகரிக்கும் என்றும் கூறியது. ‘வீரிய விதை, அதிக விளைச்சல்’ என்கிற கோட்பாட்டையும் அப்போது முன் வைத்தது. இந்தியா சார்பில் எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை புரட்சியை நாட்டில் அறிமுகம் செய்து வைத்தார். இத்தகைய புதிய விவசாய வழிமுறைகள் அக்காலத்தின் தொடக்க நிலையில் ஓரளவிற்கு லாபம் கொடுத்தது. ஒவ்வொரு முறையும் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க புதிய ரசாயன உரங்கள் கண்டுபிடித்து இந்தியாவில் விற்பனைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

எல்லாம் ரசாயனம் என்கிற நிலை வந்த பிறகு பயிர்கள் விளைச்சல் வெகுவாக குறைந்தது. ஓரளவிற்கு கிடைக்கும் லாபத்தை தொடர்ந்து கிடைக்கச் செய்ய மேலும், மேலும், ரசாயன உரத்தை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழக விவசாயிகள் என்பது காலம் கடந்தே அரசு உணர்ந்தது. இதனால் நம் பாரம்பரிய அரிசி வகைகளான கிச்சலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, குள்ளகார், பூங்கார், இலுப்பைபூ சம்பா, தூயமல்லி, காட்டுயானம் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இதற்கு மாற்றாக ஒட்டுரக அரிசி இனங்கள் கண்டுபிடித்து சந்தைப்படுத்தப்பட்டது.
இன்றைக்கு நாம் உண்ணும் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் ரசாயன தன்மை மட்டுமே உள்ளது. சத்துக்கள் என்கிற பெயரில் நாம் ஒவ்வொரு நாளும் விஷத்தை உணவாக சாப்பிட்டு வருகிறோம் என்கிற பகீர் தகவல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இயற்கை விவசாயத்தின் மீதான நம்பிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சீரிய பணிகளால் தற்போது இயற்கை விவசாயம் மீண்டும் தழைத்து வளர்ந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இளைஞர்கள் தங்கள் வாழ்நாளின் லட்சியமாக விவசாயத்தை கொண்டு அதில் இறங்கியுள்ளனர். இந்தியாவில் ரசாயன உரங்களால் செய்யப்படும் விவசாய முறைகள் முற்றிலும் தவறான ஒன்று என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் பசுமை புரட்சி மூலமாக நம் முன்னோர்கள் காலம்காலமாக செய்து வந்த இயற்கை விவசாயம் மறைந்துவிட்டது. வெண்மை புரட்சி மூலமாக கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு தரமற்ற பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீலப்புரட்சி மூலமாக ஏரி, குளங்களில் உள்ள மீன்களுக்கு மாற்றாக இறால், பங்கஸ், அணை மீன் என்கிற புதிய வகையான இறைச்சி மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் வியாபார நோக்கத்திற்காக நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆடி, கார்த்திகை, தை என ஓவ்வொரு மாதத்தின் பருவ நிலைக்கு ஏற்ற வகையில் நெல், எண்ணெய் வித்துக்கள், தானிய வகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது, ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலமாக எந்த காலத்திலும் பயிர் செய்யலாம் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் நவீன விவசாயத்திற்கு மாறினர். ஆனால் அதனை பின்பற்றிய விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதற்கு மாறாக நஷ்டம் ஏற்பட்டது. உற்பத்தி அதிகரிப்பு, விளைச்சல் பாதிப்பு என இரண்டிற்கும் நஷ்டத்தை மட்டுமே விவசாயிகள் அறுவடை செய்தனர். தோட்டப்பயிர்கள் என்கிற பெயரில் கரும்பு, வாழை, போன்றவற்றை பணப் பயிர்கள் எனக்கூறி திட்டமிட்டு விவசாயம் செய்யப்பட்டது. பருத்தியில் தொடங்கிய ரசாயனம் கலந்த மரபணு மாற்றும் முறைகள் தற்போது நாம் நாள்தோறும் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்களில் அதிகளவில் கலந்து வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தவளை திசுவுடன் தயாரிக்கப்பட்ட தக்காளி, கத்திரிக்காய் என அனைத்திலும் கலப்பினங்கள் உள்ளன. இவற்றை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு புற்றுநோய் அபாயம் உள்ளது. தற்போதைய சூழலில் சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். மீதமுள்ளவர்கள் விவசாய கூலிகளாக உள்ளனர். விதை, உரம், விற்பனை என அனைத்தும் கலப்படம் என்று ஆனதால் நஷ்டம் ஏற்படுத்தும் தொழிலில் விவசாயம் முதலிடம் பிடித்துள்ளது.
இயற்கை விவசாயம் குறித்து தற்போது பொதுமக்களிடையே பெருமளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ரசாயன உரம் இல்லாத உணவு பொருட்களான அரிசி, காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் என அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என்பதை கண்டறிந்து வாங்கிச் சென்று பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தியவர்கள் தங்கள் உடல்நலன் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற காரணத்தால் இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் மத்தியில் இன்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனை வழிநடத்தி செல்ல பாரம்பரிய விதைகள், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரங்கள், அதனை சந்தைப்படுத்துவதற்கான இயற்கை அங்காடிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் உழவர் சந்தையை போல ஒவ்வொரு ஊராட்சிக்கும் இயற்கை சந்தை தொடங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை உற்பத்திக்காக கூட்டுறவு விதைப் பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் வழங்கி, இயற்கை விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகள் வருங்கால சந்ததிகள் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்யும். எனவே, அரசு விவசாயத்திற்கான திட்டங்களை வெறும் அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் நேரடியாக ஆய்வு செய்து விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என இயற்கை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டு பசு மூலமாக ஜீரோ  பட்ஜெட்டில் இயற்கை விவசாயம்:
இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்களை தவிர்க்கும் வகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாய விஞ்ஞானி தபாஷ் பாலேகர், ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை கண்டறிந்துள்ளார். இதில் பயிர்களுக்கு தேவையான உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். மீன் கழிவு மற்றும் நாட்டு வெல்லம், தென்னங் கள் அல்லது இளநீர் ஆகியவற்றை கொண்டு 21 நாட்களில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கலாம். அதேபோல் மாட்டின் கோமியம், பால், தயிர், நெய், மோர் ஆகியவற்றை கொண்டு தெளிப்பு மருந்துகள் தயாரிக்கலாம்.  இதனை தயாரிக்க வீட்டில் ஒரு நாட்டு பசு இருந்தால் போதும். இயற்கை முறையில் பயிர்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்பட்டு பொருட்செலவு இல்லாமல் விவசாயம் செய்து லாபம் பெறலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்