SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்த்திகையை கலர்புல் ஆக்க அற்புதமாக தயாராகுது அகல் விளக்கு

2018-11-11@ 00:06:49

மானாமதுரை: மானாமதுரையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக இருந்தாலும் மண்பாண்ட தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ‘மண் புகழ்’ மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் மண்பாண்ட தொழில் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு தகுந்தாற்போல, பொம்மைகள் முதல் பானைகள் வரை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகர் சிலைகள், நவராத்திரிக்கு கொலுபொம்மைகள், கார்த்திகை திருவிழாற்காக அகல் விளக்குகள், பொங்கல் பண்டிகைக்கு மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மண்சட்டி, கலயம், பானை, மரக்கன்று வளர்க்க பூந்தொட்டிகளும் தயார் செய்கின்றனர்.

ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் தயார் செய்யப்படும் மண்பாண்ட பொருட்களை மதுரை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் மண்பாண்ட தொழில் முழுமையாக பாதிப்புக்குள்ளாகியது. இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வீட்டில் முடங்கியிருந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் அடிக்க துவங்கியுள்ளதையடுத்து, கார்த்திகை விளக்குகள் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.

திடீர் மழை, கண்மாயில் இருந்த கருவேல மரங்கள் ஏலம் விடப்பட்டு முள் அகற்றப்பட்டதாலும் தயாரிப்பு செலவு கூடியுள்ளது. மேலும் விளக்குகளை சூளையில் வைத்து சுடுவதற்கு தேவையான வைக்கோல் கிடைக்காததால் தயார் செய்த விளக்குகள் வீடுகளில் முடங்கியுள்ளது. வெளிமாவட்ட வியாபாரிகள் பலரும் ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், டிச. 2ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழாவிற்குள் தயார் செய்யப்பட்ட அனைத்து விளக்குகளும் விற்பனையாக வேண்டும் என்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வேறு வழியின்றி வைக்கோல் வாங்குவதற்காக திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சென்றுள்ளனர்.
இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட பொருட்களுக்கு தேவையான மண்ணை கண்மாயில் எடுப்பதில் ஏராளமான நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிராக்டர் மண்ணை 15 ஆயிரம் கொடுத்து வாங்குகிறோம். இதனால்  தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. தொடர்மழையால் கடந்த வாரம் வரை மண்ணை குழைப்பதற்கு வழியில்லாமலும், தயார் செய்யப்பட்ட அகல்விளக்குகளை காயவைக்க முடியாமலும் சிரமம் ஏற்பட்டது.  சூளையில் இட்டு சுடுவதற்கு வழியில்லாமல் தவிக்கிறோம். விளக்குகளை சுடுவதற்கு தேவையான வைக்கோல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து வைக்கோல் வாங்கி வர சிலர் சென்றுள்ளனர். இதனால், வேறுவழியின்றி விளக்குகளின் விலையும் இந்தாண்டு சற்று கூடுதலாகத்தான் இருக்கும்,’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

 • 2018wildfire_trumph

  கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்