SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் சேனல்

2018-11-11@ 00:06:57

‘உள்குத்து’ வேலையால் திணறுது தனிப்படை:
நெல்லை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, மகளிர் காவல் நிலையம், குற்றப்பிரிவு உட்பட 68 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் உளவுத் தகவல்களை அறிவதற்காக ஒரு தனிப்பிரிவு போலீஸ்காரர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களது போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடக்கும் கொலை, கொள்ளை, கூலிப்படையினர், சாதி, மத மோதல்கள், அரசியல் நிலவரம், போராட்டங்கள், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த முக்கிய கைதிகள் உள்ளிட்ட தகவல்களை எஸ்பிக்கு நேரடியாகவும், முன்பேயும் தெரிவிப்பது வழக்கம். தனிப்பிரிவு ஏட்டுக்களின் உளவு தகவல்களால் பல போலீஸ் ஸ்டேஷன்களில் பழிக்குப்பழி கொலைகள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை எஸ்பியிடம் சில சீனியர் தனிப்பிரிவு ஏட்டுக்கள் பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் சில வேண்டாத தனிப்பிரிவு ஏட்டுக்களை பற்றி சொந்த காரணத்திற்கு போட்டு கொடுத்தனர். இதனால் 10 தனிப்பிரிவு ஏட்டுக்கள் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டனர். இந்த காலி இடங்களுக்கு எஸ்பியிடம் போட்டுக் கொடுத்து பெயர் வாங்கிய சீனியர் தனிப்பிரிவு ஏட்டுக்கள் தங்களுக்கு வேண்டிய போலீஸ்காரர்களை சிபாரிசு செய்து பணியில் நியமித்துள்ளனர். அனுபவம் இல்லாத தனிப்பிரிவு ஏட்டுக்களால் உருப்படியான தகவல்கள் எஸ்பிக்கும், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கும் கிடைக்காமல் தடைபட்டுள்ளது. ஏட்டுகளின் உள் குத்து வேலையால் தனிப்பிரிவு திணறி வருவதாக போலீசாரே புலம்புகின்றனர்.


திருட்டு, கொள்ளை அதிகரிப்பு ரங்கம் காக்கிகள் கிடா வெட்டு:
மலைக்கோட்டை மாநகரில் 14 சட்டம், ஒழுங்கு, 6 குற்றப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. இதில் ரங்கம் குற்றப்பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர் செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை நடந்து வருகிறது. இதில் உச்சக்கட்டமாக பெண்களும் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அப்செட்டான காவல் நிலைய லேடி காக்கி, சகாக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரங்கம் எல்லைக்குட்பட்ட கருப்புசாமிக்கு கிடாவெட்டி பரிகார பூஜை நடத்தினால் குற்றங்களை குறைக்கலாம் என யோசனை தெரிவித்தனர்.

அதனுடன் புரட்டாசியில் பூஜை போடாமல் ஐப்பசியில் பூஜை போடலாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து கடந்த ஞாயிறன்று கருப்பு கோயிலில் லேடி காக்கி தலைமையில் ஏட்டு, ஜீப் டிரைவர் என போலீஸ் பட்டாளம் கிடா வெட்டி, பிரியாணி சமைத்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தடபுடலாக சாப்பிட்டுள்ளனர். இதில் பார்சலும் கட்டப்பட்டது. கிடா வெட்டு விருந்து வாசனை கமிஷனர் அலுவலகத்தை எட்டினால், ஏட்டு, ஜீப் டிரைவருக்கு ஒரு சில நாட்களில் கிடைக்க போகும் பதவி உயர்வுக்காக கிடா வெட்டியதாக கூறி சமாளித்துவிடலாம் என பிளானும் ரெடியாம்.

