SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவர்களுக்கு ஆழ்கடலில் 720 கி.மீ தூரத்திற்கு தகவல் பரிமாற இயலும் கரைசேராத கலங்கரை விளக்க தகவல் பரிமாற்ற திட்டம்: நான்கு ஆண்டுகளாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

2018-11-11@ 00:07:27

தமிழக கடல் பகுதிகள்
* கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி முதல் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் வரை 1078 கி.மீ தூர நீண்ட நெடிய கடற்பரப்பு தமிழகத்தில் உள்ளது.
* தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், பல ஆயிரக்கணக்கான கட்டுமரங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறது.
* தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
* மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவு தூரம் அந்தந்த நாட்டின் கடல் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் கடலூர் பரங்கிப்பேட்டை லைட்ஹவுஸ்களில் ஆழ்கடலில் மீனவர்களுக்கு தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘நவ்டெக்ஸ்’ திட்டம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் அருகே கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய மத்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தையும், கலங்கரை விளக்கத் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்ததுடன் ‘நவ்டெக்ஸ்’ என்ற மீனவர்களுக்கு உதவுகின்ற தகவல் பரிமாற்ற திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

கடலில் தட்பவெப்பநிலை மாற்றங்கள், வானிலை எச்சரிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை குறித்த தகவல்களை நேரடியாக கப்பல்களுக்கு அச்சு வடிவில் தெரிவிக்கும் வகையில் 20.25 கோடி செலவில் ‘நவ்டெக்ஸ்’ என்ற தகவல் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்தியாவில் அமைக்கப்படும் 7 ஒலிபரப்பு நிலையங்களில் 2 நிலையங்கள் தமிழ்நாட்டில் அமையும். அவை கடலூர் பரங்கிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் அமையும். கட்டுப்பாட்டு மையம் புதுச்சேரியில் ஏற்படுத்தப்படும் என்றும் அப்போது அறிவித்தார். 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் சார்ந்த பணிகள் நடைபெற்ற போதிலும் ஆழ்கடலில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கின்ற மீனவர்களுக்கான தகவல் பரிமாற்றத்திற்கான முறைகள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

ஆழ்கடலில் மீனவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்ட இந்த திட்டம் உலக நாடுகள் முழுவதிலும் ஏற்கனவே (World-Wide Navigational Warning Service) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் குஜராத்தில் வேராவல், மகாராஷ்டிராவில் கொங்கண் கடல் பகுதியில் வெங்குர்லா பாயின்ட், தமிழகத்தில் முட்டம் பாயின்ட், பரங்கிப்பேட்டை, ஆந்திரா மாநிலத்தில் வாக்கல்புடி, ஒடிசாவில் பாலாசோர், அந்தமான் நிகோபர் தீவுகளில் கீற்றிங் பாயின்ட் ஆகிய இடங்களில் உள்ள கலங்கரை விளக்கங்களில் அமைக்க தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்தபகுதிகள் அனைத்தும் இணைந்து உலக அளவில் நவ் ஏரியா -8 (NAVAREA VIII) என்ற பகுதிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீனவர்கள் புயல், கடல் சீற்றம் போன்றவற்றில் சிக்கும்போது அவர்கள் தகவல் பரிமாறிக்கொள்ளவும், ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்களை புயல் வேளையில் எச்சரித்து கரை திரும்ப செய்யும் வகையிலும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கங்கள் வாயிலாக செயல்படுத்த திட்டமிடப்பட்டதுதான் ‘நேவிகேஷன்ஸ் டெலக்ஸ்- நவ்டெக்ஸ்’ திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட 7 லைட்ஹவுஸ்கள் வழியாக இந்திய கடல் பகுதி முழுவதும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இதற்காக ஆழ்கடலில் மீன்பிடிக்கின்ற மீனவர்களுக்கு ஒரு ‘மெசேஜ் ரிசீவர்’ கருவி வழங்கப்பட வேண்டும். இந்த கருவி வழங்கும் பணிகளை தமிழக அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான கருவிகளை மீனவர்களுக்கு வழங்க தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த கருவி வாயிலாக ஆங்கிலம் மட்டுமின்றி மாநில மொழிகளிலும் தகவல்களை அனுப்பி வைக்க இயலும். அதனை பிரிண்ட் எடுத்தும் படிக்க இயலும். பேஜர் வடிவில் சற்று பெரிதாக இந்த கருவி இடம்பெற்றிருக்கும். 4 மணி நேர இடைவெளியில் 10 நிமிடம் வீதம் தகவல் பரிமாற்றம் நடைபெறும். நாவ் டெக்ஸ் ரிசீவர் மட்டும் இருந்தால் கடலில் செல்கின்ற விசைப்படகுகள், கப்பல்கள் ஆகியவற்றுக்கு தகவல் சென்று சேரும். சர்வதேச அளவில் உள்ள தகவல்களும் பரிமாற்றம் செய்யப்படும்.சுனாமி, புயல், சூறாவளி, எல்லை தாண்டுதல், கப்பல் பாதைகளில் கடக்கும்போது விபத்துகளில் சிக்காமல் தவிர்த்தல் போன்ற பலவற்றுக்கு இந்த தகவல் பரிமாற்றம் உதவும். ஆழ்கடலில் உள்ள மீனவர்களை கப்பல்கள் வாயிலாகவும், ஹெலிகாப்டர்கள் வாயிலாகவும் சென்று தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது.

குமரி மாவட்டத்தில் முட்டம் லைட்ஹவுஸ் வாயிலாக தமிழகம் மட்டுமின்றி கேரள மாநில பகுதிகளுக்கும், பரங்கிப்பேட்டை லைட்ஹவுஸ் வழியாக ஆந்திரா மாநிலபகுதிகள் வரையிலும் தகவல் பரிமாற இயலும். குறிப்பாக கரையில் இருந்து 720 கி.மீ தூரத்திற்கு தகவல் தொடர்பு கொள்ள இயலும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருந்தால் தமிழகத்தில் உள்ள சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் பயன்பெற்றிருப்பர். அண்மையில் ஏற்பட்ட ‘ஓகி’ புயல் வேளையில் உயிர் இழப்புகள் நேர்ந்திருக்காது.  மேலும் அடுத்தடுத்து வந்த புயல், கடல் சீற்ற காலங்களில் மீனவர்களை கரை சேர்க்க மேற்கொள்ள முயற்சிகள் அனைத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் மிக குறைந்த செலவில் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்