SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கான்கிரீட் வீட்டையும் ‘குடிசை’ என்று கணக்கிடும் அதிகாரிகள் வெள்ளத்தில் வீடுகள் சேத இழப்பீடு தமிழகத்திற்கு 5 ஆயிரம், கேரளாவில் 4 லட்சம்: விதிமுறைகளை திருத்தி அமைக்க தமிழக அரசு முன்வருமா?

2018-11-11@ 00:07:21

நாகர்கோவில்: மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்து விழுந்தால் குடிசை சேதம் என்று 5 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்குகின்ற விதிமுறையை தமிழக அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் வீடுகள் சேதமடைவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஓகி புயல் காற்று புரட்டிப்போட்டது. இதில் மொத்தம் 7 ஆயிரத்து 330 வீடுகள் சேதமடைந்தன. அவ்வாறு வீடுகளை முழுமையாக இழந்து தவித்த மக்களுக்கு அரசால் 5 ஆயிரம் மட்டும் நிவாரணம் என்று வழங்கபட்டது.

அதுவும் பகுதியளவு சேதமடைந்திருந்தால் அவர்களுக்கு 4100 மட்டுமே நிவாரணம் ஆகும். ஆனால் இவை குடிசை வீடு என்று பொதுவாக கணக்கிட்டு வழங்கப்பட்டது. ஓட்டு வீடாக இருந்தாலும், கான்கிரீட் வீடாக இருந்தாலும் சேதமடையும் வீடுகள் எல்லாம் குடிசை வீடுகள் என்று விசித்திரமாக கணக்கிடும் வழக்கம் வருவாய்துறையில் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்பட்டபோது அம்மாநில அரசு முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு தலா 4 லட்சம் வரை நிவாரணம் வழங்கியுள்ளது. மலைச்சரிவுகளில் வசித்து வீடுகளையும், நிலத்தையும் சேர்த்து இழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது. பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்தின் அளவு அடிப்படையில் 65 ஆயிரம் முதல் 2.50 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படுகிறது.

அங்குவருவாய்துறை சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து சேதத்தை கணக்கிட்டு பின்னர் நிவாரணம் வழங்குகின்றனர்.
ஆனால் தமிழக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் என்று பலவகையிலும் செலவினங்கள் அதிகரித்துள்ள வேளையில் தமிழக அரசு வீடுகளை இழந்தோருக்கு நிவாரணமாக வழங்குகின்ற தொகையினை பல ஆண்டுகளாகவே அதிகரித்து வழங்க முன்வரவில்லை. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு வழங்குகின்ற தொகைக்கு ஏற்பக்கூட வீடுகளை இழந்ேதாருக்கு நிவாரணம் வழங்கப்படாத நடைமுறை அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை அரசு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன் கூறியதாவது:
தமிழகத்தில் பொதுவாக மழை, வெள்ளம் போன்ற காலங்களில் வீடுகள் சேதமடையும்போது அரசு மிக மிக குறைந்த அளவு தொகையை நிவாரணமாக வழங்குகிறது. ₹5 ஆயிரத்தைகொண்டு முழுமையாக வீடு இழந்த ஒருவர் என்ன செய்ய முடியும்? என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னர் குடிசை வீட்டை இழந்தவர்கள் அதனை சீர்செய்துகொள்ள இந்த ₹5 ஆயிரம் பயன்பட்டு வந்தது. ஆனால் இப்போது குடிசை வீடுக்கான தொகையைத்தான் கான்கிரீட் வீடுகள் சேதத்திற்கும், ஓட்டு வீடு சேதத்திற்கும் வழங்குகின்றனர்.  தமிழக அரசு வீடுகள் சேதமடையும் போது அதற்கான நிவாரணம் வழங்குவதில் உள்ள வழிமுறைகளையும், நிவாரண தொகையின் அளவையும் திருத்தி அமைத்து தக்க நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குமரியில் ‘ஓகி’சேதம் 7330 வீடுகள்
* அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 1489 வீடுகள் பகுதியளவும், 223 வீடுகள் முழுமையாகவும் என 1712 வீடுகள் சேதமடைந்திருந்தன.
* கல்குளம் தாலுகாவில் 2542 வீடுகள் பகுதியளவும், 304 வீடுகள் முழுமையாகவும் என்று 2846 வீடுகள் சேதமடைந்திருந்தன.
* விளவங்கோடு தாலுகாவில் 1160 வீடுகள் பகுதியளவும், 386 வீடுகள் முழுசேதமும் என்று 1546 வீடுகள் சேதம் அடைந்திருந்தன.
* தோவாளை தாலுகாவில் 1030 வீடுகள் பகுதியளவும், 196 வீடுகள் முழுவதும் என்று மொத்தம் 1226 வீடுகள் சேதமடைந்திருந்தன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

  • AssemblyChattisgarElection18

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புடன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்