பாதிக்கு பாதி மாமூல் கேட்டு கடுப்பாக்கிய இன்ஸ்பெக்டர்:
குமரி மாவட்டத்தில் உள்ள இன்ஸ்.கள் சிலர் மாமூல் வசூலிப்பதில் தான் மிக குறியாக உள்ளனர். சிறு, சிறு பிரச்னைக்கு காவல் நிலையத்துக்கு சென்றால் கூட, அதை முடித்து விடாமல் 2, 3 நாட்கள் அலைக்கழித்து பின்னர் இரு தரப்பினரிடம் இருந்தும்  குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு சமாதானம் பேசி அனுப்புகிறார்கள். சமீபத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள ஆன்மிக தல காவல் நிலையத்துக்கு பண பிரச்னை தொடர்பான புகாரில் இரு தரப்பினர் சென்றுள்ளனர். இன்ஸ்., இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, 25 ஆயிரம் கொடுத்தால் பிரச்னையை தீர்த்து விடுகிறேன் என கூறி உள்ளார்.

மொத்த தொகையே 50 ஆயிரம் தான் வருது. இதில் 25 ஆயிரத்தை உங்களிடம் கொடுத்து விட்டு நான் என்ன செய்ய போகிறேன் என பணம் கொடுத்தவர் கடுப்பாகி, எதுவுமே பேசாமல் சென்று விட்டார். பின்னர் இன்ஸ், புரோக்கர் மூலம் அழைத்துபேசி 10 ஆயிரம் வாங்கிக் கொண்டு பிரச்னையை முடித்து கொடுக்கும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தினாராம். கலெக்‌ஷன், கமிஷன் என்பது இப்போது குமரி மாவட்டத்தில் உள்ள இன்ஸ்.,கள் சிலருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

டிராபிக்கை கண்டுக்காம  சைரனை போட்டு ஸ்டேஷனுக்கு போகும் இன்ஸ்:
வேலூர் என்றாலே அனைவருக்கும் முதலில் வெயில் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது அதனை பின்னுக்கு தள்ளும் விதமாக, போக்குவரத்து நெரிசல் பிரச்னை முந்தி நிற்கிறது. இதில் வேலூர்- ஆற்காடு சாலை, கிருபானந்த வாரியார் சாலை போன்ற இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடை வைப்பது. சாலையோரங்கள் முழுவதும் பார்க்கிங் என்று ஆக்கிரமிப்புகள் ஏராளம். நகருக்குள் சரக்கு வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் நுழைய அனுமதி இல்லை.

ஆனால் வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு, நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளை இறக்கி, ஏற்றுகிறார்கள். இதனை சரிசெய்ய வேண்டிய வேலூர் டிஎஸ்பியோ அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அவர்தான் அப்படி இருக்கிறார் என்றால், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கிருபானந்த வாரியார் சாலையிலேயே போக்குவரத்து காவல்நிலையம் கொண்ட போக்குவரத்து இன்ஸ்., நெரிசலுக்கு தீர்வு காணாமல், தனது காவல்நிலையத்திற்கு செல்லும்போது சைரனை போட்டுக்கொண்டு செல்கிறாராம். எஸ்பி தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

டாஸ்மாக் ரெய்டா...? ஆளை விடுங்க சாமீ...!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சி பகுதியில் சட்ட விரோதமாக வெட்ட வெளியில் டாஸ்மாக் மது விற்பனை நடப்பதாக ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு சமீபத்தில் தகவல் வந்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிரடி ரெய்டு நடத்தி, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிமுக ஊராட்சி செயலர் ஈஸ்வரன், மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரை போலீசார் கண்டுகொள்ளவில்லை. உடனே அவர், உள்ளூர் அமைச்சர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்க, அவர் மதுவிலக்கு போலீசுக்கு ெடலிபோன் செய்தார். அடுத்த சில நொடிகளில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மது பாட்டில்களும் மீண்டும் ஸ்பார்ட்டுக்கே திரும்பி வந்தது. அன்று முதல் சட்ட விரோத மது ரெய்டா... ஆளை விடுங்க சாமீ.... என ஈரோடு மதுவிலக்கு போலீசார் கதறுகின்றனர்.

என்னங்க ‘எப்ஐஆர்’ போட வச்சீட்டீங்களே...கைதியிடம் ெபண் இன்ஸ்., கனிவு:
மாங்கனி சிட்டியில கைதிகளை எல்லாம் போலீசார், ரொம்ப ஸ்மூத்தா ஹேன்டில் பண்றாங்களாம். இதில் கோர்ட்டுக்கே டிமிக்கி கொடுத்து ஆட்டம் காட்டிய கைதி ஒருவரிடம், பெண் இன்ஸ்பெக்டர்., காட்டிய கனிவு தான் இப்போது ஹாட் டாபிக். அன்னதானப்பட்டி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பிரபல ரவுடி கைதிக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. பரோலில் வந்த அந்த கைதி தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துக்கிட்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திடீரென கோர்ட்டில் சரணடைந்தவர், அங்கிருந்தும் மாயமாகிப் போனார்.

கோர்ட் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ேகார்ட்டில் சரணடைந்தார். அப்போது அங்கு வந்த விசாரணை அதிகாரியான பெண் இன்ஸ்., அதிரடியாக அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பார் என்று எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க... ஆனா, அந்த கைதிக்கு பக்கத்தில் வந்த இன்ஸ்., ‘‘என்னங்க நீங்க, எப்ஐஆர் போட வச்சீட்டிங்களே’ என்று கனிவோடு கேட்டது பக்கத்தில் இருந்த காக்கிகளை மட்டுமல்ல, பதட்டத்தில் இருந்த கைதியையும் கூச்சத்தில் நெளிய வைத்ததாம்.

சாராய வியாபாரிகளுக்கு குரல் கொடுக்கும் காக்கிகள்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கிழக்கு, மேற்கு, தாலுக்கா, பட்டீஸ்வரம், சுவாமிமலை என காவல் நிலையங்கள் உள்ளன. கும்பகோணம் நகரப்பகுதிகளிலும், சுற்றுப்பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக சாராயம் விற்பனை ஜரூராக நடக்கிறது. இதில் மேலக்காவிரி பகுதியில் பட்டபகலிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதால், இங்கு குடிக்கும் குடிமகன்களால் தினந்தோறும் அடிதடி தகராறு ஏற்படுகிறது. இதனை கும்பகோணம் போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். ஏனெனில் மாமூல் வீடு தேடி செல்வதால் கம்மென இருந்து வருகின்றனர். இதற்கிடையில் மது விலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி 5 ஆயிரம் லிட்டர் சாராயம், ஆயிரக்கணக்கான வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆனாலும் கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாராயம் விற்பனையை தடுக்காமல் போலீசார் கண்மூடி தியானத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் பொதுமக்களின் தொடர் புகாரின் பேரில் கண் துடைப்பிற்காக தாலுக்கா மற்றும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். ஆனாலும் புதிதாக பணியேற்ற இன்ஸ்பெக்டர்களுக்கு ெசாந்த காவல் நிலைய காக்கிகளே ஆதரவு தராமல் சாராய வியாபாரிகளுக்கு பக்கபலமாக இருப்பதால் சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தீபாவளிக்காக பல ஆயிரம் லிட்டர் சாராய பேரல்கள் கும்பகோணம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, கொசுறு தகவல்.

பழநி அடிவார கடை போட இரு பிரிவாக வசூல் பேரம்:
திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மிக பெருநகரான பழநி முருகன் கோயிலில் கார்த்திகை மாதம் துவங்கினாலே, தரிசனத்திற்கென ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிவார்கள். வெளியூர்களில் இருந்தெல்லாம் வந்து மலைக்கோயில் அடிவாரத்தில் 500க்கும் அதிக தற்காலிக கடைகளை, நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் போடுவார்கள். ஐயப்ப பக்தர்கள் சீசனை தொடர்ந்து, தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை என ஜூன் மாதம் வரை பக்தர்கள் கூட்டம் இருக்கும். இதை குறிவைத்து கடைக்காரர்கள் ஜூன் மாதம் வரை கடைகள் போட்டிருப்பர். இந்த கடைகள் போடுவதற்கான அனுமதியை வாய்மொழியாக ஆண்டுதோறும் வியாபாரிகள், இங்குள்ள அடிவாரம் போலீசாரை அணுகியே பெறுகின்றனர். கடந்த காலங்களில் இந்த வியாபாரிகளிடம் பெரும் தொகையை போலீசார் வசூலித்ததாக ஏற்கனவே புகார்கள் உள்ளன.

இம்முறை அடிவாரம் போலீசார் இரு பிரிவுகளாக பிரிந்து ‘வேட்டை’க்கு போயிருக்கின்றனர். இதனால், இன்னும் கடைகள் போடும் முன்பாகவே, இரு பிரிவினரும் சம்பந்தப்பட்ட வியாபாரிகளை நேரிலேயே அணுகி, ‘வேட்டை’யை துவக்கியிருக்கிறார்களாம். காவல்நிலையத்திற்கு வந்து ‘ஐயாவோட பர்மிஷன் வேண்டும்’ எனக் கேட்கும் வியாபாரிகளிடம், இருதரப்பும் பங்குத் தொகையை பேரம் பேசுகிறதாம். போலீசுக்கே கட்டி அழுதால், எப்படி லாபக்காசு பார்ப்பது என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

போலீஸ் ஆசியுடன் கஞ்சா விற்பனை:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்டது காந்திநகர். குற்ற செயல் கூடாரமாக இருப்பதால் காந்திநகர் பிரபலமாகவே இருந்து வருகிறது. பிரபலமான இந்த காந்திநகருக்கு, தேனி மற்றும் ஆந்திராவில் இருந்து வாரத்தில் ஒரு நாள் லாரிகளில் இரவு நேரத்தில் அதுவும் போலீஸ் பாதுகாப்புடன் காந்திநகருக்கு இறக்குமதி செய்யப்படுகிறதாம்....  பின்னர் இங்கிருந்து திருச்சி மத்திய மண்டலத்திற்கே கஞ்சா ஏற்றுமதியாகிறதாம்...கஞ்சா வாங்குபவர்கள் அடையாளம் தெரிவதற்காக கருப்புபேண்ட், ஊதா டி சர்ட் யூனிபாமாக விற்பனையாளர்கள் போட்டு இருப்பார்களாம்... இவர்கள் திருவெறும் பூர், நவல்பட்டு, துவாக்குடி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பஸ் நிறுத்தம், பொது மக்கள் கூடும் பகுதிகளில் நின்று கொண்டு அமோக மாக விற்று வருகின்றார்களாம்...

இது தவிர திருவெறும்பூர் வழியாக செல்லக்கூடிய ரயில்களிலும் இந்த யூனிபார்ம் நபர்கள் ஏறி ரயில் பயணிகளுக்கு பொட்டலம் போட்டு கஞ்சா விற்கிறார்களாம்... இதுதவிர அந்த பகுதியை சேர்ந்த என்ஐடி மற்றும் கல்லுாரி மாணவர்களும் அவ்வப் போது காந்திநகருக்கு வந்து அந்த பெண் டீலரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி செல்கிறார்களாம்.. அவ்வப்போது கஞ்சா டீலர், மாமூல் கொடுத்து கவனித்து விடுவதால் திருவெறும்பூர், நவல்பட்டு, துவாக்குடி ஸ்டேசன்களுக்குட் பட்ட போலீசாரும் இதை பெரிசாக கண்டு கொள்வதில்லையாம் என காந்திநகர் பகுதி மக்கள் பேசிக்கிறார்களாம்...


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nba

  டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

 • 18-06-2019

  18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • yoga

  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

 • octopus

  ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

 • brainfever

  பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்